இலங்கை

ஈழத் தமிழர் தேசம் பறிபோவதை தமிழகம் தடுத்து நிறுத்த வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலினுடனான சந்திப்பின் பின்னர் கஜேந்திரகுமார் தெரிவிப்பு 

இந்திய இலங்கை ஒப்பந்தத்திலே தமிழருக்கு தீர்வு என்ற விடயம் வலியுறுத்தியுள்ளதை நாங்கள் அனுபவிப்பதாக இருந்தால் இந்திய இலங்கை ஒப்பந்த பிரகாரம் இலங்கை அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு மாற்றினால் மட்டுமே தமிழர்களுக்கு வர வேண்டிய அதிகாரங்கள் வந்து சேரும். இல்லாவிட்டால் அது ஒரு வெறுமென மாயையாகவே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுட்டிக்காட்டினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸடாலினுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று சென்னையில் தமிழக முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இந்தச் சந்திப்புக்கு பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் 16 வருடங்களாக ஈழத் தமிழர்களுடைய தாயகம் பறிபோய் கொண்டிருக்கின்றது. வடகிழக்கிலே தமிழர்களின் அடையாளம் இல்லாமல் செய்யப்பட்டு திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பழமை வாய்ந்த சைவக் கோயில்கள் ஆலயங்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகளாக மாற்றி அமைக்கப்படுகிறது. எங்களுடைய நிலங்கள் பறிபோகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகிறது. சனத் தொகையின் விகிதாசாரம் திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. மக்களின் பொருளாதார வளம் நசுக்கப்பட்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் நிலையை இலங்கை அரசு உருவாக்குகிறது. தமிழ் மக்கள், எங்கள் மாநிலத்திலே எங்களை ஆள முடியாத, நாங்கள் எந்த விதமான முடிவும் எடுக்க முடியாத மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதன் காரணத்தினாலே இவை நடைபெறுகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்று எத்தனையோ தசாப்தங்கள் அனுபவத்தின் பிரகாரம் பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் தான் இந்தியா இனப்பிரச்சனையில் தலையிட்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கி தீர்வை வழங்க வேண்டும் என முயற்சித்தது. இலங்கை அரசு அந்த தீர்வுக்குரிய அம்சங்களை மிகக் கெட்டித்தனமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கியது.

இந்தியா தமிழ் மக்களுக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக அதிகாரத்தை கொண்டு வர வேண்டுமென நினைத்து,அரசியலமைப்பில் 13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 38 வருட வரலாறு என்னவென்றால் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டும் தமிழ் பகுதியை காப்பாற்ற முடியாத நிலையே காணப்படுகிறது.

அந்த நிலையில் நாங்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து கேட்டுக் கொண்டது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலே தமிழருக்கு தீர்வு என்ற விடயம் வலியுறுத்தியுள்ளதை நாங்கள் அனுபவிப்பதாக இருந்தால் இந்திய- இலங்கை ஒப்பந்த பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு மாற்றினால் மட்டுமே தமிழர்களுக்கு வர வேண்டிய அதிகாரங்கள் வந்து சேரும். இல்லாவிட்டால் அது ஒரு வெறுமென மாயையாகவே இருக்கும்.

இவ்வாறன நிலைமை நீடித்தால் ஈழத் தமிழர்களுடைய வடகிழக்கு என்ற தமிழர் தாயக நிலப்பரப்பை காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்படுத்தப்படும். இந்த கோரிக்கையை நாங்கள் விசேடமாக தமிழக முதலமைச்சரிடம் முன் வைத்துள்ளோம்.

இந்த சூழலில் ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,தமிழ் மக்களுடைய ஆணையை நேரடியாக பெற்றிருப்பதாக பொய்யை கூறிக்கொண்டு இப்போதைக்கு இருக்கக்கூடிய ஒற்றையாட்சி முறைமையை விட மிக மோசமான ஒரு அரசியலமைப்பைக் கொண்டு வந்து தமிழர்கள் மீது திணிப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. அவ்வகையான சூழலில் தான் அவசர அவசரமாக தமிழகத்திற்கு வந்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அவருடைய தலைமையிலே இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

அவருடைய பங்களிப்பும்,நிலைப்பாடும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதற்கும் தமிழர்களுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்துவதற்கும் நிச்சயமாக உதவும் என்று நம்புகிறோம். அந்த அடிப்படையில் இன்று சந்திப்பை மேற்கொண்டோம்.

புதிய தீர்வுத் திட்டம் ஒற்றையாட்சி அல்லாத சமஷ்டியாக அமைய வேண்டும். அதை நாங்கள் தெளிவாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் வலியுறுத்த வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு வந்தோம்.

இந்த சந்திப்பை தமிழகத்தில் நாங்கள் செய்ய உதவி செய்த திருமாவளனுக்கு நன்றி சொல்ல வேண்டும். எங்களை பொறுத்தவரையில் இதனை ஒரு திருப்புமுனையாக பார்க்கிறோம். தமிழகத்தினுடைய தலைவர்கள் அமைதியாக இருக்கிற ஒரு காரணத்தினால் அது ஈழத்து தமிழரிடையே இடைவெளி உருவாக்கப்பட்டதாக நிலைமை காட்டப்படுவதால் நாங்கள் உண்மையில் மிக மோசமாக பாதிப்படைந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் 70 மில்லியன் தமிழர்கள் இருந்தும் இந்த நிலைமையை அனுமதிக்க முடியாது. எங்களுக்கும் தமிழகத்திற்கும் கடந்த காலத்தில் இருந்த உறவு மிக இறுக்கமாக தொடர்ந்தும் கட்டாயம் பேணப்பட வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் அசைக்க முடியாத விருப்பமும் நம்பிக்கையுமாகும். அந்த முயற்சிக்கு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த குறுகிய காலத்துக்குள்ளே அந்த சந்திப்புகளை மேற்கொள்ள இருக்கிறோம். அதுவும் கணிசமான வெற்றியை அளிக்கும் என்று நம்புகிறோம் – என்றார்.

இந்த விஜயத்தில் தமிழ் தேசிய பேரவை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், பொன்னுத்துரை ஐங்கரநேசன், கனகரட்ணம் சுகாஷ், நடராஜர் காண்டீபன், சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இச்சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன்,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *