இலங்கை

தொழிற்சங்கத்தினரை பலவந்தமாக அடக்க முயற்சித்தால் கடும் விளைவு ஏற்படும்; நாமல் எச்சரிக்கை

அரசாங்கம் , தொழிற்சங்கத்தினரை பலவந்தமாக அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என எச்சரித்த பொதுஜன பெரமுன எம்.பி. நாமல் ராஜபக்ச, 1988 – 1989 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது .அழகான நாடு செழிப்பான வாழ்க்கை என்று குறிப்பிட்டுக் கொண்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.இந்த ஒருவருட காலத்தில் மக்கள் செழிப்பாகவில்லை. ஆனால் அரசின் 159 எம்.பி.க்கள் மாத்திரம் செழிப்பாக உள்ளார்கள் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் கடந்துள்ளது. இனியும் கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிக்க முடியாது.ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினீர்கள்.இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா, மக்கள் பயனடைந்துள்ளார்களா?

ஜனாதிபதியின் ஒருவருட ஆட்சியில் நாட்டின் விவசாயம், கடற்றொழில் ஆகிய துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன . அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து மக்களுக்கு உணவளிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று போராட்டத்தில் குதித்துள்ளார்..கடந்த அரசாங்கம் இயற்றிய மின்சார சபை சட்டத்தை இரத்துச் செய்வதாக மின்சார சேவையாளர்களுக்கு வாக்குறுதி வழங்கியே ஆட்சிக்கு வந்தீர்கள்..அவர்களும் உங்களுக்கு ஆதரவளித்தார்கள்.ஆனால் இன்று அந்த சட்டத்திலுள்ள குறிப்பிடப்பட்ட விடயங்களையே செயற்படுத்த முனைகின்றீர்கள்.

தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் 1988- 1989 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது. காலம் மாறிட்டது. எதிர்க்கட்சிகள் மாற வேண்டும் என்று குறிப்பிடுவதற்கு முன்னர் அரசாங்கம் மாற வேண்டும் .

அழகான நாடு செழிப்பான வாழ்க்கை என்று குறிப்பிட்டுக் கொண்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.இந்த ஒருவருட காலத்தில் மக்கள் செழிப்பாகவில்லை. ஆனால் அரசின் 159 எம்.பி.க்கள் மாத்திரம் செழிப்பாக உள்ளார்கள். 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று விமர்சித்தவர்கள். 75 ஆண்டுகாலத்தில் செல்வந்தர்களாகியுள்ளமை கேள்விக்குரி யதாகியுள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *