முகநூல்
இந்த உலகத்துல எதுவும் சும்மா கிடைக்காது.

இந்த உலகத்துல எதுவும் சும்மா கிடைக்காது. அதனால நமக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து, அதுல கடுமையா உழைக்கணும். அப்படி உழைப்பதையே ரசனையோட செஞ்சோம்னா, வெற்றியும் சீக்கிரம் கிடைக்கும்; இரட்டிப்பு பலன் தர்றதாகவும் இருக்கும்!” இப்படி விகடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் மதன் பாப்.
மதன் பாப் இற்குப் பிடிச்ச துறை இசை, அற்புதமான கிட்டார் வாத்திக்காரர், அவரின் தம்பி பாபு தான் ட்ரம்ஸ் வாத்தியக்காரர். தம்பி பாபுவின் பெயரைத் தன் பெயரோடு ஒட்டியதாலோ என்னவோ நீங்கள் கேட்டவை படத்தின் “அடியே மனம் நில்லுனா” பாடலில் ட்ரம்ஸ் வாத்தியக்காரராகவே தோன்றுவார்.
முறையான அறிமுகம் வானமே எல்லையில் கிட்டினாலும் என்போன்றவர்களுக்கு ஜாதி மல்லி வழியாகத் தான் இன்னும் நெருக்கம். ஆனால் அதை தமிழ் விக்கிப்பீடியாவும் மறந்து விட்டது. இவர் நடுவராக இயங்கிய அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியையும் விட்டுவைப்பதில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் இவருடன் இயங்கி இருக்கிறார். எஸ்பிபி போன்றோரை வைத்து இசைக் கச்சேரி நடத்தியிருக்கிறார், இவரின் மகள் “ஆலப்போல் வேலப் போல்” பாடும் போது திடுதிப்பாக “வேலங்குச்சி நானெடுத்து” என்று எஸ்பிபி வருவாரே அந்த ஸ்வர்க்க நிமிடம் 
“நமக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து, அதுல கடுமையா உழைக்கணும்” என்ற அவரின் கருத்தோடு இன்னொன்றையும் சேர்க்க வேண்டும் “நம்மைப் பிடிச்ச துறைக்கும்” அதுவே அவரும் செய்தார். வெறும் அந்த மரங்கொத்திப் பறவைச் சிரிப்பை மட்டும் மூலதனமாக வைக்காமல் தன் பாத்திரங்களை இயல்பாக்கிக் கொண்டவர்.
நகைச்சுவைக் கலைஞனுக்கும் இசைக்கும் ஏதோ ஆன்ம பந்தம் போல உங்களைப் போலவே திடீரென்று மறைந்து விட்ட விவேக் ஐயும் நினைக்க முடிகிறது.
இவ்வளவு விரைவாகவா? என்று கேட்க வைத்த பட்டியலில் நீங்களும் இணைந்து விட்டீர்கள்.
கானா பிரபா
![]()