இலங்கை

செம்மணிப் போராட்டத்தில் தீயிடப்பட்ட ஐ.நா. ஆணையரின் அறிக்கை!

வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேசத்திடம் நீதி கோரி யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த-25 ஆம் திகதி ஆரம்பமான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாளான நேற்றுப் புதன்கிழமை (01.10.2025) பிற்பகல்-01 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமும், தீப்பந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் சமர்ப்பித்திருந்த அறிக்கையை முற்றாக நிராகரித்துக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தீயிட்டு எரிக்கப்பட்டது.

இலங்கையில் இராணுவத்தினரால் எத்தனையோ தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டும் சிறுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழர் பகுதிகளிலும் தொடர்ச்சியாக எத்தனையோ மனிதப் புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு வரும் நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி தீராத சோகத்தைத் தந்துள்ளது.

இங்குவந்து நிலைமையை பார்த்து பாதிக்கப்பட்டவர்களின் கதறல்களைக் கேட்ட பின்பும் சர்வதேச நீதிப் பொறிமுறையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் வலியுறுத்தாது உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அவரது இந்த அறிக்கையின் மூலம் தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களுக்குச் சர்வதேச, சுயாதீனமான விசாரணையை மட்டுமே கோரி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *