கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 15 ….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

நூலைப்படி என்பதற்கு வேறு விதமாக பொருள் எடுத்துக்கொண்டு நீலவேணியின் நிறங்கள் என்ற பிரபல எழுத்தாளரின் நாவலை மட்டும் படித்துவிட்டு அதில் வரும் வீரவல்லவன் வேல்விழிக்கு செய்தது முறையா என்று கேட்டபடி விவாதித்து வாசிப்பு அனுபவத்தை ஒரு பொழுதுபோக்காக மாற்றக்கூடாது என்று என்னவெல்லாமோ அறிவுரை கூறுகிறார்.

சீக்கியமத நூலான குரு கிரந்த் சாஹிப் நீதிமன்றத்தில் உள்ளது. இப்படி எல்லா மத நூல்களும் இருக்க சைவர்கள் மட்டும் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருள்வது இனியே என்று சொல்லி சிவனை சிக்கெனப்பிடித்து அவரையும் எழுந்துசென்று ஒன்றும் செய்யவிடாமல் ஆக்கிவிட்டார்கள். ஆதலால் திருமாலின் பத்து அவதாரங்களில் மட்டும் கவனத்தை செலுத்துவோம்.

ஒவ்வொரு அவதாரத்துக்கும் காரணமும் அதைச்சார்ந்த கிளைக்கதைகளும் இருக்கின்றன. இதற்காகத்தான் இதைச் செய்தார் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
கணக்கும் இருக்கிறது விடையும் தெரிகிறது. இந்த அவதாரங்களினால் நமக்கு கிடைக்கும் விடை மக்களுக்கு தீமை ஏற்படும்போது காக்க வந்ததே அவதாரம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆனால் மனிதப் பிறப்பில் நமக்கு நினைவில் இல்லாத போன பிறவியில் நடந்த ஒன்றிற்காக இப்பிறவியில் நன்மையாகவோ தீமையாகவோ விடை காண்கிறோம். வினோதமாக இல்லையா? ஆசிரியர் கூட்டினாலும் கழித்தாலும் மாணவன் கூட்டினாலும் கழித்தாலும் விடை ஒன்றாகத்தானே வரும். ஆசிரியருக்கென ஒரு விடையும் மாணவனுக்கென ஒரு விடையுமா வரும்?

பரசுராமன் தாயின் தலையை எடுத்ததற்கும் ஒரு காரணமாக ஒரு கதை வரும். அது சரி என்றால் நல்லதோ தீயதோ அது நடக்க காரணமாக மனிதருக்கும் பல காரணங்களைச் சொல்லலாம். பரசுராமருக்கு அவரது காலத்திலேயே நடந்ததைப்போல் மனிதருக்கும் இப்பிறவியில் நடக்கும் ஒன்றிற்காகத்தான் நன்மையோ தீமையோ கிடைக்கும்.

நமக்கு இறைதம்பிக்கை அவசியம் இருக்கவேண்டும் என்றால் முதலில் கடவுளிடம் முழுமையான நம்பிக்கை வேண்டும். மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் முழுமையான இறை நம்பிக்கை இருக்கிறதா என்றால் அது சந்தேகமே. அதற்கு நான் கூறும் காரணம் உங்களுக்குச் சரியெனத் தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள்.

இப்போது காரணத்தைச் சொல்கிறேன். இப்பிறவியில் நாம் ஒரு நல்லதோ தீயதோ செய்கிறோம் என்றால் அதன் பலனை ஏன் அடுத்த பிறவுயில் பெறவேண்டும். போன பிறவியில் செய்த நன்மைக்கோ தீமைக்கோ இப்பிறவியில் ஏன் பலனை அனுபவிக்க வேண்டும் என்பது என் கேள்வி.
ஒருவேளை நாம் செய்யும் நன்மை தீமைகளை கணக்கெடுக்கும் சித்திரகுப்தருக்கு பணிச்சுமை அதிகரித்து விட்டதா?

அந்த பணிச்சுமைக்காக மிகைப் அடுத்த பிறவிக்கு தள்ளப்படுகிறோமா? அப்படியே ஆனாலும் அவருக்கு பணிச்சுமை வேண்டுமானால் குறையலாம் ஆனால் பிரச்சனை நமக்கல்லவா? நன்மையடைபவர்கள் வேண்டுமானால் இப்பிறவியில் மகிழ்ச்சி அடையலாம்.

ஆனால் தீமையைப் பெறுபவர்கள் போனபிறவியில் என்ன செய்தோம் என்று தெரியாமலேயே துன்பத்தை அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமையல்லவா? இது குற்றம் செய்யாதவனுக்கு கொடுக்கும் தண்டனைபோல் அல்லவா இருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணலாம். இறைவன் இருக்கிறான். அவன் குற்றம் புரிந்தோர்க்கு தண்டனையும் நன்மை செய்தோர்க்கு நல்லதும் செய்வான் என்று திடமாக நம்புவோம். இந்த அடிப்படையை வைத்து பார்த்தால் சட்டத்துறை என்பது நமக்கு வேண்டாத ஒன்று. அதை உணர்ந்து தான் காவல்துறை சட்டம் ஒழுங்கு கெடும்போது கண்டும் காணாமல் இருப்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டத்தைத்தான் கடவுள் கையில் வைத்துக்கொண்டு தண்டனை வழங்கி வருகிறாரே. அதையும் மீறி சட்டத்தை நம் கையில் வைத்துக்கொண்டு தண்டனைகளை வழங்க ஆரம்பித்தால் நாம் கடவுளை நம்பவில்லை என்றுதானே பொருள். அடுத்ததாக சட்டத்தை கடவுளிடமே விட்டுவிட்டால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாம்.

அப்படி மூடினால் யாரும் சட்டம் படிக்க மாட்டார்கள். வழக்கறிஞர்களும் நீதியரசர்களும் உருவாகாமல் நீதிமன்றங்களும் இல்லாமல் போய்விடும்.
அரசாங்கத்துக்கும் இதனால் நீதிமன்றங்களை பராமரிப்பது சிறைச்சாலைகளை வைத்து நடத்துவது போன்ற ஏகப்பட்ட பொருட்செலவு மிச்சம்.

ஆனால் குற்றவாளிகளுக்கு தண்டனை எப்படி கொடுப்பது என்கிறீர்களா? அதுதான்
கடவுள் இருக்கிறரே.

இப்பிறவியில் செய்த தீமைகளுக்கும் நன்மைகளுக்கும் தண்டனையையும் நல்லதையும் அடுத்த பிறவியில் இறைவன் கண்டிப்பாக கொடுப்பார். ஏனென்றால் போனபிறவியில் செய்தவற்றுற்குண்டான பலன்களைத்தான் இப்பிறவியில் அனுபவிக்கிறோம். ஒன்று கடவுள் இருக்கிறார் இப்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப மறுபிறவியில் பலனைக் கொடுப்பார் என்று நம்பவேண்டும்.

அல்லது மறுபிறவி என்று ஒன்றுமில்லை என்று நம்பவேண்டும். இப்பிறவியில் செய்த குற்றங்களை காவல் திலையத்தில் பதிந்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனைகள் வழங்குவது நீதியில்லை அல்லவா?

இன்னும் உங்களுக்கு புரியும்படியாகவே சொல்கிறேன். ஒருவன் லஞ்சம் வாங்கியதற்காக ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்கிறான். அவன் இறந்தபின் அவனுக்கு நரகத்தில் அட்டைப் பூச்சிகளுக்கு நடுவே ஆடையின்றி படுக்கவைத்து அவனது இரத்தம் முழுவதையும் அட்டைப் பூச்சிகள் உறிஞ்ச மடிகிறான். இது தவிர அடுத்த பிறவியில் என்ன தண்டனை என்றும் தெரியாது.

அப்படியானால் தீமை செய்தவனுக்கு மூன்று தண்டனையா? கூட்டிப்பாருங்கள் கணக்கு சரியாய் வரும். பூமியில் ஒருதண்டனை நரகத்தில் ஒரு தண்டனை அடுத்த பிறவியில் ஒருதண்டனை என்று மூன்று தண்டனை வருகிறதல்லவா? ஆனால் மனிதப்பிறவிதான் கடைசிப் பிறவியென்பதால் நன்மை செய்தால் நேரடியாக சொர்க்கம். இது நீதியல்லவே? தீமை செய்தவனுக்கும் ஒரே தண்டனைதான் கொடுக்க வேண்டும்.

உசாத்துணை வேண்டுபவர்களுக்கு சங்கர் இயக்கி வெளிவந்த திரைப்படம் மற்றும் தண்டனைக்கு பயன்படுத்தும் நூல் போன்றவற்றை சரிபார்த்துக் கொள்ளலாம். இந்தியன் பீனல் கோடு போன்று இப்புத்தகத்தில் தவறும் தண்டனையும் வரையறுக்கப் பட்டுள்ளது. தம் முன்னோர்கள் நீதியை எவ்வாறு நெறிபடுத்தியுள்ளார்கள் என்பதற்கு இந்நூலே சாட்சி.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *