இலங்கை

இடம்பெற்ற 1241 சரிவுகளில் 322 மண்சரிவுகளே உயிர்ப் பலி எடுத்தது

டித்வா சூறாவளி காலத்தில் நாட்டில் இடம்பெற்றுள்ள 1241 மண்சரிவுகளில் 322 மண்சரிவுகள் உயிரிழப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தேசிய கட்டிட அகழ்வாராச்சி நிறுவனத்தின் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்மதிப் படங்களை அடிப்படையாகக்கொண்ட மண்சரிவுகள் இடம்பெற்ற பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி குறிப்பிட்ட காலப்பகுதியில் மொத்தமாக 1241 மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகமானவை கண்டிமற்றும் பதுளை மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளன.

இந்த தகவல்களுக்கமைய மத்திய மாகாணத்தில் 744 மண்சரிவுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் கண்டி மாவட்டத்தில் 363 மண்சரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 162 மண்சரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 219 மண்சரிவுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த மாகாணத்தில் மொத்தமாக இடம்பெற்ற மண்சரிவுகளில் 189 மண்சரிவுகள் உயிர் சேதங்கள், சொத்து சேதங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தும் வகையிலானவை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் 81 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 38 மண்சரிவுகள் கட்டடங்கள், சொத்துக்கள் மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் 70 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 35 மண்சரிவுகள் உயிரிழப்புகள், சொத்து மற்றும் கட்டிட சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் 16 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 6 மண்சரிவுகள் கட்டிடங்கள், சொத்துக்கள் மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளன.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 312 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 50 மண்சரிவுகள் சொத்துக்கள், கட்டிட சேதங்கள் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் மொனராகலை மாவடடத்தில் 9 மண்சரிவகள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 3 மண்சரிவுகள் சொத்து சேதங்களை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் ஒரு மண்சரிவு மாத்திரம் பதிவாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *