கவிதைகள்

காதல்கொள் என்னவளே!… கவிதை… சாந்தரூபி

மூச்சாகி உள்ளுறையும் பேச்சாகி எண்ணத்தில்
பூச்சொரியும் என்னவளே! காதலது!-தீச்சுடராய்ப்
பற்றுதடி! பைந்தமிழாள் உன்நினைவில் பாடியப்பா
கற்பனைக்கும் எட்டாக் கனி!

வந்தமர்க நாயகியே! வாழ்வெல்லாம் என்மனத்துள்
சந்தமழை நீபொழிய எந்நாளும்!-சிந்துப்பா
பாடியுயிர் மீளட்டும் என்னுயிரே! உன்னருளால்
கோடியின்பம் கொட்டிக் கொடுத்து!

கேட்போரை வாழவைக்கும் காதல்பா மாமழையை
ஊட்டமிகு சொற்கொண்டு நான்வடிக்க!-ஆட்கொள்வாய்
என்னுலகே! இன்தமிழே! ஈடுயிணை அற்றவளே!
உன்னருளே போதும் எனக்கு!

பட்டிதொட்டி எல்லாமும் பாடும்பா நின்றொலிக்க
கட்டழகி காதலது என்னுணர்வில்!-சொட்டட்டும்
பொன்மொழியே! பூவிலங்கே! நம்காதல் எப்போதும்
இன்னுயிர்க்கிங் காக விருந்து!

வாழ்க தமிழ்!

பாவலர் அம்பாளடியாள் சாந்தரூபி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *