எல்லை தாண்டிய மீன்பிடியை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும்

இந்திய இலங்கை கடற்றொழிலாளர்கள் இடையே தீர்வின்றி நீடித்துவரும் எல்லை தாண்டிய மீன்பிடியை கட்டுப்படுத்தவும் நிரந்தரமான தீர்வையும் காண தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலையீட்டினை வேண்டிநிற்பதாக தமிழ் தேசிய பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார்.
தமிழக முதலமைச்சரை நேற்று வியாழக்கிழமை காலை சந்தித்த போது தமிழக – ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு தமிழ் தேசிய பேரவை கையளித்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில்,
ஈழத் தமிழர்கள் தங்களின் தொப்புள்கொடி உறவுகளாக தமிழக மக்களை காலாதிகாலமாக நேசித்துவருகின்றார்கள் என்பதனை தாங்கள் அறிவீர்கள். கடந்த பல தசாப்பதங்களாக இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையில் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பான பிணக்குகள் நீடித்துவருவது கவலைக்குரியதும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட வேண்டியதுமான பிரச்சினையாகும்.
ஏனெனில் பாக்குநீரிணையின் இருபுறமும் இதில் சம்பந்தப்படுவதும் பாதிக்கப்படுவதும் தமிழ் மீனவர்களே, ஏலவே இலங்கை அரசினாலும் சிறீலங்கா கடற்படையாலும் கட்டமைக்கப்பட்ட ரீதியில் இனவழிப்புக்கு உள்ளாகிவருகின்ற ஈழத் தமிழ் கடற் தொழிலாளர்கள் தமிழக கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகளால் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மீண்டெழ முடியாத நிலைக்குள் தள்ளப்படுகின்றார்கள்.
இப்பிரச்சினையை சிறீலங்கா அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகின்றது. இவ்வாறே தமிழகத்தையும் ஈழத் தமிழர்களையும் நிரந்தர பகையாளிகளாக மாற்றும் முயற்சிகளும் தொடர்ந்தும் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. இப்பிரச்சினையையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களதும் இந்தியாவினதும் தமிழகத்தினதும் நலன்களுக்கு முரணான வெளிச்சக்திகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காலுன்றி பலமடைந்து வருகின்றார்கள்.
எனவே தீர்வின்றி நீடித்துவரும் எல்லை தாண்டிய மீன்பிடியை கட்டுப்படுத்தவும் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணவும் தங்களது தலையீட்டினை வேண்டிநிற்கின்றோம் – என்றுள்ளது.
![]()