கொள்கை ரீதியான கூட்டுக்கு தமிழரசுக் கட்சியும் வர வேண்டும்; கஜேந்திரகுமார் எம்.பி.வலியுறுத்து

தமிழ்த்தேசியப் பேரவைக்கும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள கொள்கை ரீதியான ஒப்பந்தத்தை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியும் கூட்டு முயற்சிக்கு இணங்க வேண்டும். அவ்வாறு வருவதன் ஊடாகத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு உள்ளுராட்சி சபைகளில் தேவைப்படும் பிரதிநிதித்துவத்தை நாங்கள் உறுதிப்படுத்தத் தயார் எனத் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியப் பேரவைக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குமிடையில் கூட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சித்தார்த்தனும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்திக்கப் போவதாகவும், உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக அவருடைய ஆதரவைக் கோரவிருப்பதாகவும் சில இணையப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் ஈபிடிபியின் செயலாளர் நாயகத்தைச் சந்திப்பதற்கு ஏற்கனவே முடிவெடுத்திருந்த நிலையில் தமிழரசுக் கட்சி ஈபிடிபியினருடன் நடாத்தவிருந்த சந்திப்பையும், கூட்டையும் நியாயப்படுத்துவதற்காகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு மிகவும் விசுவாசமாகச் செயற்படும் ஊடகங்கள் திட்டமிட்டுப் பொய்யான செய்திகளைப் பரப்பின. அந்தச் செய்தி முற்றிலும் தவறான, பொய்யான செய்தி.
தமிழ்த்தேசியப் பேரவைக்கும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைரீதியான ஒப்பந்தத்தைக் கொச்சைப்படுத்துவதற்காகத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தி. இதனை நாங்கள் நிராகரிக்கின்றோம், கண்டிக்கின்றோம்.
தமிழ்த் தேசியப் பேரவையும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் கொள்கை ரீதியானதொரு இணக்கத்துக்கு வந்துள்ள சூழ்நிலையில் நாங்கள் அந்தக் கொள்கைக்கு நேர்மையாகப் பயணிப்பதில் மிகவும் உறுதியாகவிருக்கின்றோம்.
2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியத்துக்கு மிகப் பலமானதொரு ஆணையை வழங்கியிருந்தனர். தமிழ்த்தேசியப் பேரவையும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் எவ்வாறொரு கொள்கை இணைக்கப்பாட்டுக்கு வந்ததோ அதேபோன்று தமிழரசுக் கட்சியும் எம்முடன் ஒரு கொள்கை இணக்கப்பாட்டுக்கு வந்து அதன் ஊடாக ஒரு ஸ்திரத் தன்மையை ஒவ்வொரு உள்ளுராட்சி சபைகளிலும் உருவாக்குவதே பொருத்தமானதாகவிருக்கும். அதனை விடுத்து மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மாறாகச் செயற்படுகின்ற தரப்புக்களுடன் கூட்டுச் சேருவதும், ஏற்கனவே தமிழ்த்தேசியத் தரப்பில் உருவாக்கப்பட்டுள்ள பலமானதொரு கூட்டைத் தோற்கடிக்கும் வகையில் செயற்படுவதும் பொருத்தமற்றது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ்த் தேசியத்துக்கும், மக்களுக்கும் பாரிய ஏமாற்றத்தையளிக்கும்.
கொள்கைக்கு மாறாக, தமிழ்த்தேசியத்துக்கு நேர்மாறாக தமிழ்த்தேசியத்தை அழிக்கும் செயற்படும் தரப்புக்களுடன் கூட்டிணைந்து பதவிகளைப் பெறுவது தான் நோக்கமாகவிருந்தால் தமிழ்த்தேசியத்துக்காகச் செயற்படும் எங்கள் தரப்புடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் பதவிகளைப் பெறுவதற்கு நாங்கள் ஒத்துழைக்கத் தயாராகவிருக்கின்றோம். எவரும் எவரது பதவிகளைப் பறிப்பதற்காக இங்கு செயற்படப் போவதில்லை.
பேரினவாதக் கட்சிகளையும், பேரினவாதக் கட்சிகளுக்குத் துணைபோகின்ற கட்சிகளையும் நிராகரிக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் தமிழ்மக்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தங்கள் வாக்குகள் அளித்திருந்தனர். ஆகவே, வாக்குகளைப் பெற்ற பின்னர் பேரினவாதக் கட்சிகளுக்கு முழுமையாகத் துணைபோகின்ற கட்சியிடம் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு கேட்டு நிற்பது முற்றிலும் தவறானதொரு செயல் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம்.
சில வேளைகளில் வேறு வேறு காரணங்களுக்காகத் தமிழரசுக் கட்சியின் தலைமை தவறான பாதையில் செல்வதை கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டித் தடுக்க வேண்டுமென நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தமிழ்த்தேசியத்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் தமிழரசுக் கட்சி ஈடுபடக் கூடாதெனவும் நாங்கள் வலியுறுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.
![]()