பல எம்.பி.க்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் கொல்லப்பட முன்னர் பாதுகாப்பு வழங்கவும்

பல எம்.பி.க்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு வழங்கி பிரயோசனம் இல்லை.எனவே எம்.பி.க்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்திய நிலையில் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் இரு எம்.பி.க்கள் சபாபீடத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து தமது உயிர்களை பாதுகாக்குமாறு வேண்டினர்
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ,எம்.பி.க்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றை முன்வைக்கையில்,
பிரதேச சபை உறுப்பினர் முதல் எம்.பி.க்கள் வரை இன்று அவர்களுக்கு மக்கள் சேவை செய்ய முடியாத ஒரு நிலைமை நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது . அரச பயங்கரவாதமும் பாதாள உலகமும் சமுதாயத்தை விழுங்கி வருகின்றன.இவ்வாறான நிலைமையில் உள்ளூராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுாப்பு தொடர்பில் மதிப்பீடொன்றைை மேற்கொள்வதாக ஒரு மாத காலத்துக்கு முன்னர் அரசாங்கம் தெரிவித்திருந்தது. அந்த மதிப்பீட்டை அரசாங்கம் எப்போது செய்யப்போகிறது? எப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்போகிறது ?
மக்கள் பணித் தினத்தில் கொலை செய்யப்பட்ட, வெலிகம பிரதேச சபையின் தலைவரை கொலை செய்த கொலையாளியை எப்போது கைதுசெய்யப்போகிறது?என்ற தகவலை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். ஏனெனில் பொலிஸ்மா அதிபரிடம் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு அவர் எழுத்து மூலம் கோரி இருக்கிறார்.ஆனால் பாதுகாப்பு வழங்க மறுக்கப்பட்டநிலையில் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாதாள குழு, அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு மக்கள் சேவை செய்ய முடியும்?
எனவே பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி, 220 இலட்சம் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் முறையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் எமது கட்சியை சேர்ந்த களுத்துறை மாவட்ட எம்.பி.யான ஜகத் விதாரனவுக்கு ஏற்பட்டிருக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.ஜகத் விதான எம்.பி க்கும் ஏனைய எம்.பி.க்களுக்கும் முறையான பாதுகாப்பு இல்லை. அதனால் உடனடியாக செயற்பட்டு ஜகத் விதான எம்.பி க்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலை அச்சுறுத்தல் பிரச்சினை அதிகமான எம்.பிக்களுக்கு இருக்கின்றது . அதனால் இதனை சாதாரணமாக கருதவேண்டாம். கொலை செய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு வழங்கி பிரயோசனம் இல்லை.
வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலையில் இருந்து நாங்கள் படிப்பினை பெறவேண்டும் என்றார்.
![]()