கவிதைகள்
சம்பந்தப் பெருமான் சைவத்தின் சொத்தே! … கவிதை … மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

வேதநெறி சைவநெறி மேலான நெறி
பூதலத்தில் பொலியப் பிறந்தாரே சம்பந்தர்
பரமனைக் கண்டார் பக்குவம் பெற்றார்
பாலருந்தும் பருவத்தில் பரமனையே பாடினார்
அழுதழுது சம்பந்தர் அப்பாவுடன் சென்றார்
ஆலயம் சென்றதும் அமைதியாய் ஆனார்
நீராட அப்பா குளத்திலே மூழ்கினார்
நீண்ட நேரமானதால் சம்பந்தர் அழுதார்
அழுங்குரலோ அன்னை காதுக்குக் கேட்டது
அப்பனுடன் அம்மை அவ்விடத்து வந்தார்
பாலகனாம் குழைந்தைக்கு பால்கொடுத்தார் அன்னை
ஞானத்தின் திருவுருவாய் சம்பந்தர் மலர்ந்தார்
ஞானப் பாலைப் பாலகன் பருகினான்
ஞானம் அவன் உணர்வுடன் கலந்தது
வாயைத் திறந்து பாலகன் பாடினான்
பாடிய பாடலில் பரம்பொருள் தெரிந்தது 
தோடுடைய செவியன் பாடினார் சம்பந்தர்
தொடர்ந்த நல்வார்த்தை தொட்டது தத்துவத்தை
நாளெல்லாம் சம்பந்தர் நற்றமிழில் பாடினார்
நம்சைவம் தளைக்கவே சம்பந்தர் எழுந்தாரே
பண்ணெடுத்தும் பாட பலபாடல் படைத்தார்
விண்ணவரும் மண்ணவரும் வியந்துமே நின்றார்
வகைவகையாய் யாப்பை பாடல்களில் வைத்தார்
மனமவமர பலகருத்தை நுட்பமாய் நுழைத்தார்
திருமுறையின் நாயகனாய் திகழுகிறார் சம்பந்தர்
அருநெறிகள் அவர்பாட்டில் ஆழமாய் அமர்ந்திருக்கு
பெருநிதியாய் தமிழதனைப் பேணினார் சம்பந்தர்
அவர்தன்னைத் தமிழ்ஞான சம்பந்தர் எனவழைத்தார்
சம்பந்தப் பெருமான் சைநெறி வளர்த்தார்
சமுதாயம் சீராக்க தானவரும் முயன்றார்
அரசை எதிர்த்தார் ஆன்மீகம் உணர்தினார்
அரனே கதியென்று ஆற்றினார் அத்தனையும்
மந்திரம் நீறென்றார் சுந்தரம் நீறென்றார்
தந்திரம் நீறென்றார் தருவதும் நீறென்றார்
சந்ததம் திருநீற்றைத் தரித்துமே நின்றால்
சங்கரன் அருளுவான் சங்கடம் அகலுமென்றார்
திருநீற்றின் மகிமையை செப்பினார் சம்பந்தர்
திருநீற்றப் பதிகத்தை செல்வமாய் அளித்தாரே
அரனாரின் மேனியெலாம் திருநீறே ஒளிர்கிறது
அனைவர்க்கும் ஒளடதமாய் திருநீறே அமைகிறது
நாவுக் கரசருக்கு நல்லதொரு நாமமாய்
அப்பரெனும் பெயரே அருமையாய் ஆகியது
சம்பந்தப் பெருமான் சூட்டிய நல்நாமமே
சைவ உலகெங்கும் தலைநிமிர்ந்து நிற்கிறது
சம்பந்தர் அப்பர் சங்கமித்த காலம்
சைவத்தின் வரலாற்றில் பொன்னான காலம்
இளமையொடு முதுமை எம்சைவம் காக்க
இணைந்துமே நின்று எழுச்சியினை ஊட்டியதே
சைவத்தை நினைத்தால் சம்பந்தர் வருவார்
அவரில்லாச் சைவம் நிறைவில்லாச் சைவம்
சம்பந்தப் பெருமான் சைவத்தின் சொத்தே
அச்சொத்தைக் காப்போம் அவர்நாமம் போற்றுவோம்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …அவுஸ்திரேலியா
![]()