கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 14… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

கடவுள் என்பெயரை எழதச் சிரமப் பட்டிருப்பார். அவரா எழுதியிருப்பார்?ரஜனிகாந்த் சினிமாவில் நடிக்க வருமுன் அவரது உண்மையான பெயரை எழுத கடவுள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்று நினைப்பேன். அப்போது என் ஆறாவது அறிவு வேலை செய்யும். அந்த வேலைகளை எல்லாம் செய்ய ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் கிம்புருடர்கள் என்று பலர் இருப்பதால் சமாளித்து வருகிறார்.

அதன்பின் பெங்களூரில் இருந்தபோது பங்கார்சனா என்ற அரிசியை சாப்பிட்டுவந்தேன். இதில் ஆந்திராவில் விளையும் ஒருவகை அரிசு. தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு ஆந்திராவில் விளையும் அரிசியில் பெயரை எழுதி வைத்திருக்கிறான்.
இறைவனின் திருவிளையாடலே திருவிளையாடல்தான். அடுத்தபடி நான் ஆஸ்திரேலியா வந்தவுடன் கொஞ்சகாலம் ஆஸ்திரேலியா ஓன் ஆஸ்திரேலியா குரோன் சன்லாங் அரிசிதான்.

எங்கு சென்றாலும் விடமாட்டேன் என்று எங்கும் நிறைந்திருக்கும் நம்நாட்டு இறைவன்
இங்கு வந்தபின்னும் சன்லாங் அரிசியில் என்பெயரை வெளிவிவகார அமைச்சுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி எழுதிவந்தார். அதன்பின் நான் பாசுமதி சாப்பிட ஆரம்பித்ததும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டார். ஏனென்றால் இந்த அரிசி பஞ்சாபில் இருந்து வருகிறது. இப்படி அவர் தொழிலில் கண்ணியமாக நடந்து ஒவ்வொரு அரிசியிலும் அவரவர் பெயரை எழுதித்தான் வருகிறார்.

நான் தான் கொடுத்து வைக்காதவன். மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டி போரடித்த அழகான தென்மதுரை என்று என் மாமனார் ஊர் மதுரையாக இருந்தும் தமிழனான எனக்கு தமிழ்நாட்டு அரிசியை தமிழ்நாட்டை விட்டு வெளியேறியபின் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை. இதைத்தான் தலை எழுத்து என்பது.

மாடசாமி அண்ணாச்சி, நீ வெளிநாட்டுக்கு கொழுப்பெடுத்துப்போய் போய்விட்டு தலை எழுத்தை ஏன் குறை சொல்கிறாய் என்கிறார். வெளிநாட்டுக்கு வந்ததையும் சேர்த்துத்தான் தலையெழுத்து என்கிறேன் என்று அவருக்கு பதில் சொன்னேன். இன்னொன்று நன்றிகெட்டத் தனம். வேலை இங்கு. சம்பளம் இங்கு. வீடுவாசல் இங்கு என்று இருந்து கொண்டு இந்திய அரிசியைத்தான் சாப்பிடுவேன் என்பதைத்தான் சொல்கிறேன்.

மனிதரை மனிதர்கள் சாப்பிடும் வழக்கம் (cannibalism) இருந்ததல்லவா அதுவும் தலை எழுத்துதானே என்கிறார்? விசயம் தெரிந்தவர்போல கிடக்கு. ஆதலால் ஓம் எண்டு சொல்லி வைத்தேன். எனது மேதாவித்தனத்தை காட்ட மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கல் ஆயுதங்களை பயன்படுத்தியதிலிருந்து எழுத்தை கண்டுபிடித்து வரலாற்றை ஆவணப்படுத்தத் தொடங்கும் வரை மனிதமாமிசம் சாப்பிடும் வழக்கிருந்தது என்று சொன்னேன்.

அவர் என்னை அருவருப்பாக பார்த்தார். என்ன என்றேன். அவர் என்னை சகட்டுமேனிக்கு நெல்லைத் தமிழில் திட்டி உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டார். என்னை யாராவது மட்டம் தட்டினால் அதை நான் மறைக்காமல் சொல்லியே ஆக வேண்டும். ஆதலால் அவர்சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

“யோவ், என்னவே கூறுகெட்டத்தனமா சொல்றீரு. இதுதான் நீரு எழுத்தாளர்னு சொல்லிக்கிட்டு கிழிக்கிற லச்சனமா? வேற உருப்புடுற சோலியிருந்தா பாரும்வே” என்றார்.

என்ன அச்ணாச்சி இப்படில்லாம் பேசுறீங்க என்றேன்.

“இப்புடியுமில்ல நொப்புடுயிமுல்ல. இந்த வெருவாக்கட்ட சோலிய பாக்காதீயும். நாலுவேரு படிக்கதுன்னு நெனப்பு இருக்கட்டும். என்னவே எழுதுறீரு வரலாற படிச்சுட்டு எழுதும்வே.” என்றார்.

அவர் அப்படிச் சொன்னது எனக்கு என்னவோ
போல் இருந்தது. நான் அறிவார்ந்த சமூகத்தின் முன்னே என்னை எல்லாம் அறிந்தவனாக காட்டிக் கொள்வதே இல்லை. காரணம் எழுத்துலகில் மழலையாக இன்னும் தவழ்ந்துதான் வருகிறேன். இன்னும் நடைபயிலவேயில்லை. நடக்க ஆரம்பித்து ஆன ஆவன்னா படித்த பின்தானே எழுதவே முடியும்.

இந்ந நேரத்தில் எங்க ஊர் சொலவடை ஒன்றை சொல்கிறேன். கொச்சையான வார்த்தைக்கு காணொலிகளில் பீப் போடுவதுபோல இங்கு நான் டேஸ் போடுகிறேன். இதோ அந்த பழமொழி.
“ஆடு ஆடுவாக்குல இருக்காம் அப்பா – – – – ன்னானாம்”. இதற்குமேல் இதை விளக்குவது சரியல்ல.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இப்பவே என்னை சிலர் கண்டுகொள்வதில்லை. அப்படியிருக்க எனது அபிமானிகள் நூல் வெளியிடவில்லையா என்கிறார்கள். நான் நூல் வெளியிடும் அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கர் ஒன்றும் இல்லை.

மாடசாமி அண்ணாச்சி சொன்னதற்காக தகவலை திரட்ட ஆரம்பித்தேன். அப்புறம்தான் தெரிந்தது ஒக்கலில் பிள்ளையை வைத்துக் கொண்டு ஊர் பூராவும் பிள்ளையைத் தேடியிருக்குறேன். அருகிலுள்ள பாப்புவா நியூ கினியில் 2012 வரையிலும் பண்பாட்டு காரணங்களுக்காக மனிதமாமிசம் சாம்பிடுவது வழக்கில் இருந்ததாம்.

இப்ப கட்டுரையைத் தொடர எங்கே விட்டேன் என்று தலையைச் சொரிந்தபோது விட்ட இடம் நினைவுக்கு வந்தது. மும்மூர்த்திகளில் விட்டேன். பிரம்மாவுக்கு மக்கள்மேல் அக்கறை இல்லையா? படைப்பதோடு சரி.
அதனால்தான் ஆட்டத்தில் அவரைச் சேர்த்துக் கொள்ளவில்லையா?

மீதமுள்ள இருவருக்கும் அவரவர் பெருமைகள சொல்ல நூல்கள் உள்ளன. அப்படியிருக்க மாடசாமி அண்ணாச்சி இந்துமத நூல் பகவத்கீதை என்கிறாரே? நான் சிவனுக்கென்று நூல் இல்லையா? இருந்தாலும் கணக்கில் வராதா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொல்லும் பதில் வியப்பைத் தருகிறது.

நீ எப்பவாவது நீதிமன்றத்தை எட்டிப் பார்த்ததுண்டா? என்றார். சென்றிருக்கிறேன் என்றேன். குற்றவாளிக்கூண்டில் நிற்பவரிடம் வழக்கறிஞர் எந்த நூலை நீட்டுகிறார் என்றேன். பகவத்கீதை என்றேன். இப்போது தெரிகிறதா? தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவரக்கும் இறைவா போற்றி என்று போற்றிக் கொள்ளலாம். ஆட்சி அதிகாரத்தில் பங்கில்லை என்றார்.

ஏன் அப்படி என்றேன்? ஏனென்றால் சிவன் ஆசீவக முதல் சித்தன். பத்தாயிரம் ஆசீவகச்சித்தர்களை கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள் என்பதை வரலாறு கூறுகின்றன. இதற்காகத்தான் நூலைப்படி நூலைப்படி என்கிறார்கள். வாசிப்பு அனுபவத்தை எல்லாம் பகிர்கிறார்கள். நீ வரலாற்றையும் படிக்கவேண்டும். வரலாறு என்றால் சேர சோழ பாண்டியன் என்று அத்தோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது என்று சொன்னேன்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *