கவிதைகள்
பண்பான மனிதரும்… கவிதை.. சங்கர சுப்பிரமணியன்

உறவென்ற ஒருவர் உயிரிழக்க
ஒடிந்தே நான் போயிருந்தேன்
பழகிய பழக்கத்தால் சொன்னேன்
பழுதாய் ஏதும் நினையாதிருக்க
பண்பான மனிதரும் சரியென்றார்
சார்ந்தவனை ஒருசொல் தேற்றாது
பக்குவமாய் பேச்சையும் முடித்தார்
பாரில் இதுவுமுண்டு கவலையில்லை
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம்
காண்கிற்பின் தீதுண்டோ என்றவரின்
தெள்ளு தமிழ் பொருளுணர்ந்தேன்
கள்ளமிலா கன்னித் தமிழ் ஓதியதால்
ஆலயத்தில் அவ்வணங்கோ கடவுளிடம்
அங்கொருவன் கவனமெலாம் வேறு இடம்
ஊரறிந்த மனிதரென்றே அவர் நின்றாலும்
பேரதனைக் காக்காது போயின் ஏது பயன்?
துக்கமதை தேற்றாவிடினும் பழுதில்லை
தக்கவனாய் எண்ணாது போனால் குறை
மக்களெலாம் ஒன்றுபோல் இருப்பதில்லை
எக்கணமும் அதையுணர்ந்தே யமைந்தேன்!

![]()