கூட்டணி பலம் வலிமையானால் அ.தி.மு.க வெற்றி பெறலாம் ?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் வேகமாக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க முதல் கட்ட தேர்தல் பரப்புரையை முடித்து அடுத்த கட்ட தேர்தல் வியூகத்துக்குத் தயராகி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணியும் முதற்கட்ட பரப்புரையை முடித்துவிட்டார். புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மக்களைத் தன்பக்கம் ஈர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க தேர்தல் பரப்புரையை இன்னமும் தொடங்கவில்லை என்றாலும் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கல் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி பரப்புரை செய்து வருகின்றது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் விஜய், அன்புமணி மூவரும் தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 2026 தேர்தலில் தி.மு.க வெற்றி பெறக்கூடாது என்பதே தங்களின் நோக்கம் என்று ஒவ்வொரு பரப்புரையிலும் பேசி வருகின்றனர்
இவர்களின் விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி தராமல் தி.மு.க அமைதியாக இருந்து தங்களின் நோக்கம் மக்கள் பணி செய்வதுதான் என்று செயற்பட்டு வருகிறது. எத்தனை விமர்சனைங்களை முன்வைத்தாலும் மக்கள் தங்கள் பக்கம் தான் இருகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார், தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்பவர்களிடம் மக்களுக்கான நல்ல திட்டங்கள் தொடர்பில் எந்தவிதமான திட்டமிடலும் இல்லை.
தி.மு.க அரசு சரியில்லை அவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பது மட்டுமே அவர்களின் பரப்புரையில் இருக்கிறது.
தி.மு.க ஆட்சி சரியில்லை இன்று குற்றம் சுமத்துபவர்களிடம் தாங்கள் என்ன மாதிரியான ஆட்சி தருவார்கள் என்ற வாக்குறுதி எதுவும் இல்லை, அண்மையில் நடிகர் விஜய் ஒரு கூட்டத்தில் பேசும் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விட்டுக்கு ஒரு, இரு சக்கர வாகனம் தருவோம் முடிந்தால் மகிழுந்தும் தருவோம் என்று கூறியிருந்தார். ஆனால், இது நடைமுறைச் சாத்தியமா? என்று அவர் சிந்திக்கவில்லை. புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, புதுச்சேரியில் நியாயவிலைக் கடை இல்லம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பனபற்றிப் பேசியிருந்தார். ஆனால், தற்போதைய புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி இங்கே எப்படி ஆட்சி நடத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் விஜய் தமிழ்நாட்டு அரசியலை மட்டும் பார்த்தால் போதும் என்று கூறியுள்ளார்.
டிசம்பர் 10ஆம் திகதி சென்னையில் நடை பெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, தேர்தலில் அ.தி.மு.க வெற்றி, தோல்வி இரண்டையும் மாறி மாறி சந்தித்து வந்துள்ளது. தி.மு.க.வும் தோல்விகளைச் சந்தித்துள்ளது. சக்கரம் மேலும் கீழும் ஏறி இறங்குவது போல அ.தி.மு.கவும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணரவேண்டும்.
கடந்த தேர்தலில் மொத்தம் 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான 42 சட்டப்பேரவைத் தொகுதிகளை அ.தி.மு.க இழந்தது. தற்போது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி சேர்ந்துள்ளதால் 210 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 252 வாக்குறுதிகள் அளித்தது. நீட் தேர்வு இரத்து, நூறு நாள் வேலைவாய்ப்பை அதிகரித்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஒவ்வூதியம் போன்ற பெரும்பாலான திட்டங்களை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் செயற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி மகளிருக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட வற்றை நிறுத்திவிட்டது. தற்போது அ.தி.மு.கவின் அழுத்தத்தாலும் தேர்தல் தோல்வி பயத்தாலும் கூடுதல் நபர்களுக்கு, மகளிர் உதவித்தொகை மடிக்கணினி என்பனவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அனைத்து அரசு துறைகளிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதனால், அமைச்சர்கள் மீது விரைவில் முறைகேடு வழக்கில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்து தி.மு.க வெற்றி பெறுகிறது. அதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தி.மு.க, (எஸ்ஐஆர்),எதிர்ப்புத் தெரிவிக்கிறது
அ.தி.மு.க யாருக்கும் அடிமை இல்லை. தி.மு.க தான் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அறிவாயத்தில் சிபிஐ சோதனை நடைபெற்ற நிலையில் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசியது. தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து விடாமல் கிடைக்க, சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமையும். அ.தி.மு.கவினர் தங்களது அரசியல் அனுபவத்தை வைத்து நம்பிக்கையுடன் பணிபுரிந்தால் எதிர்வரும் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்னு எடப்பாடி
பழனிச்சாமி பேசியுள்ளார்.
அ.தி.மு.கவில் இருந்த முக்கிய மான தலைவர்கள் எல்லோரையும் வெளியேற்றி விட்டு கடந்த கால வெற்றியைப் பெற முடியுமா? என்பதும் அ.தி.மு.க தொண்டர்களின் முணுமுணுப்பாக இருக்கிறது
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க பா.ஜ.க முயற்சி செய்யலாம்.
அது நடந்தால் வெற்றி பெற முடியாவிட்டாலும் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெறலாம், பலமான எதிர்க்கட்சியாகவும் பணியாற்றலாம்.
தி.மு.கவின் அரசியல் அனுபவமும், மக்களிடம் உள்ள நன்மதிப்பும் வெற்றியைத் தரும் என்றாலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை
எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது, அண்மையில் ஒன்றிய அரசின் உட்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கூட்டத்தில் பேசும்போது பிகாரில் வெற்றி பெற்றது போல தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடியாக டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு எந்த “ஷா” வர நினைத்தாலும் தி.மு.கவினர் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க தமிழ்நாடு தலை குனியாது – என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரையைத் தற்போது தொடங்கியுள்ளது. இந்த பரப்புரையின் மூலம் மக்களிடம் நெருக்கம் அதிகம் ஏற்படும் என்பதால், தி.மு.க அதிகமான தொகுதிகளில் பெற்றி பெற வாய்ப்பும் இருக்கிறது.
![]()