இலங்கை

இளைஞன் கொலை விவகாரத்தில் இராணுவத்தினரை பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது

முத்தையன்கட்டு இளைஞன் கொலை விவகாரத்தில் இராணுவத்தினரை பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனியொருபோதும் இடம்பெறாத வகையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

முத்தையன்கட்டு இளைஞன் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முத்தையன்கட்டு இளைஞன் கொலை தொடர்பில் பொலிஸார் முரண்பாடான வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் அவர்கள் அத்துமீறிய வகையில் முகாமுக்குள் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்கள்.இவ்விடயத்தில் இராணுவத்தினரை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவது வெளிப்படையாக தெரிகிறது.

ஒருவரை தாக்கி கொலை செய்யும் அதிகாரத்தை இராணுவத்துக்கு யார் வழங்கியது. யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் முல்லைத்தீவில் இவ்வாறான சம்பவங்கள் இன்றும் இடம்பெறுகின்றன.

முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞன் இவ்வாறு கொலை செய்யப்பட்டதை அலட்சியப்படுத்தும் அரசாங்கம் அம்பாந்தோட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தால் அரசாங்கம் எவ்வாறான வகையில் செயற்பட்டிருக்கும்.

முத்தையன்கட்டு சம்பவம்; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனியொருபோதும் இடம்பெறாத வகையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.இவ்விடயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *