முகநூல்

தமிழரசுக்கு ”கதவடைத்த” தமிழர்களின் தேசம்! …. கே.பாலா.

”எம்முடன் எந்தக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது தயாரிக்கப்பட்ட ஜெனீவாவுக்கான கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடாது” என அறிவித்த சுமந்திரன் , ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடாது அறிவித்த வடக்கு,கிழக்கு ஹர்த்தாலுக்கு அந்தக்கட்சிகளின் ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்?”—-கே.பாலா
————————————————————-
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவ பிரசன்னத்தை அகற்றக்கோரி இலங்கை தமிழ் அரசுக் கட்சி வடக்கு,கிழக்கு மாகாணங்களில் விடுத்திருந்த பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கான அழைப்பு பெரும்பாலான பகுதிகளில் புறக்கணிக்கப்பட்டு தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்களும் வர்த்தகர்களும் அமைப்புக்களும் கதவடைப்பு செய்துள்ளமை வெறுமனே ஹர்த்தால் மீது கொண்ட வெறுப்போ அல்லது அரசுக்கான ஆதரவோ அல்ல.ஒட்டுமொத்தமாக தமிழரசுக்கட்சியின் சர்வாதிகார,தலைக்கன அரசியல் மீது கொண்ட வெறுப்பாகவே வெளிப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம், முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு , வடக்கு – கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அதனால் இராணுவத்தினரை வெளியேற்றுமாறும் கோரி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
முன்னதாக கடந்த 15 ஆம் திகதி ஹர்த்தால் போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் மன்னார் மடு தேவாலய பெருநாள் என்பதால் 18 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.இதன் மூலம் இந்த ஹர்த்தால் அழைப்பு முறையாக திட்டமிடப்படாது, ஏனைய தமிழ் தேசியக்கட்சிகள், வர்த்தக சங்கங்கள், வடக்கு,கிழக்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் , அமைப்புக்கள் என எவருடனும் கலந்துரையாடப்பட்டது அவசர அவசரமாக விடுக்கப்பட்டமை வெளிப்பட்ட நிலையில் இந்த போராட்டத்திற்கு பல தரப்புக்களிடமிருந்து எதிர்ப்புகள் வெளிப்படத் தொடங்கின.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் தனிநபரொருவர் தனது தனிப்பட்ட,தலைக்கன அரசியலுக்காக ஹர்த்தாலைப் பயன்படுத்த முற்படுத்துவதாகத் தெரிவித்து ஓரிரு கட்சிகள் தவிர்ந்த ஏனைய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் , அமைப்புக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து பின்வாங்கின. இதனையடுத்து, ஹர்த்தால் போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையிலேயே திங்கட்கிழமை ஹர்த்தால் இடம்பெற்றநிலையில் வடக்கு.கிழக்கில் அரசுக்கும் இராணுவத்திற்கும் பதிலாக தமிழரசுக்கட்சிக்கும் அதன் தலைக்கன அரசியலுக்கும் தமிழ்தேசம் கதவடைப்பு செய்தது.
தமிழரசுக் கட்சி விடுத்த இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு புறக்கணிக்கப்பட அதன் பதில் பொது செயலாளரான எம்.ஏ.சுமந்திரனின் சர்வாதிகார ,தலைக்கன அரசியலே பிரதான காரணமாக இருந்தது.இதற்கு இரு சம்பவங்களை மட்டும் புரிந்து கொண்டால் போதுமானது.ஆனால் சுமந்திரனோ அல்லது அவருக்கு உசுப்பேற்றும் சில அல்லைக்கைகளோ புரிந்துகொண்டாலும் புரியாதது போலவும் தெரிந்து கொண்டாலும் தெரியாததுபோலவும் அல்லது ஏனைய தரப்புக்களை வசைபாடியும் விமர்சித்தும் குற்றம் சாட்டிக்கொண்டும் தமது தலைக்கன அரசியலை தொடரவே செய்வர்.
இதில் முதல் காரணம்;விரைவில் ஜெனீவா கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமாரை முதன்மைப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை, ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையொப்பம் இடவில்லை . இதற்கு தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளரான எம்.ஏ. சுமந்திரன் கூறிய காரணம் ”தமிழ் தேசியக்கட்சிகளில் பெரிய கட்சி.நாம். எமக்கு 8 எம்.பி.க்கள் உள்ளனர். அவ்வாறான நிலையில் எம்முடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது தயாரிக்கப்பட்ட ஜெனீவாவுக்கான கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடாது”என்பதுதான்.
ஆனால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு கடிதத்தை அனுப்பும் முயற்சியை முன்னெடுத்த நிலையில் இந்தக் கடிதத்திற்கு ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி ஒப்புக்கொண்டது. கையொப்பமிடவும் சம்மதித்தது. எனினும், இறுதிக் கட்டத்தில், அக்கட்சி பல விடயங்களில் பொய்யுரைத்தது. திட்டமிட்ட பொய்களைக் கூறி இணக்கப்பாட்டைத் தவிர்த்தது.குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, தங்களுக்குள் பேசப்பட்ட விடயங்களுக்கு மாறாக, அக்கட்சியின் செயலாளர் சுமந்திரன் ஊடகங்களிடம் தவறான தகவல்களைத் தெரிவிதுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
சரி சுமந்திரன் கூறுவதுபோல் தமிழரசுக்கட்சி யுடன் கலந்து பேசாது ஜெனீவாவுக்கான கடிதம் தயாரிக்கப்பட்ட பின்னர் அதில் கையொப்பமிடுமாறு கேட்கப்பட்டிருந்தால் அது தவறு. நிச்சயம் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். அதனால் தமிழரசு அதில் கையொப்பமிட மறுத்தது நியாயம் என்று வைத்துக்கொண்டால் வடக்கு,கிழக்கு மாகாணம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்தை நடத்த சுமந்திரன் எந்தக்கட்சியினரோடு , அமைப்புகளோடு ,வர்த்தக் சங்கங்களோடு,பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளோடு கலந்துரையாடினார்? அவ்வாறு கலந்துரையாடாமல் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து விட்டு ஹர்த்தாலை தோற்கடிக்க சில கட்சிகள் திட்டமிட்டு செயற்பட்டதாகவும் யாழ் மக்களையிட்டு தான் வெட்கமடைவதாகவும் எவ்வாறு கூற முடியும்?
அரசுக்கு ஒரு ஒரு எதிர்ப்பை காட்ட வேண்டுமானால் சாதாரணமாக ஒரு போராட்டத்தை நடத்தி விட்டு போயிருக்க முடியும். ஆனால் ”வடக்கு,கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும்”என்ற மிகப்பெரிய கோரிக்கையை தமிழரசுக்கட்சி முன்வைத்த நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையில், அரசுக்கு பாரிய அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேசத்தை திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில் ஹர்த்தால் போராட்டத்தை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அடர்க்கு ஏனைய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை நிச்சயம் கோரியிருக்க வேண்டும் கலந்துரையாடியிருக்க வேண்டும். உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்க துரோகிக் கட்சியான இராணுவ ஒட்டுகுழு வாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலக் கதவை தட்டி சரணடைய முடிந்த தமிழரசுக்கட்சியின் தலைவரோ அல்லது அதற்கு அனுமதியளித்த செயலாளரோ ஏன் தமிழ் தேசியக்கட்சிகளுடன் இது தொடர்பில் பேச,ஆதரவைக் கோர விரும்பவில்லை?
இரண்டாவது காரணம்;முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகிய பின்னர் காணாமல்போன நிலையில் முத்துஐயன்கட்டுக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணம்.முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சர் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகரில் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமைஅப்புறப்படுத்துவதற்குச் சில நாள்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்துள்ளது .இங்கு சென்ற 5 இளைஞர்களே இராணுவத்தினரால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் அருகில் உள்ள குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை முதன்மைப்படுத்தியே சுமந்திரன் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த இளைஞர்கள் இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள். இராணுவத்திற்காக வேலைசெய்பவர்கள். இராணுவம் கொடுக்கும் பொருட்களை விற்று பணம் கொடுத்து பங்குபிரிப்பவர்கள்.இராணுவத்திற்கு போதைப்பொருட்களை விநியோகிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டும் இவர்கள் மீது அப்பகுதி மக்களினால் முன்வைக்கப்படுகின்றது.இவர்களின் தொலைபேசி இலக்கங்களை இராணுவத்தினர் பத்திரப்படுத்தி வைக்குமளவுக்கு அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். இவ்வாறான இந்த இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சசினைகளினால் தொடர்புபட்ட சம்பவத்திற்கு சுமந்திரன் அவசரப்பட்டு விடுத்த ஹர்த்தால் அழைப்பு மக்கள் மத்தியில் விசனத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதனால் இந்த ஹர்த்தாலில் மக்கள் ஆற்வம் காட்டவில்லை.
ஜெனீவாவுக்கான கடித விடயத்தில் தமிழ் தேசியக்கட்சிகளுடன் ஒத்துப்போக மறுத்து நாம் தான் பெரிய கட்சி என்ற ஆணவத்துடன் தனது தலைக்கன அரசியலுக்காக ஜெனீவாவில் தமிழர்சார்பில் ஒரு அழுத்தத்தை கொடுக்க மறுத்த , வடக்கு,கிழக்கு தழுவிய ஹர்த்தால் தொடர்பில் ஏனைய தரப்புக்களுடன் கலந்துரையாடி ஆதரவு கோர விரும்பாத, முத்துஐயன்கட்டுக்குள சம்பவம் தொடர்பில் தெளிவின்றி ஏனையவர்கள் போராட்டங்களை அறிவிக்க முன்னர் தாம் முந்தி பெயர் போட்டுக்கொள்ளவேண்டும் என்ற அவசரத்தில் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்த தலைக்கன அரசியல் செய்யும் தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளரான எம். ஏ.சுமந்திரனுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் ஒரு பாடத்தை கற்பிக்கவே தமிழரசின் பதில் பொது செயலாளராக சுமந்திரன் விடுத்த வடக்கு ,கிழக்கு மாகாணங்கள் தழுவிய ஹர்த்தால் போராட்டத்தை தமிழ் மக்கள் தோற்கடித்து தமிழரசுக்கு கதவடைப்பு செய்தனர்.
தனது தலைக்கன அரசியலினாலும் பிடிவாதத்தினாலும், மிரட்டல்களினாலும் தமிழரசுக்கட்சியினரை கட்டி ஆள்வது,ஆட்டுவிப்பதுபோல் போல் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளையும் வர்த்தக சங்கங்களையும் ,பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், பொதுமக்களையும் ஆட்டுவிக்கலாம் என்ற சுமந்திரனின் ஆணவத்திற்கு ,அடாவடிக்கு தமிழ் மக்களினால் வழங்கப்பட்ட மரண அடியாகவே வடக்கு,கிழக்கு மாகாண ஹர்த்தால் போராட்ட தோல்வி அமைந்துள்ளது.இந்த தோல்வி தமிழ் மக்களுக்கான தோல்வியோ அல்லது தமிழ் மக்கள் போராட்டங்களில் நம்பிக்கை இழந்து விட்டார்களோ என்பதல்ல. இது சுமந்திரனின் தலைக்கன அரசியலுக்கு மக்கள் புகட்டிய பாடம்.இதிலிருந்தும் சுமந்திரன் பாடம் கற்றுக் கொள்ளவில்லையாயின் தமிழ் தேசிய அரசியலிலிருந்து தமிழரசுக்கட்சி காணாமப்போகும். அதற்கான முன் அறிவிப்பே தமிழரசுக்கட்சிக்கும் சுமந்திரனுக்குமான தமிழ்மக்களின் கதவடைப்பு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *