இலங்கை

நீர்த்தேக்கங்களை முறையற்று திறந்ததால் மக்கள் அநியாயமா நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை முறையாக விடுவிக்க நீர்ப்பாசன அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் நீரில் மூழ்கி உயிரிழக்க வேண்டி ஏற்பட்டிருக்காது எனவே நீர்ப்பாசன அமைச்சர் பதவி விலகவேண்டும். அவரின் இந்த தவறுக்கு நிச்சயமாக அவருக்கு நாம் ஜம்பர் அணிவிப்போம் என புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க சூளுரைத்தார்

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் பேசுகையில்,

இயற்கை அனர்த்தத்தினால் பதுளை மாவட்டத்தில் வெள்ளையர்கள் அமைத்த பல பாலங்கள் சேதமடைந்துள்ளன.நுவரெலியா பதுளை பிரதான வீதியை திறக்க முடியாமலுள்ளது.ரயில் சேவைகள் 6 மாதங்களுக்காவது ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இதனை விளையாட்டாக யாரும் கருதக்கூடாது. அங்கு ஏற்பட்ட மண்சரிவுக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

அதேபோன்று 6 மாவட்டங்களில் இருந்து மக்கள் சிகிச்சைக்கு வரும் மஹியங்கனை பிரதான வைத்தியசாலை முற்றாக சேதமடைந்துள்ளது.அதேபோன்று மஹியங்கனை நீதிமன்றம், பொலிஸ் நிலையம் விகாரை என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இந்த பொறுப்பில் இருந்து யாருக்கும் தப்பிக்க முடியாது.

மகாவலி திட்டம் அமைத்து 46 வருடங்கள் ஆகின்றன. இவ்வாறான பாதிப்பு ஏற்படவில்லை.ரன்தெனிகல நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை முறையாக விடுவித்திருந்தால் இந்த அழிவு மஹியங்கனைக்கு ஏற்பட்டிருக்காது. நீர்ப்பாசன அமைச்சர் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளார். அவர் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறியுள்ளதால் அவர் பதவி விலகவேண்டும்.

பதுளை மாவட்டத்தை ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து மீளக் கட்டியெழுப்புவது என்பது இலகுவான விடயமல்ல.அங்குள்ள விவசாய நிலங்களில் பாரியளவில் மண் நிறைந்துள்ளது. அதனை மீள அகற்றி அங்கு விவசாயம் செய்வது சாத்தியமில்லை. அதனால் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்துதான் அரிசி இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படும். அதேபோன்று வெங்காய பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளன. ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களை விடவும் பாரதூரமானது.

ஜே.ஆரின் காலத்தில் ஜூலைக் கலவரம் ஏற்பட்டது. புலிகளும் ஜேவிபியும் இணைந்து பிரேமதாசவின் அரசாங்கத்தை இல்லாமலாக்கினர் . சந்திரிக்காவின் காலத்தில் சுனாமி வந்தது, மஹிந்தவுக்கு யுத்தம், மைத்திரிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கோத்தபாயவுக்கு கொரோனா ,தற்போது அநுரகுமாரவுக்கு வெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு எமது நாட்டு தலைவர்களுக்கு வரிசையாக ஏதாவது ஒரு அழிவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்பில் இருந்து நாட்டை மீட்க நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கத்துக்கு என்ன நடக்கும் எனத் தெரியாது.

எவ்வாறு இருந்தாலும் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள்,சொத்து அழிவுகளுக்கு காரணமான நீர்ப்பாசன அமைச்சருக்கு நாம் நிச்சயமாக ஜம்பர் அணிவிப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *