குறள்கூறும் பொருளில் பிறர் பார்வையும் என் பார்வையும் – பார்வை – 06… சங்கர சுப்பிரமணியன்


பழையன கழிதலாக வேண்டாதவை ஏடுகளை தீயிலிட்டு கொளுத்தியுள்ளார்கள். நல்ல நூல்கள் நீரை எதிர்த்துவரும் என்று யாரோ கதைகட்டி விட்டதை நம்பி இலக்கியங்களை ஓடுகின்ற நீரில் எறிந்து அற்புதமான பல இலக்கியங்களை இழந்ததாக வாய்வழிச் செய்திகள் கூறுகின்றன. இனி விருப்பு வெறுப்பின்றி நடுநிலை நின்று இடைச்செருகல் பற்றி காண்போம். இதற்கு சில சான்றுகள் நம்மைத் தயார்படுத்த தேவைப்படுகிறது. இப்போது அவற்றைப் பார்ப்போம்.
உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது உண்டு பசிபோக்கவா? அல்லது சேமித்து வைத்து மகிழ்ச்சியடையவா? பசியோடு இருந்தால் மகிழ்ச்சி வருமா? நெய்து பெறக்கூடியது ஆடை. அதை உடுத்தி உடலை மறைக்கவா? அல்லது ஆற்று நீரில் மீன் பிடிக்கவா?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான பதிலை நேர்மைக்கு இலக்கணமாக வைத்தால்தான் இடைச்செருகலை ஏற்கக்கூடிய மனோநிலை வரும். இல்லாவிடில் அந்த காதில் வாங்கி இந்த காதில் விடும் மனநிலை மட்டுமே வரும்.
இப்போது இன்னொன்றையும். கூறுகிறேன்.
ஒரு செயலைச் செய்யும்போது அதன் பயனும் அதைச்சார்ந்தே இருக்கும். அப்படிச்
சார்ந்திருந்தால்தான் சிறப்பு. சமைத்ததால் கிடைக்கும் பயன் பசித்திருப்பவர் பசியை போக்க வேண்டும்.அப்படி பசிபோக்காவிடில் அதனால் சிறப்பொன்றும் இல்லை. இராணுவ பயிற்சி கொடுப்பதின் பயன் நாட்டுக்கு ஆபத்து வரும்போது போர்க்களம் சென்று போராட வேண்டும். அப்படி போராடவில்லை என்றால் அதனால் சிறப்பொன்றும் இல்லை.
இப்போது என் கற்பனையில் தோன்றிய
இரண்டு ஈரடி செய்யுட்களைப் பார்ப்போம்.
“ஆக்கிய சோற்றினாலாய பயனென்கொல்
பசித்தவன்
போக்கிடு பசிதீரார் எனின்”
என்ற இச்செய்யுள சரியாக இருக்குமா?
அல்லது
“ஆக்கிய சோற்றினாலாய பயனென்கொல்
படைத்தவன்
காலடி படையார் எனின்”
என்ற இச்செய்யுள் சரியாக இருக்குமா?
“மருத்துவத்தாலாய பயனென்கொல்
நோயுற்றான்
நோயதனை தீரார் எனின்”
என்பது சரியாக இருக்குமா? அல்லது,
“மருத்துவத்தாலாய பயனென்கொல்
பொருளுடையார்
வீடதனை நாடார் எனின்”
என்பது சரியா?
எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராய வேண்டும். பக்தி இலக்கியங்கள் தோன்றும் முன் தோன்றிய பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இயற்கையை சார்ந்து நின்றிருப்பதை நாம் அறியலாம். பகுத்தறிவு தத்துவத்தை பின்பற்றிய தமிழரும் அப்போது வளமாகவே வாழ்ந்திருக்கின்றனர்.
தமிழர் தடம்புரண்ட பின்னரே இம்மை மறுமை என்ற சூழ்ச்சியில் சிக்கினர். தம் சோம்பேறித்
தனத்தாலும் முயற்சி இன்மையாலும் உடல் உழைப்பின்றி மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டி வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்த பின்னரே எல்லாம் அவன் செயல், அவன் பார்த்துக் கொள்வான், மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற கருத்தை உள்வாங்கினர்.
சிந்திக்க மறந்து பகுத்தறிவுக்கு பாடை கட்டினர். இதனை நன்கறிந்த போதிலும் பக்தி இலக்கியங்களினால் பெரும்பயனை அடைந்தவர்கள் பாமரமக்களை பகுத்தறிய விடாமல் படுகுழியில் தள்ளிவிட்டனர். மேலும் அதிலிருந்து மேலெழ முடியாதவாறு பத்திரமாகவும் பார்த்துக் கொண்டனர்.
இப்போது நான் மேற்சொன்ன பசித்தவன் மற்றும் படைத்தவன் என்று வரும் ஈரடிச் செய்யுட்களில் எது சரியாக இருக்கும் என்று உங்கள் கருத்தை சொல்லுங்கள். இந்த மனநிலையுடன் அதாவது அறிவுசார்ந்த துணையுடன் அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார் இவர் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று நினைப்பதை தவிர்ப்போம்.
நாம் உயிர்வாழ நாம்தான் மூச்சை இழுத்து வெளி விடவேண்டும். இன்னொருவர் மூச்சிழுத்து வெளிவிடுவதால் நாம் உயிர்வாழமுடியாது. இனி இடைச்செருகல் தமிழ் இலக்கியங்களில் நிகழ்ந்திருப்பதைக் காண்போம். இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளையும் இடைச்செருகல் செய்தோர் விட்டு வைக்கவில்லை. இதைப்பற்றி சான்றுகளுடன் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருப்பதோடு ஒன்றிரண்டு பொதுத்தளங்களில் உரையாற்றியும் இருக்கிறேன்.
தொடர்ச்சியாக இன்றொரு குறளைப் பார்ப்போம். இக்குறளுக்கு இதற்கு முன்பாகவே என் கருத்தை கூறியிருப்பினும் இப்போது நான் கூறும் கருத்து இன்னும் மெருகேற்றப்பட்டு சற்று மாறுதலுடன் என் முந்தைய கருத்தையே வலியுறுத்துகிறது. மாற்றம் ஒன்றுதான் மாறுதலுக்குட்பட்டது. அந்த மாற்றத்தை ஏற்காவிடின் இன்றும் நாம் ஆடையின்றித்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.
இனி குறளைப் பற்றி பார்ப்போம்.
“கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”
இது குறள்.
“கற்றதனாலாய பயனென்கொல் கல்லாதான்
கல்லாமை போக்காஅர் எனின்”
இது குறள் அல்ல.
இந்த இரண்டையும் வாசித்துப் பாருங்கள். தமிழறிந்த அறிஞர்களும் கற்றறிந்த பெருமக்களும் ஒரு நொடி எண்ணிப் பாருங்கள். உங்கள் மனசாட்சியிடமும் கேட்டுப் பாருங்கள். கண்டிப்பாக குறளில் இடைச்செருகல் உள்ளது என்றும் குறள் அல்லாதது சரியாக உள்ளது என்றும் உங்கள் மனசாட்சி கண்டிப்பாக சொல்லும். மனசாட்சியை கேட்பதும் கேளாமல் இருப்பதும் உங்களது விருப்பம்.
ஏனென்றால் படித்ததனால் ஏற்படும் பயன் என்பது படிப்பறிவற்றவனுக்கு படிப்பைக் கொடுப்பது என்பதைத்தான் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது. அதையே, படித்ததனால் ஏற்படும் பயன் கடவுளின் காலைப் பிடிப்பது என்பதை முழுக்கமுழுக்க ஏற்றுக் கொள்ளும்படியா இருக்கிறது? சாதரணமான எனக்கே இது தெரியும்போது உலகுக்கே பொதுமறை தந்ந வள்ளுவப் பெருமகனாருக்கு தெரிந்திருக்காதா?
ஆதலால் குறளில் இடைச்செருகல் உள்ளதென்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்லலாம். இவ்வாறு பல குறட்பாக்களில் இடைச் செருகல் இருக்கவே செய்கின்றன் என்பதை இக்கட்டுரையின் வாயிலாகத் தெரியப்படுத்துகிறேன்.
இதன் மூலம் கற்றதனாலாய பயனென் கொல் என்று தொடங்கும் குறளின் பொருள் பிறரின் பார்வையில் கற்றதானாய பயன் என்னவென்றால் கடவுளின் பாதங்களை வணங்குவதாகும். எனது பார்வை இதிலிருந்து வேறுபடுகிறது. கற்றதனாலாய பயன் என்னவென்றால் கல்லாதவர்க்கு கல்விபுகட்டுவாகும்.
ஏடறிவித்தவன் இறைவனாவான் என்று வெற்றிவேற்கை எடுத்துச் சொல்வதுபோல் ஆசானை இறைவனாக எண்ணுதலை விட்டு கற்றதானாலாய பயன் கடவளின் காலைத் தொழு என்பது வியப்பாயுள்ளது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()