பலதும் பத்தும்

ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரிக்கும் ‘கிங்டம்’ திரைப்படம்?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘கிங்டம்’, ஈழத் தமிழர்களை மிக மோசமாகச் சித்தரித்துக் காட்டுவதாகத் தெரிவித்து தமிழக அரசியல்வாதிகள் பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்டத் தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில், ஈழத் தமிழர்களின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது என அரசியல்வாதிகள் கண்டித்துள்ளனர்.

ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்கள் என அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு எனவும் மிகப்பெரும் மோசடித்தனம் எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழச் சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ‘கிங்டம்’ திரைப்படம் வெளியாகிய திரையரங்குகளுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களைத் தமிழக பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button