கவிதைகள்

சாரல் மழை… கவிதை… நிவேதிக்க

விடியலின் ஓலத்திலும்

வானம் சிரித்தது

சோ…எனும் கீதத்துடன்

சாரல் மழையாய்…..

மூவிரண்டு நேரத்தில்,

இருவிழி ஓரத்தில்,

அருவியாய் பாரெங்கும்

சாரல் மழை…..

பாராமல் தூவிய தூறலிலும்,

பரப்பின்றி வீசிய தென்றலிலும்,

பேதமில்லை…..

காரிருள் இருட்டும்,

கருமுகில் ஓட்டமும்,

சுழல் காற்றும்,

சூழ்ச்சி கொண்ட

கூதலும்….

அடிதடி சண்டையில்

காதைப் பிளந்த

மத்தள ஓசையும்….

கண்ணைப் பறித்த

தீப்பொறிக்குச்சிகளும்…..

கூவிச் சொன்னது

உந்தன் வருகையினையோ….

குளிர் காற்றும்,

கூதலின் வருடலும்,

மரக்கிளை அசைவும்,

மண் வாசனையும்,

மனதார அழைத்தது உன் வரவையோ…

ஓலை வீட்டின் கண்களின் வழி

ஏழையின் உண்மை சொல்லும் -சாரல் மழை!

காகிதம் மடித்து கப்பல் செலுத்தும்

பேரின்பத்தின் பெறுமதி சொல்லும் -சாரல் மழை!

போர்வை இழுத்து சயனிக்கும்

சோர்வின் சோம்பல் கூறும் -சாரல்மழை!

தாவாரத்தின் சிந்தலில் கால் நனைக்கும்

விளையாட்டின் விருப்பம் சொல்லும் -சாரல் மழை!

மண்வாசம் தேடி மணம் கொள்ளும்

சுகந்தத்தின் நுகர்வு சொல்லும் -சாரல் மழை!

கம்பளிப் பூச்சியின் பூரிப்பில்

நிலம் அறியும் மென்மை -சாரல் மழை!

நிறைமாத வயிற்றுடனும்

நிமிர்ந்து நிற்கும் நெல்லின் பசுமை அறியும் நிஜம் -சாரல் மழை!

சாவின் விளிம்பிலும் உயிர் வாழப் போராடும்

புல்லின் மூச்சு கேட்கும் -சாரல் மழை!

ஒற்றைக்குடைக்குள் இருவர் செல்லும்

காதல் கூறும் உண்மை – சாரல் மழை!

தனிமை கொண்ட நிழலின்

வேதனை கூறும் சாட்சி -சாரல் மழை!

மனதின் சிதறலில் நடுவானில் நடனமாடும்

பெண்மையின் நளினம் சிந்தும் -சாரல் மழை!

நா ருசிக்க சூடேற்றிய

சிற்றூண்டி கூறும் சுவை -சாரல் மழை!

 

சிறு சிறு துளிகள் கோர்த்து,

தோற்றத்தில் சிரித்து,

வார்த்தையால் வீட்டின் சுவர்

மூடிய நிமிடங்களில்,

சில்லென்ற உன் இரைச்சலிலும்

சோ…என்ற பொழிவிலும்

நானும் நனைகிறேன்

மெய் மறந்தவளாய்……..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *