Uncategorizedஇந்தியா

தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது – விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில்  நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய்  35 நிமிடங்கள் வரை   உரையாற்றியுள்ளார்.

இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது ”

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீற்றர் தூரத்துக்கு அதிரும்.

மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். சினிமாவிலும், அரசியலிலும் நமக்கு பிடித்தவர் எம்ஜிஆர். அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான்.

நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள்; இப்போ பாருங்க, நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம். எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம்.

யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா?

எல்லாருக்கும் எல்லாமும் என்ற அரசியலை 1967-ல் அண்ணா கொண்டு வந்தார். அண்ணா கொண்டு வந்த சமத்துவ அரசியலே திராவிடம். அண்ணாவின் குறிக்கோளில் இருந்து மு.க.ஸ்டாலின் முற்றிலும் விலகிவிட்டார்.

எம்ஜிஆர் உருவாக்கிய கொள்கை, அதை வழிநடத்திய ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து தடம் மாறி பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழகத்தில் பாஜக பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை அடைவதற்கு அதிமுகவின் இன்றைய தலைமை எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கிறது.

அண்ணாவின் கொள்கைகளையும், எம்ஜிஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி அதை அரசியல் வெற்றியாக மாற்றி 2026-ல் மிகப்பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி,  அந்த கொள்கைகளை நிறைவேற்றுவேன்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரேயொரு கோரிக்கை .எமது மீனவர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகின்றனர். ஆகையால், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு தாருங்கள் அது போதும்.

பாசிச பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மோடியின் முரட்டுப் பிடிவாதத்தால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது.

234 தொகுதிகளிலும் உங்கள் வீடுகளில் உள்ளவர்கள்தான் வேட்பாளர்களாக நிற்பார்கள். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் விஜய்தான் இந்த கட்சியின் சின்னம். தமிழ் மக்கள் யாவரும் என் ரத்த உறவுகள். அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் வந்துள்ளேன்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் தாய்மாமன் நான். தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். மக்களை மதிக்கிறேன். மக்களை வழிபடுகிறேன். உங்களுக்காக உண்மையாக உழைக்க உங்கள் விஜய் வந்திருக்கிறேன். வாழ்நாள் முழுக்க மக்களுடன் இருப்பேன். நல்லது செய்ய மட்டுமே வந்திருக்கிறேன். மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடன்” இவ்வாறு விஜெய் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *