புதைகுழியில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்களின் எலும்புக் கூடுகளுக்கு சர்வதேசமே நீதியைப் பெற்றுத்தா; செம்மணியில் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்

செம்மணி மனித புதைகுழியில் மீட்டெடுக்கப்பட்டு வரும் சிறுவர்களின் எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச நீதி கோரி தீப்பந்தம் ஏந்தி நேற்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேசத்திடம் நீதி கோரி யாழ் செம்மணி வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்,சர்வதேச சிறுவர் தினமான நேற்றுப் புதன்கிழமையுடன் (01) நிறைவு பெற்றது.
நிறைவு நாளான நேற்றுக் காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பிற்பகல்-01 மணியளவில் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் என்புக் கூட்டுத் தொகுதிகளுக்கு நீதி கோரிக் கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து தீப்பந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசியப் பேரவையின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இணைந்து கொண்டு எதிர்ப்பு வெளியிட்டனர்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், செம்மணி, கொக்குத் தொடுவாய், மன்னார் மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக செம்மணி மனிதப் புதைகுழியில் சிறுவர்கள் அதிகளவில் கொன்று புதைக்கப்பட்டமைக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
![]()