முச்சந்தி

வாக்குகளைக் கைப்பற்ற முற்படாது தமிழரின் பிரச்சினைக்கு நேர்மையான தீர்வு தேவை

தமிழர்களின் வாக்கு வங்கிகளை கைப்பற்றுவதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு இருக்க கூடாது. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாச ஆகியோர் தமிழ் மக்களுக்கு சேவையாற்றினார்கள். பின்னர் வந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் குறித்து அதீத கவனம் செலுத்த தவறிவிட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹேஷா விதானகே தெரிவித்தார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய தரப்பினரை போன்றே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. எவ்வித கொடுப்பனவுகளையும் பெறப் போவதில்லை என்று குறிப்பிட்டவர்கள் சகல கொடுப்பனவுகளையும் இரகசியமாக பெற்றுக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு அரசியலமைப்பால் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள் அதில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் மக்களை ஏமாற்றியது தான் பிரச்சினை.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு இல்லாவிடின் இந்த அரசாங்கம் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி மற்றும் அரச நிதி முறைகேடு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை.இவ்வாறான நிலையில் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?

தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தெற்கில் அரசியல் செல்வாக்கு பலவீனமடையும் போது வடக்கில் அரசியல் இருப்பை வலுப்படுத்த தமிழ் மக்களுக்கு ஏதாவதொன்றை செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி வசமிருந்த தமிழர்களின் வாக்கு வங்கிகளை கைப்பற்றுவதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க கூடாது. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோர் தமிழ் மக்களுக்கு சேவையாற்றினார்கள். பின்னர் வந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் குறித்து அதீத கவனம் செலுத்த தவறி விட்டனர்

தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இருப்பினும் அது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைய கூடாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *