மனிதப் புதைகுழி…. கவிதை… Pax ரவிச்சந்திரா

மண்ணைத் தோண்டியவர்கள்-
மனங்கள் நொருங்கிட
உருக்குலைந்த உடலங்கள்
விண் நோக்கிய விழிகளிலே
கார்கால மழைகள்
வெள்ளிக் குளத்தில் பூத்த
வண்ணத் தாமரைகளை
வெட்டிச் சாய்த்தவர் யாரோ?
துள்ளித் திரிந்த புள்ளி மான்களை
வேட்டையாடியவர் எவரோ?
கள்ளிருக்கும் வண்ணமலர்கள்
காலம் வருமுன் வாடிக் கருகிட
தீய்த்தவர்; எவரோ?
கானம் பாடிய பூங்குயில்களை
கொன்றவர் அரக்கரோ?

மண்ணுக்குள் மறையாத உண்மையை
மனதுக்குள் புதைத்தவர்கள்
மனசாட்சியையும்
இனவாதத்தீயில் சுட்டெரித்தனரோ?
யுத்தமெல்லாம் இரத்தகாட்டேரிகளின்
“கொலைக் கலையோ? சிந்திடும்
தமிழன் இரத்தமெல்லாம்
உவர் நீரிலும் மலிந்த விலையோ?
எத்தனை உறவுகள் -இங்கே
சிதைந்து போயின?
எத்தனை வண்ணகனவுகள் –
இங்கே கலைந்து போயின?
வென்று வாகை சூடிடப்-
போராடிய வீரம் விளை நிலம்
அடிமையானதோ? கண்ட விடுதலையும்
கனவாய் கலைந்து போனதோ?
ஒன்றாய் உண்டு குடித்து சொந்தம்
கொண்டாடிய உறவும், நட்பும்
ஒரு கணப்பொழுதில்
உயிரிழந்து பிணமானாரோ?
ஊனொடுங்க உயிர் ஒடுங்க
ஈவு இரக்கமின்றி கொன்றழித்துப்
புதைத்து மறைத்தவர் தம் மனச்சாட்சியை
மறைத்திட எதைக் கொல்வார்?
மானிட எச்சங்களை சேதனக் குப்பையாய்
மண்ணில் புதைத்து
இனப்படுகொலையை மறைத்தார்
கல்லறைச் சுதந்திரத்தையும் கருமாதி சடங்கையும்
இழிவு படுத்தி, மனிதத்தை பழித்தார்?

எலும்பு கூடுகளாய் உறவுகள்-
உருக்குலைந்து கிடக்க, மண்ணைத்
தோண்டியதுபோல் மனங்களை தோண்டினால்
உண்மை உயிர்த்தெழாதோ?
உயிர் மூச்சை எரிக்கும் பெருமூச்சோ
மன வேதனையை சொல்ல, வானை
வெறிக்கும் பார்வையில் பொங்கி வரும்
கண்ணீர் உருகும் இதயத்தை மெல்ல,
நீதிக்காய் விம்மும் ஆன்மா
முன்னொரு நாள் மறைந்த ஊராரோ
முள்ளிவாய்காலில் தொலைந்த உறவுகளோ
வெள்ளி முளைக்காத இரவில் புதையுண்ட
விடுதலை வித்துக்களோ-இவைகள்?
என் உறவோ? இல்லை உன் உறவோ?
உயிர் உருகிட கரையும் சொந்தங்களே
இவை எல்லாம் நம் தமிழ் உறவே
மண்ணைத் தோண்டியவர்
மனித எச்சங்களைக் கண்டார்
இதயத்தை தோண்டினால்-மனிதன்
உண்மையைக் காண்பான்? “
சுயதரிசனம் பெறுவான்?

இன்பமே சூழ்க-எல்லோரும் நலமே வாழ்க
எல்லாப் புகழும் இறைவனுக்கே
![]()