இலங்கை

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சினைகள் மூலம் எமது உறவுகளுக்கான நீதி கேட்கும் விடயம் மழுங்கடிப்பு

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சினைகள் வருகின்றன. அப்பிரச்சினைகளை வைத்து எமது உறவுகளுக்கான நீதி கேட்கும் விடயம் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மட்டு.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவி சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். ஆனால் நாங்கள் 17 வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி சர்வதேசத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதுவரைக்கும் எமக்கு நீதி மறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. தற்பாதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் அனைவராலும் போற்றப்பட்டாலும் எமது பாதிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான ஒரு நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இயலாத அரசாங்கமாகவே இருக்கின்றது. இவர்களும் ஒரு இனவாத்துடனேயே செயற்பட்டு வருகின்றனர்.

இந்த அரசும் கடந்த காலங்களில் எக்காரணத்திற்காகவும் நாங்கள் இலங்கை இராணுவத்தை விசாரணைக்குட்படுத்த மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவே நாங்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையை நாடி நிற்கின்றோம்.

தற்போது செம்மணி போன்ற இடங்களில் எமது உறவுகள் புதைக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் அங்கு அமைக்கப்பட்ட தூபியும் இரண்டாவது தடவையாகவும் உடைக்கப்பட்டுள்ளது. இந்த அராங்கம் பற்றி அனைவரும் புகழாரம் சொல்லும் நேரத்திலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான விசாரணைகளும், உயிர் ஆபத்துகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. பல இடங்களில் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றுக்கும் சரியான நீதி விசாரணை இல்லை.

தற்போது வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் இருக்கின்றன. தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு அன்றாட உழைப்பின்றி நிர்க்கதியாக இருக்கின்ற குடும்பங்களும் உண்டு. இவர்கள் இருசாராரையும் ஒரே நிலையில் இந்த அரசு பார்க்கின்றது. அவ்வாறில்லாமல் இவர்களுக்கான ஒரு விசேட கரிசனை எடுக்க வேண்டும். அதே போன்று சர்வதேசத்தின் ஊடாக நாங்கள் இந்த விடயங்களை பல முறை தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

சர்வதேச நிபுணர் குழுவொன்றின் கண்காணிப்புடன் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வு காணப்பட வேண்டும். அந்த எண்ணம் இல்லாத நிலையிலேயே இந்த அரசும் செயற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சினைகள் வருகின்றன. அப்பிரச்சினைகளை வைத்து எமது உறவுகளுக்கான நீதி கேட்கும் விடயம் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது. எமது உறவுகளுக்கான தீர்வு வேண்டும். அது சர்வதேசத்தினூடாவே வேண்டும் என்பதைத் தான் நாங்கள் எங்கள் ஒவ்வொரு போராட்டம் ஊடகவும், ஊடக சந்திப்புகள் ஊடாகவும் வெளிப்படுத்தி வருகின்றோம்.ஆனால் இதில் எவருக்கும் கரிசனை இல்லை. சர்வதேசமும் இவர்களுக்குக் கால அவகாசத்தைக் கொடுக்கின்றது. இது வரை எமது தாய்மார் 350 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள். இப்படியே காலங்கள் சென்றுகொண்டிருக்கின்றதே தவிர பொறுப்புக் கூறல், மீள்நிகழாமை என்ற விடயங்களை இந்த அரசாங்கம் மாத்திரம் அல்ல எந்த அரசாங்கமும் இதுவரை எந்த இடத்திலும் வலியுறுத்துவதாக இல்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *