பலதும் பத்தும்

சங்க இலக்கியங்கள் கூறும், வரையாடுகள் பற்றி தெரியுமா?

சங்க இலக்கியங்கள் வரையாட்டினை ‘வருடை’ என குறிப்பிட்டுள்ளன.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் ‘ஓங்கு மால்வரை வரையாடு’ என சுட்டிக்காட்டப்படுகிறது.

உயர்ந்த மலைகளிலே உலவுகிற வரையாடு என்பது இதன் பொருளாகும். சங்க காலம் தொட்டே தமிழரின் வாழ்வியலோடு பயணித்த ஒரு விலங்கினம் இந்த‘வரை’ஆகும். வரை என்ற தமிழ்ச்சொல்லிற்கு மலை என்று பொருள்.

ஆட்டினத்தைச் சேர்ந்தது என்பதால், இதற்கு மலைகளில் வாழ்கின்ற ஆடு அல்லது வரையாடு என்று பெயர் வந்தது.

இந்தநிலையில், அழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன விலங்கினங்களில் ஒன்றான இந்த வரையாடுகள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்று, இந்தியாவின் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக அந்த கணக்கெடுப்பின் ஊடாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 14 வனக்கோட்டங்களில் 177 வரையாடு வாழ்விடப்பகுதிகளில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான நாட்களில் 8000 பேர் பங்களிப்புடன் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றிருந்தது.

நீலகிரி வரையாடு குட்டிகள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பிறக்கின்றன. தாய், குட்டிகள் இரண்டையும் காணும் வகையில் குறித்த கணக்கெடுப்பு ஏப்ரலில் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் அரசின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் வரையாடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21% அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button