முச்சந்தி
எலான் மஸ்க் – டிரம்ப் உறவும் முறிவும் : நிழல் ஜனாதிபதியான எலான் மஸ்க்கின் வீழ்ச்சி! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(அமெரிக்காவில் இரு பெரும் ஆளுமைகள் இடையே பெரும் குழப்பமான மோதல் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒரு கட்டத்தில் நிழல் ஜனாதிபதியாக கருதப்பட்ட எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அதிபருடன் நெருக்கம் குறைந்து நேரடியாக மோதும் நிலமை ஏற்பட்டுள்ளது)
அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே தீவிர மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க தொடங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக அஅறிவித்துள்ளார்.
இதேவேளை ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எலான் மஸ்குக்கு அதிபர் டிரம்ப் படுமோசமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எலான் மஸ்க் மிகவும் அவமரியாதைக்கு உரியவர். அது மிகவும் மோசமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர் வெள்ளை மாளிகையை அவமரியாதை செய்தார். அவரால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன். அதிபர் பதவியை அவமரியாதை செய்ய முடியாது.
வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு எலான் மஸ்க் நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை. நான் மற்ற வேலைகளைச் செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அவரிடம் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தி அமெரிக்கன் பார்ட்டி:
அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டிரம்ப், எலான் மஸ்க் சமூக ஊடகங்களில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்து மோதலின் தொடர்ச்சியாக, இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, பொதுவெளியிலேயே சமூக ஊடகங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
இதனிடையே, 80 சதவிகித நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா? என்று எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார்.
இந்தக் கருத்துக் கணிப்புக்கு 80 சதவிகிதத்தினர் (56.30 இலட்சம் பேர்) “ஆம்” என்று பதிலளித்தனர். அமெரிக்க மக்களின் இந்த பதில், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.
இந்த நிலையில், புதிய கட்சிக்கு “தி அமெரிக்கன் பார்ட்டி” என்று எலான் மஸ்க் பெயரிட்டு அறிவித்துள்ளார்.
கொடுங்கோல் பட்டியலில் முதன்மை:
உலகளாவிய பொருளாதார மாயத்தைத் தூண்டுவதாலும், அணுவாயுத அச்சுறுத்தலை உருவாக்குவதாலும், டிரம்ப் தனிப்பட்ட முறையில் மிக அபாயகரமானவராக இருக்கிறார். மேலும், நாளுக்கு நாள் அவர் உருவாக்கும் ஆபத்து அதிகரித்துக் கொண்டே போகிறது என்ற அச்சம் பலருக்கும் உள்ளது.
அமெரிக்க வரலாற்றில் அதிஉச்ச அடாவடித்தன ஆட்சிப் பட்டியலை எடுத்தால், டிரம்ப் அதில் முதலிடத்தைப் பிடிக்கிறார். சீரற்ற உலகத்தில் வலிமை வெறித்தனத்தில், இன்னும் பலர் தங்களையும் “வலிமை ஆட்சி” அமைக்க ஆசைப்படும் ஆளுமைகளாக மாற்றிக் கொள்ளத் தத்தளிக்கின்றனர்.
முந்தையதும் இன்றையதும் என எல்லாக் கொடுங்கோலர்களுக்கும் விதி ஒன்று தான். வீழ்ச்சி தவிர்க்க முடியாதது. டிரம்பும் அந்த விதியில் இருந்து விலக முடியாதவராகவே இருக்கிறார்.
டிரம்ப் பதவியேற்றதன் பின்னர்,
அமெரிக்க ஜனநாயகத்தின், அதன் சட்டங்களின், மதிப்பீடுகளின், கனவுகளின் மீது திட்டமிட்ட அழிவுத் தாக்குதல் நடத்தும் அவரது முயற்சியைத் தடுத்து நிறுத்த இயலுமா என்ற கேள்வி தற்போது தீவிரமாக எழுந்துள்ளது.
டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு:

அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து, எக்ஸ் தளத்தில் தான் பதிவிட்ட பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஜெப்ரி எப்ஸ்டைன் தொடர்பாக வெளியிடப்படாத ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் குறிப்பிடப்பட்டதாக எலான் மஸ்க் நேரடியாக குற்றம்சாட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதன் காரணமாகவே பொதுவெளியில் ஆவணங்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். எலான் மஸ்க்கின் இந்த செயலால் அதிருப்தி தெரிவித்திருந்த வெள்ளை மாளிகை, அதிபர் டிரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த எக்ஸ்தளப் பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
நிழல் ஜனாதிபதி மஸ்க் ?
அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர்,
வாஷிங்டனில் உயர் அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி எலான் மஸ்க்கிற்கு கூடுதல் அதிகாரங்களை அளித்தமை அமெரிக்க அரசியலில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலகின் முன்னணி பணக்காரரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றார். தேர்தல் வெற்றிக்குப்பின் அமெரிக்க அரசின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்திருத்தும் புதிய அமைப்பிற்கு தலைவராக எலான் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்தார்.
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்புக்கு சமமாக அமர்ந்து பேசும் அளவுக்கு ட்ரம்புடன் மிக நெருக்கமான உறவுகளை பேணி வந்தார். எத்தனை எதிர்ப்புகள வந்தாலும் எலான் மஸ்க் தன் செயல்களை நியாயப்படுத்தி வந்தார்.
மேலும் மஸ்க் ஏற்கனவே எடுத்த பெரும்பாலான நடவடிக்கைகள் அமெரிக்க சட்ட விதிகளை தாண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில் பல குழப்பங்களை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் இருந்து அதிகாரங்கள் எலான் மஸ்க்கிற்கு கை மாறுகிறதா என்ற ரீதியிலும் அமெரிக்காவில் கேள்விகள் எழுந்தன. அதிபர் மட்டுமே பேட்டியளிக்கும் வெள்ளை மாளிகையில் இருந்து மஸ்க் பேட்டியளித்த நிலையில் ‘பிரசிடென்ட் மஸ்க்’ என்றே சமூக வலைத் தளங்களில் பரலாக பரவி வந்தமைமையும் குறிப்பிடத்தக்கது
ஒருபுறத்தில் வலுவான இலட்சியமும், தொலைநோக்கும் கொண்டு உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் தொழில் வாண்மையாளராக எலான் மஸ்க் விளங்குகிறார். மறுபுறத்தில் தமது தொழில்நுட்பத்தைத் தாண்டியும் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த முனையும் அதிகார ஆளுமையை பிரயோகிக்க முயன்றார்.
தற்போது இதன் காரணமாக இரு பெரும் ஆளுமைகள் இடையே பெரும் குழப்பமான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒரு கட்டத்தில் நிழல் ஜனாதிபதியாக கருதப்பட்ட எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அதிபருடன் நெருக்கம் குறைந்து நேரடியாக மோதும் நிலமை ஏற்பட்டுள்ளது.
![]()