இலங்கை

பயங்கரவாத யுத்தமா? இனவாத யுத்தமா?; தமிழ் டயஸ்போராக்களுக்கு ஜெனீவாவில் பெரும் வெற்றி

இலங்கையில் நடந்தது பயங்கரவாத யுத்தமே தவிர இனவாத யுத்தம் அல்ல என்றும், ஜெனீவா தீர்மானத்தில் அதனை இனவாத யுத்தம் என்று கூறியுள்ளமை ஊடாக தமிழ் டயஸ்போராக்கள் பெரும் வெற்றிபெற்றுள்ளனர் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பனரும் அமைச்சரமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான 60/1 தீர்மானத்தில் 14ஆவது பிரிவில் தற்போது செயற்படுத்தப்படும் சர்வதேச பொறிமுறை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பின்னர் வந்த அரசாங்கங்கள் அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது. ஆனால் இம்முறை அந்த தீர்மானத்தை அரசாங்கம் சம்பிரதாயப்பூர்வமாக நிராகரித்தாலும் வாக்கெடுப்பை கோரவில்லை. இவ்வாறு வாக்கெடுப்பை கோராமையை பாரதூரமான விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம். எப்படியும் இது தோற்கடிக்கப்படும் தீர்மானம் என்பதனால் வாக்கெடுப்பை கோரவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இவர்கள் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

வாக்கெடுப்பை கோரியிருந்தால் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பை நாம் பெற்றிருப்போம். தீர்மானத்தில் எவ்விடத்திலும் பயங்கரவாதம் என்று குறிப்பிடப்படவில்லை. இனவாத, பிரிவினைவாத அரசியலால் ஏற்பட்ட யுத்தம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கே பயங்கரவாத யுத்தமே இருந்தது. இனவாத யுத்தம் இருக்கவில்லை. தமிழ். சிங்க மக்களிடையே அவ்வாறு யுத்தம் இருக்கவில்லை. 52 வீதமான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடனேயே வாழ்ந்தனர். உலகில் கொடூரமான பயங்கரவாதத்தையே நாங்கள் ஒழித்துள்ளோம். இந்நிலையில் பயங்கரவாத யுத்தம் என்று கூறாமல் இனவாத யுத்தம் என்று குறிப்பிடப்படுவதால் இது தமிழ் டயஸ்போராக்களின் வெற்றியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இதேவேளை வெளியக பொறிமுறை தொடர்பில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எமது இராணுவத்தினர் இதன்மூலம் காட்டிக்கொடுக்கப்படுவர். இவர்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்திடம் கொண்டு செல்லப்படுவர். எரிபொருள், எரிவாயு இல்லாத போது போராட்டம் நடத்தி ஆட்சியை கவிழ்க்கும் மக்கள், இராணுவத்தினர் தொடர்பில் அமைதியாக இருப்பது எமது இனத்திற்கு செய்யும் அவமதிப்பாகவே இருக்கும். பிரிவினைவாத டயஸ் போராக்களுக்கு ஏற்றவாறே இந்தத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை முழுமையாக செயற்படுத்தினால் இது சமஸ்டி நாடாகவும் மாறும். வடக்கு மாகாணம் சுயாதீன மாகாண சபையாக மாறி தமக்கு ஏற்றவாறு சட்டங்கள் அமைக்கப்படும். இதனை செய்யவே பிரபாகரனும் முயற்சித்தார். இவ்வாறு செய்வது எமது இறையாண்மை மற்றும் சுயாதீனத்துவதற்கான அடியாகவே அமையும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *