இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து அரசு கூறியதை ஐ.நா. ஆணையாளர் ஏற்றுள்ளார் நாட்டில் இனவாதம், மதவாதம் மற்றும் மக்களை ஒதுக்கி

ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் எங்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை விடயங்கள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் இனவாதம், மதவாதம் மற்றும் மக்களை ஒதுக்கி வைக்கும் கைது செய்யும் முறைமைகள் இல்லையென்று கூறியுள்ளோம். ஆனால் எங்களுக்கு தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளனஎன்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவரிடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நடந்த கடத்தல், காணாமல் போகச் செய்தமை, கொலைகள் மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் எங்களால் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட அடிப்படை விடயங்கள் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் இனவாதம், மதவாதம் மற்றும் மக்களை ஒதுக்கி வைக்கும் கைது செய்யும் முறைமைகள் இல்லையென்று கூறியுள்ளோம். ஆனால் எங்களுக்கு தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன.
1971இல் மக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன. 83 கறுப்பு ஜுலை மற்றும் 87, 90 காலத்தில் காணாமல் போன சம்பவங்கள் மற்றும் 30 வருட யுத்தத்தால் ஏற்பட்ட விடயங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். உலகில் எந்த நாட்டிலும் 10, 15 வருடங்களிலும் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரே நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். சில சம்பவங்கள் நடந்து 40, 50 வருடங்கள் ஆகின்றன. இது தொடர்பான விடயங்களை தீர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
ஒருவர் தமிழர் அல்லது முஸ்லிம் அல்லது சிங்களவர் என்ற காரணத்திற்காக இந்த நாட்டில் அவ்வாறான அநீதிகள் நடக்காது. எவ்வாறாயினும் முன்னர் நடந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் செயற்படுவோம். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளோம். அதற்கான புதிய சட்டமூலம் தொடர்பான குழுவின் பணிகள் பெருமளவில் முடிவடைந்துள்ளன. இதனை நாங்கள் ஜெனிவாவில் கூறியுள்ளோம் என்றார்.
![]()