இலங்கை

தாஜுதினின் மரணம் தொடர்பில் மகிந்த ஆட்சியில் மறைத்தோர் இந்த ஆட்சியிலும் பதவிகளில்

தாஜுதினின் மரணத்தின் போது அது தொடர்பான தகவல்களை மறைக்க முயன்றவர்கள் இந்த அரசாங்கத்தினால் பதவி நிலைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

தாஜுதினின் மரணம் தொடர்பில் பி அறிக்கையை தவறாக எழுதியவர்கள் இந்த அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுள்ளனர். அத்துடன் தாஜுதினின் மரணம் நடந்த நாளன்று அலரிமாளிகைக்கும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையே நடந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.

அப்போதிருந்த தொலைபேசி நிறுவனத்தின் தலைவர் அந்த ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருந்தவரே. அவர்களும் இந்த ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தை போன்று நடந்துகொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு இருந்தால் அந்த மரணம் தொடர்பில் தேட முடியாது. இப்போது கஜ்சா என்பவர் தொடர்பில் கூறி மறைக்க முடியாது. உண்மைகளை கூற வேண்டும். கடந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த பலர் இந்த அரசாங்கத்தில் இருக்கின்றனர். அவர்களின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணிந்துள்ளதா என்று தெரியவில்லை. இது தொடர்பில் வருங்காலத்தில் தெரியவரும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *