இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 26… சங்கர சுப்பிரமணியன்

இன்னொரு மாதிரி சொல்ல வேண்டுமானால் சொந்தச் செலவில் சூனியம் வைப்பதென்பது. ஏதோ கட்டுரை எழதினோமா போனோமா என்றிராமல் பழமொழிகளை எல்லாம் சொல்லி பந்தா காட்டியது தப்பா போய் விட்டது? என்ன கட்டுரையைத் தானே எழுதிக் கொண்டிருக்கிறாய் இதிலென்ன தப்பு என்று கேட்காதீர்கள்.
ஆனால் மாடசாமி அண்ணாச்சி நான் சொன்ன கூரை ஏறி கோழி பிடிக்கதவன் என்ற பழமொழியை வைத்தே என்னை வைத்து நையாண்டி செய்கிறார்.
ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் வாழ்ந்த மற்றும் வாழும் பகுதிகளில் இரட்டைக்கிளவிக்கு சான்றாக பல ஊர்களின் பெயர்களை இன்றும் காணலாம்.
அதற்குமுன் தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி பற்றி அறிந்து கொள்வோம்.. ஒரு சொல் இருமுறை வந்து ஒன்றை உணர்த்தும் விதமாக பொருள் தரும். ஆனால் ஒருமுறை வந்தால் பொருள் தராது. இதுவே
இரட்டைக் கிளவி ஆகும்.
மழை சடசட என்று பெய்தது. தோசை மொரு மொரு என்று இருந்தது. பட பட என்று நெஞ்சு துடித்தது போன்றவற்றைச் சொல்லலாம். இதே போல் இரட்டைக்கிளவியில் வரக்கூடிய ஆஸ்திரேலியாவிலுள்ள ஊர்களின் பெயர்களைப் பார்ப்போம்.
அடுத்ததாக திரிபடைந்திருக்கலாம் என்று நம்பக் கூடிய ஊருண் ஊருண் (ஊரூணூரான்) பற்றியும் பார்க்கலாம். அருகிலேயே மில்லா மில்லா (இல்லை) என்றொரு ஊர். வாக்கா வாக்கா (வாங்க வாங்க என்று அழைப்பது போல் இல்லையா?) கல்லு கல்லு (கல்), முல்லா முல்லா (முல்லைப்பூ), டூன் டூன் (டூம் டூம்)மற்றும் பங்குள் பங்குள் (பங்கு) போன்று எத்தனையோ பெயர்கள் உள்ளன.
நான் மேலே அடப்புக் குறிக்குள் கூறி இருக்கும் தமிழ் வார்த்தைகள் ஊரின் பெயரை சொல்லும்போது ஒரு இணைப்பு இருப்பதைக் காட்டுவதை கவனியுங்கள்.
இதே போன்று தமிழை நினைவூட்டக்கூடிய மாதிரி ஊர்ப் பெயர்களும் உள்ளன. கம்மா (கண்மாய்), கனிம்பிலா(பழாக்கனி), உறீ (உறி), மலான் (மாலன்), கிர்ரமா(கிராமம்),
போன்ற ஊர்கள் உள்ளன.
மேலும் உளுரு(உள்ளூர்), மதுரா(மதுரை), வர்மம், தங்கூ (தங்கு), மீக்கத்தரா (மேற்குத்தரை),
காகாடு (பெரிய காடு), மிலிவண்டி (வில்வண்டி) கூண்டிவிண்டி (கூண்டுவண்டி) உரல்ல (உருளை) பூங்காரி (பூக்காரி) நரேன்ட்ரா (நரேந்திரா), மரலிங்கா (லிங்கம்), மற்றும் ஒரூரூ (ஒரு ஊர்) போன்ற தமிழை நினைவுகூறும் பல பெயர்கள் உள்ளன.
சரி இதற்கெல்லாம் உசாத்துணை இருக்கிறதா? என்று மாடசாமி அண்ணாச்சி கேட்கிறார். அண்ணாச்சி வெளிநாடு செல்ல விசாத்துணை தேவைப்படுவதைப் போல
தெரிந்தவற்றை சொல்வதற்கு ஏன் உசாத்துணை கேட்கிறார் என்பது தெரியவில்லை. உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
கற்க கசடற கற்க கற்றபின் நிற்க அதற்குத் தக என்று எழுதினால் அதற்கு திருக்குறள் என்று போடவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஊரறிந்த அந்த விசயத்தை படிப்பவர்களே அறிந்து கொள்வார்கள்.
தமிழ் ஒரு கடல். அதில் நம் பங்குக்கு ஒரு படைப்பை தமிழ்க் கடலில் மிதக்க விடுகிறோம். அந்த கடலில் மிதந்து கொண்டிருக்கும் படைப்பை எடுத்து பலர் பயன்படுத்துகிறார்கள் என்றால் நாம் பெருமையடைய வேண்டும். ஏனென்றால் நம் படைப்பு அந்த அளவுக்கு மற்றவர்களை கவர்ந்துள்ளது. இல்லையென்றால் எவரும் சீண்டக்கூட மாட்டார்கள.
நாம் நட்டு நிழல் கொடுக்கும் மரத்தில் பலர் வந்து இளைப்பாறும்போது அதைப் பார்த்து மனம் மகிழத்தானே செய்யும். கோடை வெயிலில் அப்படி இளைப்பாறுபவர்கள், யாரோ நல்ல மகராசன் மரம் வச்சிருக்கான். நல்லா இருப்பான் என்று அவர்கள் பாராட்டினால் பாராட்டட்டும். இல்லாவிடினும் பரவாயில்லை. பாராட்ட வேண்டும் என்று மரம் வைக்கவில்லையே?
அதுபோல உசாத்துணையாக போடுவார்கள் என்று எவரும் எந்த படைப்பையும் படைப்பதில்லை. மக்களுக்கு பயன் படட்டும் அல்லது நமக்குள் கிடப்பதை வெளிக் கொண்டுவருகிறோம் என்ற எண்ணத்துடனேயே எல்லா படைப்புக்களும் படைக்கப்படுகின்றன.
என்னைப் பொறுத்தவரை இந்த உசாத்துணை எல்லாம் வேண்டாத ஒன்று என்பது என் சொந்தக் கருத்து. எதையும் திருடவில்லை. நாம் படித்ததைத்தான் பகிர்கின்றோம். கணிதத்தில் சிக்கலான ஒன்றுக்கு தீர்வு கண்டபின் யாராவது உசாத்துணை கணிதமேதை ராமானுஜம் என்று போடுகின்றோமா?
அதற்காக உசாத்துணை போடுவதை நான் குறைகூறவில்லை. என்னைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். இது முழுக்க முழுக்க என் சொந்தக் கருத்து. இருப்பினும் மாடசாமி அண்ணாச்சியின் முகத்தில் கடுகடுப்பு தெரிகிறது. அவரைப் போன்றும் ஆட்கள் இல்லாவிட்டால் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனாகி விடுவேன் அல்லவா?
அவர் தமிழ்மீதுள்ள பற்றால் மட்டுமே சினம் கொள்கிறார். நுனிக் கொம்பில் இருந்து கொண்டு அடிக்கொம்பை வெட்டுவது போல் தமிழராக இருந்து கொண்டே தமிழுக்கு தீங்கு செய்யமாட்டார். யாராவது நாம் சுவைத்து சாப்பிடும் உணவில் மண்ணைப் போடுவார்களா? ஆதலால் அவரது சினத்தையும் மதித்து ஏற்கிறேன்.
ஆகவே உசாத்துணை போடுவது
அவரவர் விருப்பம். உசாத்துணை போடுவதால் ஒரு நன்மை உண்டு. இவர் பெரிய அப்பாடக்கர்
போல இருக்கே எவ்வளவு நூல்களைப் படித்து அல்லது இந்தந்த நூல்களையெல்லாம் படித்தல்லவா இவரது படைப்பைத் தந்திருக்கிறார் என்று மக்கள் நினைக்க வழியுண்டு.
தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தை
எழுதிய தொல்காப்பியரையும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளையும் பெருவாயின் முள்ளியார் எழுதிய ஆசாரக்கோவையையும் ஆத்திச்சூடி எழுதிய ஔவையாரையும் எவரும் உசாத்துணையாக போடுவதில்லை,
ஏன்? இதேபோல் கம்பர், கபிலர், ஒட்டக் கூத்தரைப் படித்தோரும் அவர்களை எல்லாம் உசாத்துணைக்கு அழைப்பதில்லையே என்ற கேள்வி என் மனத்தில் எழுதுவதுண்டு.
யாரோ எப்போதோ இந்ந நூல்களையெல்லாம் படித்து இந்த படைப்பை உருவாக்கினேன் என்பதை நிலைநாட்ட உருவாக்கிய பழக்கமானது இன்று வழக்கமாகி விட்டது.
![]()