கவிதைகள்

அஸ்தியும்- ஆறடி மண்ணும்…. கவிதை… Pax ரவிச்சந்திரா

வங்ககடலும் வாடி ஒடுங்கிட
நந்திக்கடலும் நடுங்கி மெலிந்திட
ஈழத் தமிழினத்தை அழித்திட
சிங்கள அரசின் பெரும் படையெடுப்பு.

விண்ணும் மண்ணும், வீசு தென்றலும்,
அலையும் கடலும் அதிர்ந்திட
நிலம், நீர், வானின்று
இரவு பகலாய் ஓயாத குண்டு வீச்சு

கண்ணில் பட்ட உயிர்கள் கருகிச் சாய்ந்திட
விண்ணில் வாழும் தேவர்களும் கண்ணீர் சிந்திட
சுட்டும், வெட்டிச்சாய்த்தும் அரக்கர்களின்
இனவாத வெறியாட்டம், ஆறாய் குருதியோட்டம்

கன்னியர், அன்னையர் கற்பினைச் சூறையாடி
தணியாத காமத்தை தணித்து,
குழந்தைகளை மிதித்துக் கொன்று
கொலைவெறியாடும் கோர இராட்சதர்களால்
தமிழ் ஈழ மண்ணில் கொடிய இனவழிப்பு

ஊர் எரிய-உறவெரிய வாழ்ந்த மனைகளும்
வணக்கத் தலங்களும் ஒன்றாய் தீயில் எரிய
தீமேயும் பூமியான தேசத்தில் வாழிடம் துறந்து
புகலிடம் தேடி ஓடுகின்றார் அப்பாவித் தமிழர்

கட்டிய துணியோடும், கண்ணீர்
சிந்தும் விழிகளோடும், உறவுகள்
விழுந்தாலும், உதவிட வழியின்றி
உயிரைக் கையிலேந்தி ஓடுகின்றார்

 

 

 

 

 

கஞ்சுக்கும், கந்தைக்கும் வழியின்றி
மாண்ட உறவுக்கு மண்போட்டிட நேரமின்றி
வாட்டிடும் காயத்துக்கு மருந்துமின்றி
நோன்புற்ற வயிற்றோடு நொந்து ஓடுகின்றார்

செல்லும் திசையெல்லாம் தீ விரட்டிட
தீமேயும் ஊரும் உறவும் தீய்ந்த
கனவைச் சொல்லிட வழிமறிக்கும்
வங்கக் கடல், கொதிக்கும் நந்திக்கடல்

மண்ணும் கடலும் வானும்
தீ மழை பொழிய மண்மீது கொண்ட
காதல் விடுதலைப் போராய் எரிய
அனலில் விழுந்த புழுவாய்த் தமிழர்

ஓயாத எறிகணைகள் மூட்டிடும் தீமழையில்
கருகும்; ஆயிரமாயிரம் உடலங்கள்
முண்டங்களாய்-முழு உடலங்களாய்
துண்டங்களாய்-சதைப் பிண்டங்களாய்
அங்கமிழந்தவைகளாய் எங்கும் பிணங்கள்

வாழ்வில் இணையாத காதலர் சாவில்
இணைந்திட, வாழ்வில் இணைந்தரை
மரணம் பிரிந்திட, யுத்த பூமியில்
சாவுதான் வாழ்வு என்றானது

தீயும் புகையும் எங்கும் பரவிட
சிந்திய குருதியால் -மண்ணும் சிவந்திட
மணந்திடும் பிணங்களால் தென்றலும் நாறிட
தீ மேயும் பூமியில் கொடுந் தீ மிதிப்பு

உணவின்றி, நீரின்றி, மருந்தின்றி-
நந்திக்கடலோரம் அல்லாடும் மானுடத்தை
புள்ளி மான்களாய் வேட்டையாடிய கோரம்
வரலாறு காணாத அகோரம்

யுத்த சூனிய பிரதேசமெங்கும்
செத்து மடியும் உயிர்கள்
புனித பிரதேசமெங்கும் ஓயாது
ஒலிக்கும் இனவாதப் பிரித் ஒலிகள்

வெள்ளி மணற்கரையெங்கும்
புள்ளி வைத்துப் போட்ட பிணக்கோலங்கள்-
குழந்தை முதல் முதியோர் வரை
குண்டு பட்டு; வீழ்ந்து கிடந்த அவலங்கள்

வாழிடம் துறந்து புகலிடம் தேடி
ஓடிக் களைத்;த மானுடம் பிணமான
சொந்தங்களை வலம் வந்து கண்ணீர்
குடமுடைத்தே கிரியை செய்யும் தமிழினம்

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆண்டிட
போராடி வீழ்ந்தவர்க்கும், தீய்ந்து
சாம்பலானவருக்கும்,வாழ்ந்த போதும்
நிலமில்லை, மடிந்தபோது அமைதியில்
உறங்கிட ஆறடி மண்ணுமில்லை.

 

 

 

 

 

இன்று தணிந்தததோ தமிழன்
சுதந்திர தாகம்? இன்று மடிந்ததோ
தமிழ் ஈழ மண்ணிற்காய்
யாத்த விடுதலை யாகம்?

மண்ணின் தணல் ஆறவில்லை-
மனத் துயர் ஓயவில்லை-
விண்ணும், மண்ணும், மாறவில்லை
வீரத் தமிழன் மாண்டுவிட்டான்

இது மயான பூமியல்ல-விடுதலையின்
விளை நிலம், மானிடரே
அமைதி காப்பீர்.!
ஈகைச் சுடரேற்றி, நீதி கேட்பீர்

முப்படை கொண்டு விடமாலை சூடி,
விடுதலையின் அனல் ஏந்தி
தாய் மண்ணை மீட்டிட-தமிழ் மகன்
ஆடிய உருத்திர தாண்டவம் ஓய்ந்தது

மா வீரன் விழுந்திட-கண்ட கனவு கலைந்திட
வீர வரலாறு முடிவுக்கு வந்தது
சிந்திய குருதியிலே தணியாத தாகம்
சிவந்த விழிகளிலே நெற்றிக்கண் காட்டும் பாவம்

மலர்கள் வேண்டாம்-ஒரு
மாலைக்குள் வாடிவிடும்
நெய் விளக்குகள் வேண்டாம்
விட்டில்கள் விளையாடி மடிந்து விடும்
கண்ணீர் அஞ்சலி வேண்டாம்
இது வீர காவியம்

 

 

 

 

Pax Ravichandra

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *