புகழைவிட தன்மானமும் சுயமரியாதையும் பெரிதிலும் பெரிது! …. ஏலையா க.முருகதாசன்.

தம்மைப்: பற்றி ஊர்உலகம் போற்றிப் புகழ்ந்து சொல்ல வேண்டுமென்பதற்காக ஒருசில கலை இலக்கியகர்த்தாக்களே தன்மானத்தையம் சுயமரியாதையையும் இழந்து வருவதைப் பார்க்கிறோம்,அது வெட்கக் கேடானது.
இத்தகையவர்கள் தமக்கான தகுதிகாணலை பரிதாப ரீதியாகவும் தாம் கழிவிரக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்த தமது உடல் மொழியிலிருந்து வார்த்தைப் பிரயோகங்கள் வரையும் தாம் ஏதிலிகள் போல தம்மை விற்று வருகிறார்கள்.
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பப்படும் சீ தமிழின் பெரியவர்களுக்கான பாடல் போட்டியான சரிகமபவில் இடம்பெறுவதற்காக அதற்கான தேர்வில் நேரிடையாக மூவர் இலங்கையிலிருந்தும்,மற்றவர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்தும் கலந்து கொண்டுள்ளனர்.
போட்டியில் பங்குபற்றிய நால்வரில் இருவர் ஆண்கள்,மற்றைய இருவரும் பெண்கள்.
ஆண்கள் இருவரும் தமக்கென்றொரு தனிமனித சுயமரியாதை,தன்மானம் என்பவை இருபப்தை மறந்து தம்மை இப்பாடல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே என்பதில் அதை மிகப்பெரும் இலட்சியமாகக் கொண்டனரோ என்னவோ தெரியாது தம்மிடம் அனைத்துப் போட்டியாளர்களைப் போல சமமான திறமைக்கு மேலாக திறமையிருந்தும் தம்மைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதற்காக தம்மை அடையாளப்படுத்த கழிவிரக்கத்தை முன்னிலைப்படுத்தி தம்மை கீழ்நிலைக்கு கொண்டு போயுள்ளார்கள்
இலங்கையர்களாக இப்போட்டியில் கலந்து கொண்ட நால்வரும் திறமையான பாடகர்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.போட்டி மேடையில் தமது திறமையை வெளிப்படுத்தியமைக்காக அவர்கள் நால்வரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.
அதே வேளை ஆண்கள் தமது வாழ்வியல் சூழலை பரிதாபத்திற்குரியதாக,அதிர்ஸடம் கெட்டவர்கள் என்ற தோரணையிலும் கழிவிரக்கத்திற்கூடாகவும் தாம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதுவும் தகுதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,எம்மீது நடுவர்கள் பாவம் அவர்கள் என இலங்கையில் இயலாமையும்,வறுமையும் போரினால் எற்பட்ட வாழ்வியல் துக்கங்கள் இருப்பதாக அவர்கள் கருத வேண்டுமென்று இதைச் செய்கிறார்கள்.
இப்படியான வெளிப்பாடு அவர்களுக்க மட்டுமல்ல,இலங்கையர்களாகிய அனைவருக்குமே தலைகுனிவுதான்.இதனை முகநூல்களிலும் வேறு வேறு இணையத்தளங்களிலும் பலர் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
இலங்கை வேர் கொண்ட போட்டியாளர்கள் தங்களின் திறமையில் மட்டுமே முழு நம்பிக்கை கொண்டவர்களாக கம்பீரத்துடன் அதனை வெளிப்படுத்த வேண்டும்.
![]()