அவரவர் எச்சத்தால் காணப்படும்!…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

கவிதையின் அழகை கவித்துவத்திலே
கவிநயம் அறிவர் கவிஞர் பெருமக்கள்
கவிஞன் மலையையும் பாடிமகிழ்வான்
மங்கையையும் பாட்டில் வடித்திடுவான்
மூளையில் சுளுக்கு முற்றாய்ப் போனால்
வேளையும் பொழுதையும் வேறென்றிடுவர்
பாளையில் சுரக்கும் பதனீரும் கள்ளாம்
மூளைமழுங்கிடில் முழுவதும் தப்பாகிடும்
இறவனைப் பாடிடுவதே ஏற்றமென்றில்லை
குறையாய் பார்ப்போர் குவலயத்தில் உளரே
தாசியின் மனது ஆலயத்தில் அவனிடம் கூட
கூசிடும்படி பக்தன் தாசியை நினைப்பதோ
மஞ்சள் காமால் கண்ணில் இருந்தால் அது
கொஞ்சமும் குற்றம் இல்லை என்பதறிவீர்
மிஞ்சிடும் வகையில் மிகையாய் காட்டிடும்
வஞ்சகம் வாக்கில் வளர்ப்பின் எச்சமாகும்
கவியில் சிறந்தவனை கற்றோர் உலகறியும்
புவிவாழ் மாந்தர் அவனை போற்றிப் புகழ்வர்
செப்பென்பன் கலசமென்பன் கவியில் வரும்
தப்பென சொல்லி அவன் தரம் தாழ்த்துவரோ
கம்பன் சொன்னால் கவியென்று உரைப்பார்
வம்பன் என்று சொல்லார் வாய் சுளுக்கிவிடும்
தரத்துடன் வாழ்வது கற்றகல்விக்கு அழகாம்
மரமாய் வாழ்வோர் மாந்தரில் கடையென்பரே

![]()