இலங்கை

ஜனாதிபதிக்கு இரு கடிதங்கள் எழுதியும் அவர் மெளனம்; சுமந்திரன் தெரிவிப்பு

ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் அரசு கட்சி ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறது.அதற்காக ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு இரு கடிதங்கள் எழுதியும் இது வரை அவரிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லையென தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் அரசு கட்சி ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறது. எப்படியான விடயங்களை நாம் கதைப்பது என இதற்கு முன்னர் நடந்த மத்திய செயற்குழுவிலே எடுத்த தீர்மானத்தின் அமைவாக தலைவரும் நானும் கையெழுத்திட்டு அரசியல் தீர்வு சம்பந்தமாக அவரோடு பேசுவதற்கு எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் இருவருமாக சேர்ந்து பத்துபேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாவும் நேரம் ஒதுக்கி தருமாறும் நாங்கள் அவரிடத்திலே கோரிக்கை விடுத்திருந்தோம்.

அந்த கடிதம் அவருக்கு அனுப்பி வைக்க போகும்போது அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலே கலந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார். ஆகவே அவர் திரும்பி வந்த பிறகு ஒரு நினைவூட்டல் கடிதமும் நான் அனுப்பி இருக்கிறேன். ஆனால் இதுவரைக்கும் எந்தவிதமான பதிலும் ஜனாதிபதியிடத்திலிருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை.

எனினும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தமிழ் அரசு கட்சிக்கு அழைப்பு விடப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம்.

இதற்கு முன்னர் பல தடவைகளிலே பல்வேறு எதிர்கட்சிகள் சேர்ந்து செயல்படுகிற போது எங்களுக்கு அழைப்புகள் விடுப்பார்கள். நாங்கள் சில சில வேலைத் திட்டங்கள் சம்பந்தமாக இணைந்து பணியாற்றுகிறோம். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சில வேலைத் திட்டங்களிலே எங்களோடு இணைந்து வருகிறவர்களோடு சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் பொதுவாக ஒரு எதிர்க்கட்சிக் கூட்டணியாக ஒன்று சேர்ந்து பயணிக்கத் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *