யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் கொள்வனவு செய்த டி.என்.ஏ.பரிசோதனை இயந்திரம் சுங்கத்திலே தேங்கிக் கிடக்கிறது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை செய்வதற்கான இயந்திரம் அரசாங்கத்தால் வரிச்சலுகை வழங்கப்படாததால் சுங்க அலுவலகத்திலேயே தேங்கியுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே துணைவேந்தர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் எமது பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடத் தொகுதியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆராய்ச்சியை எந்தப் பொறிமுறை ஊடாகச் செய்வது?
அதற்கான பொறிமுறையை தாருங்கள் என்று சர்வதேசத்தை கேட்டுக் கொண்டிருந்தால் சரியா? நாங்கள் செய்ய முடியாதா?
வெளிநாட்டில் இருந்து எமது மருத்துவ பீடத்தால் அதற்கான இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதனை வெளியே எடுப்பதற்கு வரி செலுத்த முடியாமல் நாம் இருக்கிறோம்.
13 மில்லியன் ரூபா பணம் வற் வரியாக செலுத்த வேண்டியுள்ளது. திறைசேரியிலிருந்து பணத்தை எடுக்க முடியாது.
டிஎன்ஏ சோதனைக்காக எலும்புக்கூடுகளை ஐப்பானுக்கு அனுப்பாமல் நாம் செய்ய முடியும். நாம் யாரிடமும் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதற்கான இயந்திரத்தை இறக்கிவிட்டோம். அது சுங்கத்தில் உள்ளது. அரசாங்கம் வரிவிலக்கை அளிக்கவில்லை. பல்வேறு முயற்சிகளை செய்துவிட்டோம். வரி விலக்கு கிடைத்தால்,அந்த இயந்திரத்தை இங்கு கொண்டு வந்து டிஎன்ஏ பரிசோதனைகளை எமது பல்கலைக்கழகத்திலேயே செய்ய முடியும் – என்றார்.
![]()