நாமலின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் சதி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்கு இலக்காக்க திட்டமிடப்படுவதாகவும், இதனூடாக அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி அதனை பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதலாக காண்பிக்க முயற்சிக்கப்படுவதாகவும் தாம் சந்தேகிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே சாகர காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த நாட்களில் நாளொன்றுக்கு நான்கு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறும் நிலைமை இருந்தது. இதற்கு முன்னர் 88/89 காலத்திலேயே இவ்வாறு இருந்தது. விடுதலைப் புலிகள் காலத்தில்கூட இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறவில்லை. இப்போது நடக்கும் துப்பாக்கிச் சூடுகளை பாதாள குழுக்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களாகவே குறிப்பிட முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் பெயரை தொடர்புபடுத்த முயற்சிக்கின்றார். இது பயங்கரமான சூழ்ச்சியின் பகுதியாகும். இடம்பெறும் துப்பாக்கிச் சூடுகளை பாதாள குழுகளுக்கு இடையில் நடக்கும் சம்பவங்களாக காட்டிக்கொண்டு, இப்போது அதிகளவான அச்சுறுத்தல் உள்ள நாமல் ராஜபக்ஷவை போதைப் பொருள் தொடர்பான குற்றத்துடன் தொடர்புபடுத்த முயற்சிக்கப்படுகின்றது.
அரச தரப்பினாலேயே அவரின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தி பாதாள குழுக்களுக்கு இடையிலான பிரச்சினையாக காட்டும் முயற்சியா என்ற சந்தேகங்கள் எங்களுக்கு உள்ளன. இதனால் சுனில் வட்டகல எவ்வாறு இதனை கூறினார்? நாமல் ராஜபக்ஷ தொடர்பில் பொய்களை கூறுகின்றீர்களா? இதற்கான சாட்சிகள் உள்ளனவா? நாமல் ராஜபக்ஷவை போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்கு இலக்காக்கி, நீங்களே அவரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அதனை பாதாள குழுவின் மீது சுமத்த திட்டமிடப்படுகின்றதா? என்பதனை பிரதி அமைச்சர் கூற வேண்டும் என்றார்.
![]()