மாகாணசபைத் தேர்தலை நடத்தும் அவசர சட்ட மூலத்திற்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அவசர சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தால், அதற்கு எதிர்க்கட்சிகள் பூரண ஆதரவை வழங்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான நிதி துக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இந்த அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் தற்போது பல்வேறு காரணங்களை தெரிவித்துக்கொண்டு, தேர்தலை பிற்போட்டு வருகிறது.அரசாங்கம் உண்மையில் தேர்தலை நடத்துவதாக இருந்தால், அது தொடர்பில் தெரிவுக்குழு அமைக்கவோ அல்லது வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அரசாங்கம் அவசர சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து, மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால், எதிர்க்கட்சியினர் அனைவரும் அதற்கு பூரண ஆதரவை வழக்குவதற்கு தயாராக இருக்கிறோம். அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் சாட்டுப்போக்குகளை தெரிவித்துக்கொண்டிருக்காமல், மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம் உள்ளூராட்சி நிறுவனங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.உள்ளூராட்சி மன்றங்களின் மீண்டெழும் செலவுகளில் சம்பளம் வழங்கும் நடவடிக்கைகளில் நூற்றுக்கு 20 வீதத்தைை பயன்படுத்துமாறு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.அவ்வாறு செய்ய முடியுமா என உங்களது உள்ளூராட்சி சபை தலைவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இந்த வருடம் நூற்றுக்கு 20 செலுத்துவதாகவும் அடுத்த வருடம் நூற்றுக்கு 40 செலுத்துவதாகவும் அதற்கு அடுத்த வருடம் நூற்றுக்கு 60 செலுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த உள்ளூராட்சி நிறுவனங்களும் வீழ்ச்சியடைந்துவிடும்.
மேலும் எதிர்க்கட்சி தலைமை தாங்கும் பல உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன.ஒருசில மன்றங்களின் அதிகாரினால், தலைவருக்கு கிடைக்கவேண்டிய ஒத்துழைப்புகள் வழங்கப்படுவதில்லை..இதுதொடர்பில் அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பொது மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பல அத்தியாவசிய சேவைகள் இருக்கின்றன. மக்களுக்கு நெருக்கமான சேவைகளை வழங்குவது உள்ளூராட்சி மன்றங்களாகும்.
அதனால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், இந்த காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்ற தலைவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
![]()