சொல்லித்தான் ஆகவேண்டும்!… அரசியல் பத்தித்தொடர்… 38 … தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அற்றுச் செல்லும் அரசியல் அறம்?-அரசியல் நாகரீகம்??- அரசியல் விழுமியங்கள்???
வடக்கு மாகாணத்தில் சில உள்ளூராட்சி அதிகார சபைகளில் ஆட்சி அதிகாரத்தைத் தம்வசப்படுத்துவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை ஆதரவுதேடிச் சென்று சந்தித்ததை சில சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல் துடியாய்த் துடிப்பது மட்டுமல்ல சிவஞானத்தையும் டக்ளஸ் தேவானந்தாவையும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியும் தீர்க்கின்றன.
இவர்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவேண்டும்.
1944 இல் உருவான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் ஒன்றாகவிருந்து அரசியல் செய்த ஜி ஜி பொன்னம்பலமும் எஸ்ஜேவி செல்வநாயகமும் பின்னர் 1949 இல் எஸ் ஜே வி செல்வநாயகம் தமிழ்க் காங்கிரசை விட்டுச்சென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவிய பின் 1970 தேர்தல் வரை கீரியும் பாம்புமாகவே அரசியல் செய்தனர். ஜி ஜி பொன்னம்பலத்தைத் ‘துரோகி’ என்றுதான் தமிழரசுக் கட்சியினர் – தந்தை செல்வாவின் தனயன்மார் வசை பாடினர். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளிலும் அக்கட்சியின் ‘சுதந்திரன்’ பத்திரிகையிலும் ஜி ஜி பொன்னம்பலம் வார்த்தைகளால் கிழித்தெறியப்பட்டார்.
ஆனால், 1972ல் இலங்கையின் குடியரசு அரசியலமைப்பு நிறைவேறியதைத் தொடர்ந்து தமிழ் மக்களின் அரசியல் ஐக்கியத்தை அனுபவப் பின்புலத்தில் உணர்ந்த தந்தை செல்வா அதுவரையில் பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாது என்று கூறிக்கொண்டு ஜி ஜி பொன்னம்பலத்துடனான இணைவை ஒருபோதும் விரும்பியிராத மனோநிலையினின்றும் மாறி ஜி ஜி பொன்னம்பலத்தின் வீட்டின் படி ஏறிய நிகழ்வும் தனது வீடு தேடி வந்த அதுவரை தனது அரசியல் எதிரியாகவிருந்த தந்தை செல்வாவை “What can I do for you Selva? (என்னால் உங்களுக்கு என்ன ஆக வேண்டும் செல்வா) என்று ஜி ஜி பொன்னம்பலம் வரவேற்ற நிகழ்வும் வரலாற்றில் பதிவாகியுள்ளன.
தமிழ் மக்களிடையே ஆயுதப் போராட்டம் தலையெடுத்த நாளிலிருந்து முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை சுமார் 30 வருட காலத்தில் தமிழ் மக்களிடையே தோற்றம் பெற்ற போராளி இயக்கங்களில் கொலைகளே செய்யாத எந்தப் புனிதமான இயக்கங்களுமில்லை. பொது எதிரியான சிங்கள பௌத்த ஒடுக்குமுறை அதிகார வர்க்கத்தின் பாதுகாப்பாக விளங்கும் ஆயுதப் படைகளுடன் போரிடுவது வேறு. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் இயக்கங்கள் புரிந்த தனி நபர் படுகொலைகள் – அப்பாவித் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் – இயக்கங்களுக்கிடையே நடைபெற்ற சகோதரப் படுகொலைகள் மற்றும் உட்கட்சிப் படுகொலைகள் என்பது வேறு. யார் செய்திருந்தாலும் பின்னையதை நியாயப்படுத்தவே முடியாது.
இத்தகைய நியாயப்படுத்த முடியாத கொலைகளுக்கு இயக்கங்களை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. இத்தகைய கொலைகளை எதிர்க்கத் துணிவில்லாது கண்டும் காணாததுபோலிருந்த அல்லது தாம்தாம் சார்ந்த இயக்கங்களின் அல்லது கட்சிகளின் சார்பாக மட்டுமே சிந்தித்த ஒட்டுமொத்தத் தமிழ் சமூகத்திற்கும் இதில் பங்குண்டு. இத்தகைய நியாயமற்ற படுகொலைகள் நிகழ்ந்த வேளைகளில் மௌனமாகவிருந்த தமிழ்ச் சமூகம் இவற்றை மறைமுகமாக ஆதரித்தது அல்லது ஊக்குவித்ததென்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய மனப்போக்குதான் இறுதியில் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் நிறுத்தியது. தமிழ் மக்களுடைய போராட்டத்தில் அறம் அற்றுப்போனதே அழிவுக்கான அடிப்படைக் காரணம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என நம்பி வெறுமனே ஆயுதக் கலாசாரத்தை – வன்முறைக் கலாசாரத்தை வளர்த்துவிட்டதில் தமிழ்ச் சமூகத்திற்கும் பங்குண்டு.
மீண்டும் சிவஞானம் – டக்ளஸ் சந்திப்பு விவகாரத்திற்கு வருவோம்.
ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மைத்தானே குறிசுட்டுக் கொண்டுள்ள கட்சிகளிடமிருந்த இரட்டை வேடம் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலில் இருக்கவில்லை.
அதற்குப் பின்வரும் விடயங்களை உதாரணமாகக் காட்டலாம்.
டக்ளஸ் தேவானந்தா பத்மநாபா தலைமையிலான ஈ பி ஆர் எல் எஃப் இயக்கத்திலிருந்த காலத்திலும் பின் ஈ பி ஆர் எல் எப் ஐ விட்டுப் பிரிந்து ஈ பி டி பி கட்சியை ஆரம்பித்து ஜனநாயக வழிக்கு மீண்டு அரசியல் செய்த இன்று வரையிலான காலம்வரை புலிகளின் – பிரபாகரனின் பாசிசப் போக்குக்கு எதிராகவே இயங்கி வந்துள்ளார். அதனால் புலிகளின் கொலைத் தாக்குதல்களிலிருந்து பல தடவைகள் உயிர் பிழைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு தமது சுயலாப அரசியலுக்காகவும் தேர்தல் மைய அரசியல் தேவைகளுக்காகவும் உள்ளுக்குள்ளே புலிகளுக்கு எதிரான உணர்வுகளை வைத்துக் கொண்டு வெளியிலே புலிகளின் முகவர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டு புலிகளின் வாலைப் பிடித்துத் தொங்கிய போலித் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் போன்று ஒருபோதும் அவர் இரட்டை வேடம் போட்டதில்லை. சரி பிழைகளுக்கு அப்பால் அவரது அரசியல் வெளிப்படைத்தன்மையானது.
1987-ல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஏற்று அதனை அனுசரித்து அதன் விளைவான 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ஆரம்ப புள்ளியாகக் கொண்டுதான் தமிழ்த் தேசிய இனம் தனது போராட்டத்தைத் தொடர வேண்டுமென்பதில் எந்தப் பிசிறும் இல்லாமல் உறுதியாகவிருந்துள்ளார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று எந்த மாற்றமும் இல்லாமல் அது எப்போதுமே அவரது கட்சியின் தாரகமந்திரமாக இருந்துள்ளது.
தமிழ் மக்களின் நலன் சார்ந்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியத்தையும் கூட்டு நடவடிக்கையையும் எப்போதுமே அவர் யாசித்து வந்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அவர் முன்வந்து அவர் உருவாக்கிய ‘தமிழ்க் கட்சிகள் அரங்கம்’ இதற்கு நல்ல உதாரணம். இதனை அப்போது குழப்பியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே.

டக்ளஸ் தேவானந்தாவின் இணக்க அரசியல் கோட்பாடு சரியா? பிழையா? அது தமிழ் மக்களுக்கு நன்மையான விளைவுகளை ஏற்படுத்தியதா? இணக்க அரசியல் எந்த அளவுக்கு அரசியல் தீர்வை நோக்கி அடியெடுத்து வைத்தது? என்ற கேள்விகள் நியாயமானவையே. ஆனாலும், எப்போதிருந்து அவர் இணக்க அரசியல் கோட்பாட்டுடன் ஜனநாயக வழியிலான அரசியலுக்குள் நுழைந்தாரோ அன்றிலிருந்து (1989)-ஜனாதிபதி பிரேமதாச அரசாங்க காலத்திலிருந்து கடந்த 2024 வரை ஆட்சியிலிருந்த முறையே ஜனாதிபதிகளாகத் தலைமை தாங்கிய ஆர் பிரேமதாச-டிபி விஜயதுங்க-சந்திரிகா-மஹிந்த ராஜபக்ஷ-மைத்திரிபால சிறிசேன-கோட்டப்பய ராஜபக்ஷ-ரணில் விக்கிரமசிங்க என்று அத்தனை அரசாங்கங்களுடனும் இணக்க அரசியலையே அவர் மேற்கொண்டு அதனால் விளைந்த அபிவிருத்தி சார் அனுகூலங்களை வடக்கு கிழக்குத் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுத்தார். அரசியல் தீர்வு விடயத்தில் அவரால் எதுவும் சாதிக்க முடியவில்லைத்தான். அரசியல் தீர்வு விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளாலும் எதுவும் சாதிக்க முடியவில்லைத்தானே. அரசியல் ரீதியாக இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியாததை ஒரு தனியாளான டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து எப்படி எதிர்பார்ப்பது? அதற்கான காரணங்கள் தனியாக ஆராயப்பட வேண்டிய விடயம்.
டக்ளஸ் தேவானந்தாவைத் துரோகி என்றும் காட்டிக் கொடுத்தவர் என்றும் ஒட்டுண்ணி
என்றும் பழி கூறவும் வசைபாடவும் காரணமாயிருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடித்து வைத்த மஹிந்த ராஜபக்ஷவுடன்-ராஜபக்ஷாக்களுடன் கூட்டு வைத்திருந்தவர் என்பதுதான்.
மஹிந்த ராஜபக்சவின் வகிவாகம் யுத்தத்தை முடித்து வைத்தது மட்டும்தான். யுத்தத்தைக் கோரமாக ஆரம்பித்தது ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான யூ.என்.பி. அரசாங்கமாகும். அடுத்து அதனைத் தொடர்ந்து நடாத்தியது ஜனாதிபதி ஆர் பிரேமதாசா தலைமையிலான அதே யூ என் பி அரசாங்கமாகும். ஜனாதிபதி பிரேமதாசவுடன் கூட்டுவைத்துத்தானே பிரபாகரன் தற்காலிகமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசைக் குழப்பியதும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போன ஏனைய சகோதர இயக்கங்கள் மீது படுகொலை நிகழ்த்தியதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்ளாள் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ததும். அப்படியானால் பிரேமதாசா+பிரபாகரன் கூட்டை என்னவென்பது? எந்த வகையில் சேர்ப்பது? பின்னாளில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை நீதிமன்றம் சென்று பிரித்தது ஜே வி பி என்றால் ஒட்டுமொத்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையையே குலைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை-பிரபாகரனை எவ்வாறு அழைப்பது? பிரபாகரன்+பிரேமதாஸ கூட்டு தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுத்த நன்மை என்ன?
1994 இல் இருந்து 2004 வரை ஜனாதியாகவிருந்த சந்திரிகா காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தைத்தானே 2005 இல் முதன்முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ 2009 இல் முடித்து வைத்து 2010 இல் மீண்டும் ஜனாதிபதியானார்.
இராணுவ ரீதியாக யுத்தத்தை முடித்து வைத்த இராணுவத் தளபதியோடுதானே புலிகளால் 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைத்து 2010 ஜனாதிபதித் தேர்தலில் அவரை (சரத்பொன்சேகாவை) ஆதரித்தது. இந்தக் கூட்டை என்னவென்பது? எந்த வகையில் சேர்ப்பது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு+சரத் பொன்சேகா கூட்டால் தமிழ் மக்கள் அடைந்த நன்மை என்ன?
யுத்தத்தை அதன் இறுதிக் கட்டத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த நானே முடித்து வைத்தேன் என்று மார்பு தட்டும் மைத்திரிபால சிறிசேனவுடன்தானே 2015இல் கூட்டு வைத்து ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரித்துத் தாமே அவரே ஜனாதிபதியாக்கினோம் எனத் தம்பட்டம் வேறு அடித்து அவரது ‘நல்லாட்சி’ அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாகவிருந்துகொண்டே அரசாங்கத் தரப்பாகச் செயற்பட்டது இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்த ‘நல்லாட்சி’க் கூட்டை என்னவென்பது? எந்த வகையில் சேர்ப்பது? இந்த ‘நல்லாட்சி’க் கூட்டால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது?
2019-ல் ஜனாதிபதியாகி 2022 இல் ‘அறகலய’ போராட்டத்தின் மூலம் பதவி நீங்கிய கோட்டபாயவின் பின் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை 2024 வரை எதிர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) சஜித் பிரேமதாசவுடன்தானே நெருக்கமான கூட்டு வைத்திருந்தது மட்டுமல்ல 2024 ஜனாதிபதி தேர்தலிலும் அவரை ஆதரித்தது. இந்தக் கூட்டை என்னவென்பது? எந்த வகையில் சேர்ப்பது? இந்தக் கூட்டினால் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்டது என்ன?
பிரேமதாச+பிரபாகரன் கூட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு+சரத் பொன்சேகா கூட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு+மைத்திரிபால சிறிசேனா கூட்டு (நல்லாட்சிக்கூட்டு), தமிழரசுக் கட்சி+சஜித் பிரேமதாசா கூட்டு எல்லாம் ‘நல்ல’ கூட்டு; மஹிந்த ராஜபக்ஷ+டக்ளஸ் தேவானந்தா கூட்டு மட்டும் ‘துரோக’க் கூட்டா?
மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன்குடமா?
1965இல் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரசும் எஸ் ஜே வி செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியும் டட்லி சேனநாயக்க தலைமையிலான யூ என் பி உடன் சேர்ந்துதானே கூட்டரசாங்கம் அமைத்தது. தமிழரசுக் கட்சியின் சார்பில் மு. திருச்செல்வம் அவர்கள் ஸ்தலஸ்தாபன அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்தக் கூட்டையும் அமைச்சர் பதவி ஏற்பையும் என்னவென்பது? எந்த வகையில் சேர்ப்பது?
டக்ளஸ் தேவானந்தா ராஜபக்சாக்களுடன் மட்டும்தான் கூட்டு வைத்திருந்தார் என்று இல்லையே? 1989இல் பிரபாகரன் கூட்டு வைத்த பிரேமதாசாவுடனும் பின்னர் 1924லிருந்து 2004 வரை சந்திரிகாவுடனும் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுடனும்தானே கூட்டு வைத்திருந்தார். ஏனைய கூட்டுக்களையெல்லாம் விட்டுவிட்டு ராஜபக்சாக்களுடனான கூட்டை மட்டும்தான் துரோகக்கூட்டு என்பதில் என்ன தர்க்கமிருக்கிறது? எல்லாக் கூட்டுகளும் தென்னிலங்கையின் அரசியல் தலைவர்களுடன்தானே நடந்திருக்கிறது. இதில் யாராவது தமிழ்த் தேசியத்தை ஏற்றுக்கொண்ட தலைவர்கள் உண்டா ?
1958 ல் பண்டா+செல்வா உடன்படிக்கை, 1965இல் டட்லி + செல்வா உடன்படிக்கை என்று இந்த எல்லாக் கூட்டுக்களும் தென்னிலங்கை அரசியல் தலைவர்களுடன்தானே நடந்தது.
அப்படியிருக்கும்போது டக்ளஸ் தேவானந்தா+மஹிந்த ராஜபக்ஷ கூட்டை மட்டும் ஏன் வேறுபடுத்தித் துரோகக் கூட்டு என அடையாளப்படுத்த வேண்டும்?
2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரபாகரன் மஹிந்த ராஜபக்சவுடன் கூட்டு வைத்துத்தானே அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடித்தார். இதனால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது?
ஒப்பீட்ளவில் ஏனைய இலங்கை அரசத் தலைவர்களை விடவும் அதி உச்சமான பௌத்த-சிங்களப் பேரினவாத மனோ நிலையில் தமிழ் மக்களுக்கெதிராக மூர்க்கமாகச் செயற்பட்டது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம். அதேபோன்று மறுபக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளாக ஏற்றுக் குறுந்தமிழ்த் தேசியவாதச் சிந்தனைகளுடன் புலிகளின் பாசிசப் போக்குக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் புலிகளாகக் காட்டிக் கொடுத்தது என்பதுதானே உண்மை. இத்தகையதோர் ஆபத்தான சூழ்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ஒரு சமநிலையைப் பேணுவதின் ஊடாகத் தமிழ் மக்களின் மீதான மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகளில் அவ்வப்போது ஒரு நெகிழ்ச்சிப்போக்கை ஏற்படுத்துவதில் மஹிந்த ராஜபக்ஷ+டக்ளஸ் தேவானந்தா கூட்டு வகித்த வகிபாகம் இன்றுவரை தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் பேசப்படாதவொரு உண்மையாகும்.
எனவே, தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் டக்ளஸ் தேவானந்தா மீது பலவிதமான எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட ஒப்பீட்டளவில் ஏனைய ‘போலி’ த்தமிழ்த் தேசியக் கட்சிகளையும் விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் அதன் பலம் பலவீனங்களுடன் வெளிப்படைத்தன்மையானது-அறிவார்ந்தது – பாசிசத்துக்கெதிரான அரசியல் தத்துவார்த்தத் தளத்தில் கட்டமைக்கப்பட்டது என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
புலிகளின் கொலைத் தாக்குதலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சந்திரிகா அரசாங்கத்திடமிருந்து குண்டு துளைக்காத வாகனத்தையும் போலீஸ் பாதுகாப்பையும் பெற்றுக்கொண்ட இரா சம்பந்தனைப் பின்னாளில் பிரபாகரன் 2001 இல் தான் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக ஆக்கினார் என்பது பிரபாகரனின் மனமாற்றத்தையும் பெருந்தன்மையையும் காட்டியது எனக் கருதப்பட முடியுமாயின் தனது அரசியல் எதிரியான தமிழரசுக் கட்சி ஆதரவு தேடி தன்னை நாடி வந்தபோது டக்ளஸ் ஆதரவு தர முன் வந்ததை டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் பெருந்தன்மையாகக் கொள்வதில் என்ன தவறுண்டு?
இப்பத்தியின் நிறைவாக, தமிழ் மக்களின் அரசியல் பொதுவெளியில்,
அரசியல் செயற்பாட்டாளர்களைத் ‘துரோகி’ என்றும் ‘தியாகி’ என்றும் குறிசுடும் பழக்கம் நிறுத்தப்படவேண்டும்.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் எந்தக் கட்சியோ-இயக்கமோ சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட புனிதமானது அல்ல.
எனவே பழைய குப்பை மேடுகளைக் கிளறுகின்ற செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் குப்பையைக் கிளறும்போது குப்பைகள்தான் வெளிவரும்.
இன்று ஒட்டுமொத்தத் தமிழினமும் ஏங்கி நிற்பது பதவி சுகங்களைக் குறி வைக்காத-வாக்குகளைக் குறி வைக்காத-தேர்தல் வெற்றிகளை மட்டுமே இலக்காகக் கொள்ளாத-தம்மை மட்டுமே முன்னிலைப்படுத்தாத-பிரதேசத் தனித்துவங்களைப் புரிந்துணர்வுடன் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தமிழ் அசியல் கட்சிகளுக்கிடையிலான முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த அரசியல் ஐக்கியம் ஒன்றுக்காகத்தான் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.
இன்றைய தமிழ்ச் சூழலில் இத்தகைய அரசியல் ஐக்கியம் ஒன்று மிகவும் அற்புதமாகத்தான் நிகழவேண்டும். நிகழ்ந்தால்தான் உண்டு.
![]()
சுதந்திரன் பத்திரிகையை இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியையும்,திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்தையும் தூற்றுவதற்கென்றே தமிழரசக் கட்சியினர் நடத்தி வந்தனர்.
அப்பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியும் உண்டு.இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை அல்லது திரு.ஜி.ஜி பொன்னம்பலத்தை கற்றம் சாட்டி கேள்வி கேட்டால்,பரிசுக்குரிய கேள்வி என இரண்டு ரூபாய் கொடுப்பதாக அறிவிப்பார்கள்.
நான் அதனைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக தமிழரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய கட்சிகளை குற்றம் சாட்டி கேள்வி எழுதி அனப்பீனேன்.இவ்வாறு இருமுறை கேள்விகளை அனுப்பிய போது இருமுறையும் பணப்பரிநச தருவதாக அறிவித்தார்கள் .ஆனால் பரிசுப் பணத்தை அவர்கள் தரவில்லை.
அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்களின் அரசியல் குற்றம் காணும் அரசியலாகவும் வெறும் வாயை மெல்லும் அரசியலுமாகவே இருந்து வருகின்றது.
எம்மிடம் ஒற்றுமையில்லை முதலைக் கண்ணீர் வடிப்பார்கள்.ஒற்றுமைக்கான முயற்சிகளை ஈடுபடுகிறவர்களை கறுப்பு ஆடுகள் என கேலிச் வரைந்து கண்டிப்பார்கள்.மிக மோசமான அருவருக்கத் தக்க வார்த்தைகளையும் எழுதுவார்கள்.