மேயர் தெரிவில் நடந்த திருப்பத்தின் பின்னால் இரகசியக் கொடுக்கல் வாங்கலுக்கு வாய்ப்பு

கொழும்பு மாநகர சபையில் மேயர் தெரிவின் போது இடம்பெற்ற திருப்பத்தின் பின்னால் அதிகாரிகள் முதல் கீழ் மட்டம் வரையில் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் இருந்திருக்கலாம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளிலும் மக்கள் ஆணைக்கு அமைவாக சபைத் தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருந்தோம். சில உள்ளூராட்சி சபைகளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து சபைகளை அமைத்துள்ளன. அதேபோன்று அநுராதபுர மாவட்டத்தில் ஜே.வி.பியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து சபைகளை அமைத்துள்ளன. இதுதான் இந்த தேர்தல் முறையின் அடிப்படையில் நடப்பது. டீல் அரசியலை நிறைவுக்கு கொண்டுவருதாக கூறி வந்தவர்கள் கீழே டீல் போடுகின்றனர். ஜே.வி.பியினர் என்பிபி என்ற பெயரில் முன்பை விடவும் சிறப்பாக டீல் போடுகின்றனர்.
இதேவேளை கொழும்பு மாநகர சபையில் இரகசி வாக்கெடுப்பு நடத்தப்படுவது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகள் எப்படி இருந்தது என்பதனை நேரடியாக பார்க்க முடியுமாக இருந்தது. இந்த செயற்பாடும் டீலின் ஒரு பகுதியா என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றன. 60 பேர் கையெழுத்திட்டு பகிரங்க வாக்கெடுப்பை கோருகையில் அதனை செய்யாது இரகசிய வாக்கெடுப்பு நடத்தும் போது அது 54 ஆக குறைந்து மற்றைய பக்கத்திற்கு 61 ஆக வாக்குகள் அதிகரிப்பதானது அதிகாரி தொடக்கம் கீழுள்ளவர்கள் வரையில் டீல் போட்டுள்ளனர் என்றே கூற வேண்டும். இவ்வாறான அரசியலில் இருந்து நாட்டை மீட்பதாக கூறிக்கொண்டு வந்த ஜே.வி.பி இவ்வாறு டீல் போடுவது எதிர்கால அரசியலிலும் இவ்வாறுதான் இருக்கும்.
இதேவேளை எமது கட்சி உறுப்பினர்கள் கட்சியின் நிலைப்பாட்டுடன் இருக்கின்றனர். மக்கள் ஆணைப்படி ஒவ்வொரு சபைகளிலும் சபைகளை அமைப்பதற்காக ஆதரவு வழங்குகின்றனர். எங்கேயும் தனிப்பட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை கிடையாது. நாங்கள் கட்சிகளுடன் கலந்துரையாயே தீர்மானங்களை எடுப்போம். திருட்டுத்தனமாக தீர்மானங்களை எடுக்க மாட்டோம். வெளியில் திருடர்களுடன் பழகிக்கொண்டு உள்ளே டீல் போடுகின்றனர். எங்களிடம் மறைக்கப்பட்ட டீல்கள் கிடையாது என்றார்.
![]()