கவிதைகள்

கவி கண்ணதாசன் கடவுளின் வரமே! …. கவிதை ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நீறுடை நெற்றி குங்குமப் பொட்டு
உருத்திராட்ச மாலை உய்ர்ந்திடு தோற்றம்
நல்ல நிறமும் களையான முகமும்
நாட்டுக் கோட்டை நமக்கீந்த கொடையே 
 
ஆத்தீகம் அகத்தில் நிறைந்தே இருந்தது
அனைத்தும் கடவுளே அவரது நினைப்பே
எழுதிக் குவிக்க எண்ணம் எழுந்தது
ஏறினார் வண்டி சென்னையை நோக்கி 
 
அறிமுகம் இல்லா நிலையில் வந்தார்
ஆண்டவன் கருணையை நம்பியே நின்றார்
எழுதும் வாய்ப்பு இறையால் விளைந்தது
எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார்
 
இடையில் அவரும் இருளில் சிக்கினார்
நாத்திக வலையில் சிக்குண்டு தவித்தார்
பேசா வார்த்தைகள் பேசியும் நின்றார்
எழுதாக் கருத்துகள் எழுதியும் இருந்தார்
 
நீறுடை நெற்றி குங்குமப் பொட்டு
மாறியே போனது மனதும் இருண்டது
வாழ்க்கையில் போலியைக் கண்டார் அவரும்
மனந் தடுமாறி மயக்கமாய் நின்றார்
 
இருளில் இருந்ததை உணர்ந்தார் அவரும்
இறைவனே அவரைத் தாங்கிப் பிடித்தார்
அழுதார் தொழுதார் அடைக்கலம் ஆகினார்
ஆண்டவன் அருளால் மீண்டார் அவரும்
 
ஆத்மீக வெளிச்சம் அவருள் பதிந்தது
கடவுளின் தாசனாய் ஆனார் அவரும்
கண்ண தாசன் புதியாய் மலர்ந்தார்
கவிமழை பொழிந்தர் கடவுளும் மகிழ்ந்தார்
 
காஞ்சியை எதிர்தவர் காஞ்சியை வணங்கினார்
காஞ்சிப் பெரியவர் ஆசியைப் பெற்றார்
கீதையைப் படித்தார் கீழ்க்குணம் ஒழித்தார்
பாதையை மாற்றிப் பரமனைப் போற்றினார்
 
திருமுறை படித்தார் சேவித்தார் புராணத்தை
திருமூலர் கருத்தைச் சிந்தையில் கொண்டார்
கம்பனைப் படித்தார் கண்டார் இராமரை
பக்தியில் திளைத்து பாடினார் நாளெலாம் 
 
கண்ணன் கருணை கவிஞரைப் பற்றிட
எண்ணம் எல்லாம் கண்ணன் ஆகினார்
கண்ணின் தாசன் கண்ணனைப் பாடினார்
பாடிய அனைத்தும் பக்திக் காவியமானது
 
ஆழ்வார் பாட்டில் அமிழ்ந்தார் கவிஞர்
ஆண்டாள் நாச்சியார் ஆகினார் கவிஞர்
பஜ கோவிந்தம் பக்தியின் வடிவமாய்
கவிஞரின் தமிழில் எழுந்துமே வந்தது
 
கிருஷ்ண கவசம் கிருஷ்ண கானம்
கிருஷ்ண அந்தாதி கவிஞரின் படைப்பாய்
பக்தியாய் மலர்ந்து பலருளம் பதிந்தது
வித்தகத் கவியாய் விரிந்தார் பக்தியில் 
 
அத்வைதம் துவைதம் பாட்டில் இருந்தது
சித்தாத்தம் வேதாந்தம் சிறப்பாய் அமைந்தது
ஆழ்வார்கள் நாயன்மார் கருவாய் அமைந்தார்
அனைத்துக் கருத்தும் பாட்டில் மிளிர்ந்தது
 
காதல் பாட்டிலும் கவலைப் பாட்டிலும்
கண்ணனை புகுத்த மறந்ததே இல்லை
வெள்ளித் திரைக்கே பாடல் எழுதினார்
எழுதிய பாடற்குள் இறையையே நிறைந்தார்
தத்துவப் பாடல்கள் எத்தனை எத்தனை
முத்து முத்தான கருத்துகள் பொதிந்தன
சித்தர்கள் அனைவரும் சேர்ந்தே வருவதை
அத்தனை பாடல்கள் அனைவர்க்கும் உணர்த்தும் 
 
காலத்தால் அழியாப் பாடல்கள் தந்த
கவி கண்ணதாசன் கடவுளின் வரமே
மாநிலம் பயனுற மக்களும் பயனுற
வழங்கிய கவிதைகள் வாழுமே நாளும் 
 
கவிஞராய் மலர்ந்தவர் கதைகளும் எழுதினார்
திரைக்கதை வசனம் எழுதியும் ஒளிர்ந்தார்
அவரின் எழுத்தை அகிலம் போற்றிட
அர்த்தமுள்ள இந்துமதம் ஒளடதம் ஆனது
 
வாழக் கூடா வழியில் சென்றேன் 
வழி தடுமாறி குழியில் விழுந்தேன்
புத்தி புகுட்ட நானே தகுந்தவன்
என் வழி போகாதிருங்க ளென்றார் 
 
கண்ண தாசன் பாடமாய் இருக்கிறார்
கடவுளின் அருளால் கவிதைக்குள் நுழைந்தார்
பக்தியைப் பற்றி பற்பல படைத்தார்
படைத்த அனைத்தும் பசுந்தமிழ் சொத்தே.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
  மெல்பேண் …. அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *