இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளை விட அநுரவுக்கு பாதுகாப்பு அதிகம்; பாராளுமன்றுக்குள்ளும் பிரதமருக்கு பாதுகாப்பு

பாதாள குழுக்களையும் போதைப் பொருட்களையும் ஒழிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை ஒருபோதும் தமது கட்சி எதிர்க்காது என்றும், அதற்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான், முன்னாள் ஜனாதிபதிகளை விடவும் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது பாராளுமன்றத்திற்குள்ளும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் முன்னெடுக்கும் பாதாள குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அதற்கு எதிராக எந்த வகையிலும் செயற்படப் போவதில்லை. ஒவ்வொரு அரசாங்கமும் ஒவ்வொரு முறைகளில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி தற்போதைய ஜனாதிபதியும் அண்மையில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளார். இதனை நாங்கள் எதிர்க்கப் போவதில்லை. இளைஞர்களை போதைப் பொருளில் இருந்து மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்த மாட்டோம்.

இதேவேளை போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கும் பாதுகாப்பு கோரும் நடவடிக்கைக்கும் இடையே தொடர்புகள் கிடையாது. மக்கள் பிரதிநிதிகள் பல இடங்களுக்கு செல்கின்றனர். அவர்கள் அடிக்கடி மக்களிடையே செல்பவர்கள் என்பதனால் அவர்களுக்கு பாதுகாப்பு அவசியமாகும். ஆளும் கட்சியினருக்கும் இவ்வாறு பாதுகாப்பை வழங்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை தெரிகின்றது. ஏதும் நடந்த பின்னர் கூறி பலனில்லை. சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பை வழங்குவது முக்கியமானது. தற்போது முன்னாள் ஜனாதிபதிகளை விடவும் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது பாராளுமன்றத்திற்குள்ளும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பொறுப்புகள் உள்ளன. இதன்படி எம்.பிக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *