அர்ச்சுனா எம்.பி.சவால் விட்ட போது பிரபாகரனைப் பயங்கரவாதி என்று சபையில் கூறாத சிங்கள எம்.பி.க்கள்

பிரபாகரன் பயங்கரவாதி என்று இங்கே யாராவது கையுயர்த்தி கூறுங்கள் பார்ப்போம் என சுயேட்சைக்குழு 17 இன் யாழ் மாவட்ட எம்.பி அர்ச்சுனா இராமநாதன் சவால்விட்டபோது சபையில் இருந்த எந்தவொரு சிங்கள எம்.பி.யும் கையுயர்த்தி பிரபாகரன் பயங்கரவாதி என்று கூறவில்லை.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சவால் விட்ட
அவர் மேலும் பேசுகையில்,
பிரபாகரன் பயங்கரவாதி என்று இங்கே யாராவது கையுயர்த்தி கூறுங்கள் பார்ப்போம். இங்கே எவரும் கையுயர்த்தவில்லை. அதேபோன்று ரோகண விஜேவீரவும் பயங்கரவாதி அல்ல என்று என்னால் கையுயர்த்தி கூற முடியும். நாங்கள் வடக்கில் உங்களை சிங்கள பிரபாகரனாக கருதியே உங்களுக்கு வாக்களித்தோம்.
1988இல் அரசாங்கத்தின் கேவலமான வேலைகளுக்கு எதிராக போராடினீர்கள். . இதன்படி நீங்களும் எங்களை போன்றவர்கள் என்றே எமது மக்கள் நினைத்தனர். எங்களுக்காக இறந்த பிரபாகரனை நான் கடவுள் என்றே கூறுகின்றேன். அதேபோன்று ரோகண விஜேவீரவையும் கடவுளாகவே பார்க்கின்றோம். ஆனால் உங்களின் வடக்கில் உள்ள எம்.பிக்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் டவுசர், டை, கோர்ட் அணிந்துகொண்டு இங்கே இருக்கின்றீர்கள் என்றால் யுத்தகாலத்தில் உங்களின் தலைவர்களே உங்களை காப்பாற்றியுள்ளனர். அந்தக் காலத்தில் நீங்கள் கட்டில்களுக்கு அடியிலேயே இருந்தீர்கள் . இராணுவத்தினரே உங்களை காப்பாற்றினர். அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கின்றீர்கள். இப்போது குடு நாமல் என்றும் கூறுகின்றீர்கள்.
நான் சிங்கள மக்களை மதிக்கின்றேன். அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றுள்ளார். அங்கே நாங்கள் மைதானம், பாஸ்போர்ட் அலுவலகத்தை கோரவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறே கூறுகின்றேன். ஆனால் இதுவரையில் அதுபற்றி கதைத்துள்ளீர்களா? நான் ஜெனீவா செல்வேன். எனக்கு நடந்தவை தொடர்பில் கூறுவேன். எமது மக்களுக்காக அங்கே முன்னிற்பேன். வேண்டுமென்றால் திரும்பி வரும் போது கைது செய்யலாம். நான் உங்களை காப்பாற்றியவர்களை குழிதோண்டி புதைக்க மாட்டேன். பிரபாகரன் குண்டுதாக்குதல்களை நடத்தியதாக கூறுகின்றீர்கள். வேண்டுமென்றால் அதற்காக நான் மன்னிப்பு கோருகின்றேன். நீங்கள் ரோகண விஜேவீர செய்தவை எல்லாம் சரியென்று கூறுங்கள் பார்ப்போம்.
இதேவேளை எனக்கு பாதுகாப்பு வேண்டும். அது மக்களிடம் செல்ல அல்ல. இங்கு பபாக்கள் உள்ளன. அவர்கள் அருகில் வந்தால் வெட்டுவார்களா என்று தெரியவில்லை. நான் ஜெனீவா சென்று எமது நாட்டில் எமது மக்களை எப்படி கொன்றார்கள் என்று கூறுவேன். நான் எனக்கு வாக்களித்த மக்களுக்காகவே முன்னிற்பேன். நான் சிங்கள மக்களையும் நேசிக்கின்றேன். எப்போதாவது நான் சிங்கள பிரதேசத்தில் வாக்கு கேட்பேன். அப்போது எத்தனை பபாக்கள் எஞ்சுவார்கள் என்று பார்ப்போம் என்றார்.
![]()