கட்டுரைகள்

அரசியல் வாதியை மட்டுமே குறை சொல்ல முடியுமா?….  நியூசிலாந்து சிற்சபேசன் 

சமூகத்திலே காணப்படுகின்ற எல்லாச் சிக்கல்களுக்குமே, அரசியல்வாதியை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டுகின்ற மனநிலை இயல்பானதாகும். அஃது, “வளர்முக” நாடுகளிலிலே சற்று அதிகமாகும். அதனையே இலங்கையிலும் அவதானிக்கமுடிகின்றது.

எல்லாச் சிக்கல்களுக்குமே, அரசியல்வாதியால் மட்டுமே தீர்வை ஏற்படுத்தமுடியும் என்னும் சமூகத்தின் எதிர்பார்ப்புடன் கலந்த நம்பிக்கை, “ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றிவிட்டது”.

இலங்கையிலே, பெரிதும் கொண்டாடப்படுகின்ற அரசியல்வாதிகளிடமே தற்போது ஆட்சியதிகாரம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. “ரட்ட அனுரட்ட” கோஷத்தின் நாயகரே, 2024 செப்டம்பர் 21ல், சனாதிபதியாகத் தெரிவானார். பாராளுமன்றத்திலே தனிப்பெரும்பான்மை பலத்துடன் கோலோச்சக்கூடிய வாய்ப்பும்கூட, “மாற்றத்துக்கான” சனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

அப்படியாயின், இதுவரையில் பல்வேறு பிரச்சனைகளையுமே தீர்க்க ஆரம்பித்திருக்க வேண்டுமல்லவா. குறைந்தது, நம்பிக்கைகளுக்கு நாற்றுமேடையாவது அமைத்திருக்கலாமல்லவா.

தேசபரிபாலனத்தின் அத்திவாரமே அரசியலமைப்பைப் பேணுவதாகும். அத்தகையவொரு அடிப்படையிலேயே சனாதிபதி தலைமையிலான அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படுகின்றது.

ஆனால், அரசியலமைப்பின் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தவில்லை.

ஆகக்குறைந்தது, ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் தேர்வு விடயத்திலே கூட எந்த மாற்றத்தையுமே ஏற்படுத்தமுடியவில்லை.

புலமைப்பரிசில் தேர்வின் சாதக பாதகங்கள் பரவலாக அறியப்பட்டதாகும். அதுவே, நடுநிலையான கல்விச் சிந்தனைகொண்டோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமாகும்.

அதிலே, தமிழ் – சிங்கள இனமுறுகல் கலப்பு இல்லை. மதக் கலப்பு இல்லை.

மாறாக, சின்னஞ்சிறுசுகளின் உளவளம் சம்பந்தப்பட்டது. தேசத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடையது. ஆனாலும்கூட, அரசியல்வாதிகளினால் “நாளை” என்று சொல்லி “திருநாளைப்” போக்க மட்டுமே முடிகின்றது.

இத்தனைக்கும், கல்விப்புலமையோடு, அறிவுசார்ந்து சிந்திக்கும் வல்லமை கொண்டவராகக் கொண்டாடப்படுகின்ற ஒருவரே கல்வி அமைச்சுப் பொறுப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார். அரசு பொறுபேற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களிலே, நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பக்கூடிய வகையிலே ஆலாபனையாகப் பேசியது மட்டுமே ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் தொடர்பில் அரசின் சாதனையாக மிஞ்சியிருக்கின்றது.

இஃது, அரசுதொடர்பில், சுட்டுவிரலை நீட்டுவதான தோரணையில் சொல்லப்படுகின்ற எடுத்துக்காட்டுகள் அல்ல. மாறாக, “பூனைகள் இல்லாத வீட்டில் எலிகள்” என்னும் நிலையைச் சுட்டிக்காட்டவேயாகும்.

தேசபரிபாலனத்தை மேற்கொள்ளக்கூடிய அரசியல்வாதிகள் இல்லை. அதுவே அடிப்படைப் பிரச்சினையாகும்.

அசுரபலத்துடன் காணப்படுகின்ற, தேசிய மக்கள் சக்தி அரசிலே அங்கம்வகிக்கின்ற அரசியல்வாதிகளைக் கைவிரல்களைப் பாவித்து எண்ணுவதற்குத் தொடங்கினால், “கைவிரல்கள் மிச்சமிருக்கின்ற” சூழ்நிலையையே காணமுடிகின்றது.

மெத்தப்படித்த மேதாவிகளோ அல்லது அப்படியாக நினைத்துக்கொள்வோரே அரசியல்வாதிகளாகப் “பாசாங்கு” பண்ணுகின்றனர்.

ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்று சும்மாவா சொன்னார்கள்.

ஒரு அரசியல்வாதி என்பவர் சமூகத்தை அறிந்திருக்கவேண்டும். அதனுடைய தேவைகளைப்Sri Lankas President-elect Anura Kumara Dissanayake Editorial Stock Photo -  Stock Image | Shutterstock Editorial புரிந்துகொள்ளவேண்டும். கஷ்டங்களை உணரவேண்டும். நேர்மறையான இலட்சியத்தைக் கொண்டிருக்கவேண்டும். ஆரோக்கியமான மாற்றங்களைத் தேடவேண்டும்.

சமூகத்தின் அங்கமாகவே அரசியல்வாதி இருக்கவேண்டும். அதனூடாக, சமூகத்தின் நாடித்துடிப்பை உணரவேண்டும். அந்தச் சமூகத்துக்கு கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும். அப்படியானதொரு சூழலிலேயே, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு தவிர்க்க முடியாததாகின்றது. அதுவே, நேர்மையாக செயற்பட ஒரே வழிமுறையாகும்.

சமூகத்தில் வாழ்ந்து மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, சமூகத்தின் நாடித்துடிப்பை அறிந்துகொண்ட தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் ஒருகாலகட்டத்திலே இருந்தனர்.

அதிலே உடுவில் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்த அமரர் வி. தர்மலிங்கம் அவர்களை நல்லதொரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். சுன்னாகம் சந்தைக் கடைத்தொகுதியிலே அவரை அடிக்கடி காணலாம் என்று அந்தக்காலத்து மக்கள் சொல்வார்கள். பலருடனும் பேசி ஊர் நடப்புக்கள், ஊரிலே நடக்கக்கூடிய நல்லது கெட்டதுகளை அறிந்து கொள்வாராம். யாரும் வந்து அவரைச் சந்திக்கலாம். எப்போது வேண்டுமானாலும் அவருடன் கதைக்கலாம். இவ்வாறாக தன்னுடைய மக்களுடனேயே வாழ்ந்தார். அந்தமக்களைப் பிரதிநிதித்துவம் செய்தார். அதனாலேயே, அவருடைய மறைவுக்குப் பின்னரும்கூட வாக்கு அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார். கந்தரோடையை அண்டையபிரதேசங்களிலே “தர்மலிங்கத்தாருக்காக” வாக்களிக்கக்கூடிய மனநிலை தற்காலம்வரையிலும் நீடித்திருக்கின்றது.

ஆனால், அஃது தற்காலத்திலே காணக்கிடைக்காத பண்பியல்பு என்பது மட்டுமல்ல. அப்படியான பண்பியல்பு அரசியல்வாதிக்கு அவசியமேயில்லை என்று வாதிடுவதற்குக்கூட பலர் முற்படுவார்கள்.

மறுவளத்தில், தன்னுடைய தொகுதிக்கே தலைமைத்துவம் வழங்க முடியாத ஒருவரையே “பொம்மைத்” தலைவராக ஆக்கினார்கள். அவரே முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் “தானைத்” தலைவரானார். தன்னுடைய பங்குக்கு “பொம்மைத்” தலைமைகளையே உருவாக்கினார். விளைவு: தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரன் ஆகிக்கொண்டனர். ஆளுக்கொரு கட்சி என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

அதனால், மக்களுக்கான அரசியல் என்பதெல்லாம் கனவாகிவிட்டது. அரசியல்வாதிகளின் பிழைப்புக்கே அரசியல் என்னும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இப்படியானதொரு சூழலிலே அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்வோரால் எதனைச் சாதிக்கமுடியும்.

இதுவே இலங்கை முழுவதுக்குமான நிலையாகும்.

அப்படியானால், இத்தகைய சூழலிலேயிருந்து நேர்மறையான மாற்றத்தை எவ்வாறுஅரசியல்வாதி (@makkalmandhiri) / Posts / X ஏற்படுத்தலாம் என்னும் கேள்வி எழுகின்றது.

அரசியல்வாதிகளைச் சமூகமே உருவாக்கவேண்டும்.

ஆனால், சமூகத்தை உற்றுநோக்கும்போது அச்சம் ஏற்படுகின்றது. சமூகத்திலே ஆரோக்கியமான பண்பியல்புகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்னும் வள்ளுவர் வாக்கு காணாமல் ஆக்கப்பட்டுவிட்டதோ என்னும் “சமசியம்” தோன்றுகின்றது.

“காகத்தைப் பாட்டுப்பாடச் சொல்லி, நரி வடையைக் கவ்விக்கொண்டு போன” கதை சமூகத்துக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டதோ என்னும் பதட்டம் தொற்றிக்கொள்கின்றது.

எதுஎப்படியாகிலும், சமூகக்கட்டமைப்பு ஆரோக்கியமாக இல்லை. அதனாலேயே, நல்ல அரசியல்வாதிகளை உருவாக்கமுடியவில்லை.

ஆக, அரசியல்வாதியை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தமில்லையே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *