இலங்கை

அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகவே செயற்படுகிறது; எதிர்க்கட்சித் தலைவரும் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார்

வரவு செலவுத் திட்டத்தில் புத்தசாசன அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதங்கள் மற்றும் இனங்கள் தொடர்பில் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகவே செயற்படுகின்றது. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். எதிர்க்கட்சித் தலைவரும் பௌத்த மதத்துக்கு மாத்திரமே முன்னுரிமை கொடுக்கிறார். இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த வரவு செலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு இணங்க செய்யப்பட்ட ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம். பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் முதலீட்டை மையப்படுத்தி செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டமாக நாங்கள் இதனை பார்க்கின்றோம். இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார விடயங்களுக்கு அதிகளவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறைக்கு மொத்த செலவீனத்தில் 12.5 வீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 82 தள வைத்தியசாலைகளுக்கு 31ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கூடுதலான பங்குகளை செலவழிக்க வேண்டும். இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் போது இந்த வைத்தியசாலைக்கான கட்டிடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம் இதன்படி அந்த வைத்தியசாலையை பார்வையிட்ட அமைச்சர் அங்கே நான்கு மாடி கட்டிடத்திற்கு நிதியை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு நன்றியை கூறிக்கொள்கின்றேன்.

போக்குவரத்து துறையில் அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கிராமிய வீதிகள் பல புனரமைக்கப்பட வேண்டியுள்ளது. அலிகம்பை, திருக்கோவில்,நாவிதன்வெளி ஆகிய பிரதேச வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.

அத்துடன் நீர்பாசன துறைக்கும் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்பாசன அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் இருந்து 20 வீத நெல் உற்பத்தி கிடைக்கின்றது. இதனால் ஒருங்கிணைந்த நீர்பாசன திட்டத்தை வலுப்படுத்துவது அவசியமாகும். இதன்மூலம் மேலதிகமாக 10 வீத நெல் உற்பத்தியை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.

அதேபோன்று நன்மையான விடயங்கள் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடங்கப்பட்டிருந்தாலும் கல்விக்காக மொத்த ஒதுக்கீட்டில் 6.1 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 10 முதல் 20 வீதம் வரையில் ஒதுக்கப்படும். இதனால் இங்கே கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகக் குறைவாக இருக்கின்றது. இதனை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வளர்ச்சியடைந்த நாடுகள் புதிய கண்டுபிடிப்புகள்,புதிய ஆராய்ச்சிகளுக்காக அதிகளவான நிதியை ஒதுக்குகின்றன. ஆனால் இங்கே வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.

இதேவேளை புத்த சாசன கலாச்சார அமைச்சை அரசாங்கத்தில் இருக்கின்ற மிகப்பெரிய தவறாக இருக்கின்றது. இந்த அரசாங்கம் இடதுசாரியாகும். சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது. இனம், மதங்களுக்கு சமத்துவம் என்றும் கூறுகின்றது. ஆனால் பௌத்தசாசன அமைச்சு என்றே அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்து கலாச்சார அமைச்சு, இஸ்லாம் கலாச்சார அமைச்சு மற்றும் கிறிஸ்தவ கலாச்சார அமைச்சு உள்வாங்கப்படவில்லை. ஆகவே இதில் இருந்து அரசாங்கம் ஒருதலைப் பட்சமாக செயற்படுகின்றது. இதனை கண்டிக்க வேண்டியதாக இருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவரும் பௌத்த சாசன அமைச்சுக்கு என்ன முன்னுரிமை கொடுத்துள்ளீர்கள் என்று கேட்கின்றார். இவர்கள் அனைவரும் ஒரு குட்டையில் ஊறும் மட்டைகள்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உங்களின் மதம் சார்ந்து சிந்திப்பவர்களாகவே இருக்கின்றீர்கள். தனியாக பௌத்த அமைச்சை உருவாக்கியுள்ளீர்கள். ஏனைய மதங்கள், மொழிகள் மற்றும் இனங்களுக்கான அமைச்சு உருவாக்கப்படவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் பௌத்தத்திற்கு என்ன முன்னுரிமை கொடுத்துள்ளீர்கள் என்று கேட்கின்றார். அப்படியென்றால் நீங்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றே கூற வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button