இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராகப் போராடியவர் அந்த டிப்பர் மோதி உயிரிழப்பு

கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் நேற்று புதன்கிழமை (10) மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றால் மோதப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 35 வயதுடைய திருவையாறு பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் வில்சன் வீதி மொட்டை பாலத்துக்கு அருகில் வீதியின் ஓரமாக வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மணலுடன் வந்த ஒரு டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி மோட்டார் சைக்கிளிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடியுள்ளார்.

இதனையடுத்து வேகமாக வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில், அவர் டிப்பரின் பின்பக்கச் சில்லுக்குள் சிக்குண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற நிலையில் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்,திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவித்தவர் எனவும் அத்தோடு 119க்கும் தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இச்சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட கொலையாகவே இருக்கலாம் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *