கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் – 12… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

நண்பர் ஒருவர் அடுக்குமாடியில் ஒரு அபார்ட்மண்ட் வாங்கினார். சற்று பெரிய வீட்டில் வாழ்ந்த அவருக்கு அந்த அபார்ட்மண்டில் அறைகள் மிகவும் சிறியதாகவும் விலை அதிகம் கொடுத்து வாங்கி விட்டோமோ என்ற கவலையும் தொற்றிக் கொண்டது. அவருக்கு இன்னொரு நண்பர் ஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனை விசித்திரமாக இருந்தாலும் நியாயமாகப் பட்டது.

இதுவும் கவுன்சிலிங் போன்றதாகும். நான் மொழிபெயர்ப்பாளராக இருந்து கவன்சிலிங்கின்போது மொழிபெயர்ப்பதால் எனக்கு அந்த நண்பர் சொன்ன ஆலோசனை ஏற்கும்படி இருந்தது? ஆலோசனையை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறதல்லவா? தாமதிக்காது சொல்லி விடுகிறேன்.

நண்பர் சொன்னதாவது, நண்பரே முதலில் அறை சிறிதாக உள்ளது என்று எண்ணுவதை விடுங்கள். சிறிய அறையாக இருந்தாலும் படுப்பது ஒருகட்டிலில்தான். கட்டிலில் படுத்தபின் சிறிய அறை பெரிய அறை என்ற வித்தியாசமே தெரியாது. நித்திரை கொள்ளுமுன் இது மைசூர் மகாராஜாவின் படுக்கையறை என்று எண்ணிக் கொள்ளுங்கள். இதே மாதிரி மற்ற அறைகளையும் அதற்குத் தக்கபடி நினைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள வீடுகளில் பாதிக்குமேல் உங்களுடையது என்று எண்ணிக் கொண்டே நித்திரை கொள்ளுங்கள் என்றார். அவர் அப்படி செய்தாரா? அதன்பின் கவலை போனதா என்று நான் அவரிடம் கேட்கவில்லை.

IMG_1884.JPG

ஏனென்றால் ஒருவர் ஏதாவது ஒன்றினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார் என்றால் அவரிடம் திரும்பவும் அதைப்பற்றிக் கேட்டு அதில் ஒரு சுகம் காண்பது என் குணம் அல்ல. ஆனால் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களிடம் அடிக்கடி கேட்பது சரியல்ல என்று நன்றாக தெரிந்திருந்தும் அதைப்பற்றியே கேட்டு மனதுக்குள் இன்பமடைவார்கள்.

மனதத்துவப்படி பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள் ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களே. நன்றாக எண்ணிப்பார்த்தால் மற்றவர்களின் துயரங்களை விட இவர்கள் இரட்டிப்பு துன்பமுடையவர்களாகவே இருப்பார்கள். ஆனால் என்னவோ மற்றவர்களின் இன்னல்களை அக்கறையோடு விசாரிப்பது போல் விசாரித்து, அட அட அதை எப்படிச் சொல்ல இரட்டிப்பு மகிழ்ச்சியடைவார்கள்.

நான் மொழிபெயர்ப்பாளராக பல கவுன்சிலிங் செய்திருந்தாலும் அந்த நண்பர் சொன்ன ஆலோசனையைப் பின்பற்றினேன். மகிழ்ச்சியாகவே இருந்தது. நான் அப்போது மெல்பனின் புறநகர்ப் பகுதியான லின்புரூக் என்ற பகுதியில் வசித்து வந்தேன். படுக்கையில் படுத்ததும் சற்று வேறுவிதமாக சிந்தித்தேன். பெரிய அரண்மனையில் படுத்திருப்பதாக எண்ணினேன்.

தூக்கமும் கண்களை தழுவ ஆரம்பித்தது. அந்த லின்புரூக் பகுதியில் முக்கால்வாசி வீடுகள் என்னைடையது. அவற்றை வாடகைக்கு விட்டிருக்கிறேன் என்று எண்ணியபடியே தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியாகவே இருந்தது. மற்றவர்கள் சொத்தை நம் சொத்தாக எண்ணும்போதே இவ்வளவு நன்மை பயக்குதே அதனால்தான் மற்றவர்கள் சொத்தை கையகப்படுத்துவதில் சிலர் ஆர்வமுடன் இருக்கிறார்களோ?

எவர் வீட்டுச் சொத்தாயிருந்தால் நமக்கென்ன? என் வீட்டை உன்வீடாக நீ எப்படி நினைக்கலாம் என்று யார் வந்து நம்மிடம் சண்டை போடப்போகிறார்கள? ஒரு சிகிச்சையாகத்தானே செய்கிறோம். ஆபத்துக்கு பாவமில்ல என்பதைப்போல் நினைப்பதால் குற்றமில்லை. ஆனால் எந்த நினைப்பும் தரமானதாக இருக்க வேண்டும்.

IMG_1886.JPG

மே மாதம் 2022ல் மெர்சிடிஸ் பென்ஸ் மியூசியத்தில் இரண்டு வாகனங்களில் ஒன்று ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்ட 1955 300 SLR என்ற வாகனமாகும். இதன் விலை எவ்வளவு தெரியுமா? 135 மில்லியன் யூரோஸ் ஆகும். அதாவது அமெரிக்க டாலர்களில் $142, 769, 250 ஆகும்.

இன்று உலகத்திலேயே அதிக விலையிலுள்ள கார் ரோல்ஸ் ராய்சின் ல ரோஸ் நாய்ர் ட்ராப்டெய்ல் என்ற வாகனம்தான். இதன் விலை நாற்பத்தொன்பது மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர்கள். இரண்டு மூன்று மில்லியனில் ஒரு வீடும் நூறாயிரத்துக்கு குறைவான விலையில் கார் ஒன்றையைம் வைத்திருப்பவர்களால் கனவில்கூட நினைக்க முடியாத கார் இது. ஏனென்றால் இந்த கார் உற்பத்தியாளர்களுக்கே இது தெரிந்திருப்பதால்தான் மொத்தமே நான்கு கார்களையே உற்பத்தி செய்துள்ளார்கள்.

அப்படியானால்த நம் போன்றவர்கள் இதுமாதிரி வாகனங்களை வாங்க முடியாதா? அதில் அமர்ந்து ஓட்டமுடியாதா? ஏன் முடியாது. எல்லாம் முடியும் மனதை நம்ப வைக்க வேண்டும். கடவுள்மீது நம்பிக்கை வைத்து அவர் வெள்ளைக்குதிரையில் வருவார் என்று நம்புகிறோம் அல்லவா? அதே மாதிரிதான். உங்களிடம் இருப்பது எந்தவிதமான வாகனமாகவும் இருக்கட்டும்.

சரியான வேகத்தில் கிரேட் ஓசியன் ட்ரைவில் ஒரு ட்ரைவ் போங்கள். அப்போது நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். நான் சொன்ன அந்த நான்கு வாகனங்களில் ஒன்றுதான் உங்களிடம் இருக்கிறது. அந்த வாகனத்தில்தான் செல்வதாக நீங்கள் நினைக்க வேண்டும். ஏனென்றால் உண்மையிலேயே அந்த கார் உங்களிடம் இருந்தால்கூட கிரேட் ஓசியன் ட்ரைவில் ஓடத்தான் முடியும் பறக்க முடியாதல்லவா?

இதுபோன்று மனப்பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டால் இருப்பதில் சிறப்பைக் காண்பீர்கள். ஏனென்றால் மனித இனம் தோன்றியதே பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனாலும் அது அப்படியல்ல என்று நம் சதுர்யுகம் சொல்வதை நம்பும் மனப்பக்குவம் வந்து விடுகிறதல்லவா? அது என்னப்பா சதுர்யுகம்? அதுதான் நான்கு யுகங்கள்.

அதைப்பற்றி நான் படித்தறிந்ததை சொல்கிறேன். என்னது வேதங்கள்தான் நான்கு என்பார்கள் யுகங்களும் நான்கா என்று வியப்படையாதீர்கள். பிரம்மாவுக்கு நான்கு தலைகள் இல்லையா? கோவில்களில் நான்கு வாசல்கள் இல்லையா? திசைகள் நான்கு இல்லையா? இந்திய அரசு சின்னத்தில் நான்கு சிங்கங்கள் இல்லையா? அவற்றைப்போல் தான் இதுவும்.

இப்போது அந்த யுகங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் பார்ப்போம். முதலில் கிருத யுகம். இந்த யுகம் முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா? மாடசாமி அண்ணாச்சிக்கு ஒரு வேண்டுகோள். பக்கத்தில் ஏதாவது பிடிப்பதற்கு வசதியாக இருந்தால் நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தலை சுற்றுவதற்கு வாய்ப்புள்ளது? ஆம்…ஆம் பதினேழு லட்சத்து இருபத்தெட்டாயிரம் ஆண்டுகள்.

IMG_1888.JPG

பிடியை விட்டு விடாதீர்கள். இன்னும் கிண்ணென்று தலை சுற்றலாம். மனிதர்கள் அந்த யுகத்தில் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழலாம் தெரியுமா? ஒரு லட்சம் ஆண்டுகள் வாழலாம். மனிதர் எவ்வளவு உயரம் இருப்பார்கள் தெரியுமா? ஒன்பது அடி இருப்பார்களாம். ஒரு முன்னெச்சரிக்கைக்கே இதைச் சொன்னேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பிடியை தளர்த்திக் கொள்ளலாம்.

நன்றாக இரண்டு தடவை மூச்சை இழுத்து விடுங்கள். என்ன டாக்டரா என்று கேட்காதீர்கள். ஏன் அதை டாக்டர் மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்ன? டாக்டர் சிறந்த தொழில்தான். ஆனால் அதைவிட்டால் வேறு நல்ல தொழிலே இல்லாததுபோல் விருப்பமில்லா குழந்தைகள் மேல் உங்களால் முடியாமல் போனதை அவர்கள் தலையில் ஏற்றி மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறீர்கள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *