இலங்கை

டயஸ்போராக்களையும் புலிகளின் ஆதரவாளர்களையும் மகிழ்வித்த அநுர; சபையில் ஆவேசப்பட்ட நாமல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போது அரசாங்கம் வாக்களிப்பை கோரவில்லை என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ   குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் வாக்கெடுப்பைக் கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக உள்ளன.

எனினும், டயஸ்போராக்களையா? விடுதலைப் புலி ஆதரவாளர்களையா? மகிழ்விக்கப் போகின்றீர்கள் என நாமல் ராஜபக்‌ஷ கேள்​வி யெழுப்பினார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நாமல் ராஜபக்ச,

தற்போதைய அரசாங்கம் அதிவேக வீதி கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளது. அதிவேக வீதியை அமைத்தால் நாய்கள், விலங்குகளுக்கு வீதியைக் கடக்க முடியாத நிலைமை ஏற்படும் என்றே அன்று கூறினீர்கள்.

இந்த வீதிகள் தங்கத்திலா நிர்மாணிக்கப்படுகின்றது என்றும் கேட்டீர்கள். ஆனால் இப்போது உங்களின் தலைவர் எஞ்சியுள்ள அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுக்கின்றார். அன்று நீங்கள் தடைகளை ஏற்படுத்தியிருக்காவிட்டால் இப்போது ஜனாதிபதிக்கு அதிவேக வீதிகளைத் திறந்து வைத்திருக்கவும் முடியும்.

இதேவேளை, இப்போது பொலிஸ் ஆணைக்குழு தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன. அன்று பொலிஸ் ஆணைக்குழு வேண்டும். அது சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கூறிய, நீங்கள் இப்போது சுயாதீனத்துத்தை நீக்கி அதன் அதிகாரத்தை பொலிஸ்மா அதிபருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள்.

இப்போது மிருகக்காட்சி சாலையிலும் விலங்குகள் திருடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நீங்கள் கடற்படைத் தளபதியை கைது செய்துள்ளீர்கள்.

விடுதலைப் புலி புலனாய்வில் இருந்த ஒருவர் வழங்கிய சாட்சிக்கமைய கைது செய்துள்ளீர்கள். சிஐடிக்கு ஏற்றவாறு வாக்குமூலங்கள் பதியப்படுகின்றன.

இவ்வாறான நிலைமையிலேயே பொலிஸ் ஆணைக்குழுவை நீக்கி, பொலிஸ்மா அதிபரின் கீழ் அதிகாரங்களைக் கொண்டுவந்து அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.

பொலிஸ்மா அதிபர் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கடந்த காலங்களில் அரசாங்கத்திற்காக கடைக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர்களுக்கு என்ன நடந்தது என்று சிந்திக்க வேண்டும். பொலிஸாரை பயன்படுத்தி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *