85,000 தொன்னுக்கும் மேல் குவியும் ‘டித்வா’ கழிவுகள்

டித்வா சூறாவளிக்குப் பிந்தைய மீட்புத் தேவைகளின் அளவை மதிப்பிடும் வகையில் ஆரம்பக் கழிவு மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் கழிவு மதிப்பீடுகள் போக்குவரத்து வழிகளை மீண்டும் திறக்கவும், அணுகலை மீட்டெடுக்கவும், மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டவும் உதவுவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப மதிப்பீடுகளின்படி, டிட்வா சூறாவளியால் 25,000 தொன்களுக்கும் அதிகமான கட்டுமானமல்லாத கழிவுகளும் 60,000 கன மீற்றருக்கும் அதிகமான கட்டுமானத் தொடர்பான கழிவுகளும் உருவாகியுள்ளன.
கள ஆய்வுகள் முன்னேறும்போதும், அணுகக்கூடிய பகுதிகள் அதிகரிக்கும்போதும் இந்தக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானக் கழிவுகளின் அளவு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் அறிவிக்கப்பட்ட முழுமையாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கையிலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது.
வழக்கமான ஒற்றை மாடி வீடுகளுக்கான (750–1,000 சதுர அடி) நிலையான அனுமானங்களைப் பயன்படுத்தி, முழுமையாகச் சேதமடைந்த கட்டமைப்புகளுக்கு 80 கன மீற்றரும் பகுதியளவில் சேதமடைந்த கட்டமைப்புகளுக்கு 10 கன மீற்றரும் எனக் கழிவுகளின் அளவு மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கழிவுகளில் ஒரு பகுதிக்கு மட்டுமே, அதாவது பெரும்பாலான மாவட்டங்களில் பொதுவாக 10 வீதமும், கொழும்பு போன்ற அடர்த்தியான பகுதிகளில் 60 வீதமும், வெளிப்புற அகற்றல் ஆதரவு தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கழிவுகளை அகற்றுவதற்கான செலவுகளை மதிப்பிடுவதற்கும், இலக்கு வைக்கப்பட்ட கழிவு முகாமைத்துவத் தலையீடுகளைத் திட்டமிடுவதற்கும் இந்த மதிப்பீடு அடிப்படையாக அமைகிறது.
அதிக மக்கள் அடர்த்தியுள்ள குடியிருப்புகள் காரணமாக கொழும்பு அதிகபட்ச கழிவு சுமையை எதிர்கொள்கிறது.
மக்கள் தொகை குறைவாக உள்ள மாவட்டங்களான பதுளை மற்றும் புத்தளம் ஆகியனவும் கணிசமான அளவு கழிவுகளைக் கொண்டுள்ளன. மேலும், ஆபத்தான பொருட்கள், வாகனங்கள் மற்றும் தாவரங்கள் (மரங்கள் போன்றவை) இதில் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()