இலங்கை

தமிழ் மக்களுக்கு பெயரோ,லேபலோ முக்கியமல்ல; சமஷ்டி அம்சங்களுடன் எமக்குத் தீர்வு தேவை;  ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்து 

தமிழ் மக்களுக்கு பெயரோ,லேபலோ முக்கியமல்ல,ஆனால் சமஷ்டிக் கட்டமைப்பு அம்சங்களை கொண்ட அரசியல் தீர்வு வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்திய இலங்கை தமிழ் அரசுக் கட்சியினர், வழங்கப்படும் அதிகாரங்களை மீள பெறுவதாக அது அமையக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் அது தொடர்பாக தினக்குரலுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறீநேசன், க.கோடீஸ்வரன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், இ.சிறீநாத், ச.குகதாசன் என பத்துப் பேர் பங்கேற்றனர்.

ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மாத்திரம் பங்கேற்றிருந்தார்.

சந்திப்பு குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு மணித்தியாலம் நாற்பது நிமிடம் வரை ஜனாதிபதியுடனான சந்திப்பு நடைபெற்றது.

பிரதானமாக அரசியல் தீர்வு சம்பந்தமாக உரையாடப்பட்டது. ஜனாதிபதி கொடுத்த தேர்தல் வாக்குறுதியை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒரு வருடமாகியும் எதுவும் நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம் . ஜனவரியில் அது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி சொன்னார்.ஜனாதிபதி இணங்கியவிடயங்களை நான் அவருக்கு தெளிவுபடுத்தினேன்.

அரசியல் தீர்வு சம்பந்தமாக வழிநடத்தல் குழுவில் ஜனாதிபதி இருந்திருக்கிறார். இறுதி வரைவில் பலருக்கு இணக்கம் இல்லாவிட்டாலும் அதிகாரப் பகிர்வுக் கோட்பாடு என 16 கோட்பாடுகள் உள்ளன. அதில் இரண்டைத் தவிர ஏனையவற்றுக்கு அனைவருமே இணங்கினோம். அதன் பிரதியை நான் ஜனாதிபதிக்கு வழங்கினேன்.

இதை புதிதாக செய்யத் தேவையில்லை மங்கள முனசிங்கவின் காலத்தில் இருந்து இந்த செயல்முறை வரைமாகாணங்களுக்கு கூடுதலான அதிகாரங்கள் பற்றியே பேசப்பட்டது. அதுவே அரசியல் தீர்வு.

நாங்கள் சமஸ்டி கட்டமைப்பில் ஒரு தீர்வைக் கோருகின்றோம். எந்த பெயரை சொன்னாலும் அது சமஸ்டி கட்டமைப்பாக இருக்க வேண்டும். கொடுத்ததை திருப்பி எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொன்னோம். அதற்கு ஜனாதிபதியும் இணங்கினார்.

அந்த முறையில் இலகுவாக இதை செய்து முடிக்கலாம். ஆகவே அதை செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்தினோம். அதை ஜனவரியில் தொடங்குவதாக ஜனாதிபதி எமக்கு தெரிவித்தார்.

மாகாணத்தில் இருந்து அதிகாரங்கள் பறித்தெடுக்கப்படக் கூடாது என்பது தொடர்பாகவும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் எமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.ஜனாதிபதி அனைத்தையும் செவிமடுத்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மாகாண சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்கு நடத்துவோம் என கூறியதை கேட்டோம். 50 வீதத்தை நாங்கள் செய்துவிட்டோம் தானே உள்ளூராட்சி தேர்தலில் நடத்திவிட்டோம் தானே என ஜனாதிபதி சொன்னார்.

மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என கேட்டோம். பதில் சொல்லவில்லை ஆனாலும் மிக விரைவில் செய்வதாக சொன்னார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும்,குறிப்பாகத் திருகோணமலைப் பிரதேசத்தில் சமீபத்தில் புத்தர் சிலை விவகாரத்தால் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவது குறித்தும் பேசினோம்.

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு நாம் எடுத்துரைத்துள்ளோம். இதை வைத்து இனவாதத்தை தூண்டுவதற்கு அனைத்துப் பகுதிகளிலும் பலர் உள்ளனர். கடந்த இரு தினங்களிலும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பௌத்த தேரர்கள் குறித்த பகுதிக்கு சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாட்டுக்கு இடம்கொடுக்கக் கூடாதென்பது எங்களது திடமான கருத்து. ஆனால் அதேவேளையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விகாரைகளை அமைத்து ஆதிக்கத்தை காட்டுவது இனங்களுக்கிடையில் எவ்விதமான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை நாம் ஜனாதிபதிக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம்.

மேலும், நாட்டின் நல்லிணக்கச் செயன்முறையைச் சீர்குலைக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆட்சேபனைகளையும் அச்சங்களையும் ஜனாதிபதியிடம் வெளிப்படையாக எடுத்துரைத்தனர்.

அத்துடன் பொறுப்பு கூறல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதி விவகாரம், நில விடுவிப்பு, சட்டவிரோத மீன்பிடி முறை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என பல விடயங்களை எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் கதைத்தார்கள் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *